சீனாவில், ஏழை மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, படிப்புக்காக அரசிடம் உதவிக் கடனைப் பெற விண்ணப்பம் செய்து, படிப்பு கட்டணத்தைப் பெற்று, படிக்கும் போதே வேலை செய்வதன் மூலம் வாழ்க்கை செலவுக்கு சம்பாதிக்கலாம். பல்வேறு வழிமுறைகள் மூலம், ஏழைக் குடும்பத்தின் குழந்தைகளில் பெரும்பாலோர் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள போதிலும், அவர்களுக்கு கல்லூரி வாழ்வில் சில இன்னல்கள் ஏற்படுகின்றன.
2004ம் ஆண்டின் கோடைக்காலத்தில், சீனாவின் சான்சி மாநிலத்தின் கிராமத்திலிருந்து வரும் பான் லின் லீ எனும் மாணவி, மாநிலத்தின் தலைநகரான சி அன் நகரத்திலுள்ள வடமேற்கு தொழில் துறை பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். குடும்பத்தின வறுமையால், பல்கலைக்கழகப் படிப்பை பாதியிலேயே விட வேண்டுமோ என்று, அவர் நினைத்தார். அரசிடம் படிப்புக்காக உதவிக் கடனைக் கோரி, விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிந்து பின்பு, அவர் கொஞ்சம் பணம் கொண்டு சி அன் நகருக்கு சென்றார்.
பின்தங்கிய சிறு கிராமத்திலிருந்து, செல்வம் கொழிக்கும் நகரத்துக்கு சென்ற அவர், உயரமான கட்டிடம், அகன்ற சாலை, அதிகமான வண்டிகள், பொருட்கள் நிறைந்த கடைகள் ஆகியவற்றைக் கண்ட போது மிகவும் வியப்படைந்தார். பல்கலைக்கழகத்தின் பெரிய நூலகம், புதிய விளையாட்டு அரங்கம் முதலியவற்றைப் பார்த்து, அவர் அடைந்த மகிழ்ச்சியை அளவிட முடியாது.
அவர் அறையில் மொத்தம் நான்கு மாணவிகள் தங்கியுள்ளனர். அவரை தவிர, இதர மூன்று பேர் நகரத்திலிருந்து வருவர்கள். நல்ல பொருளாதார வசதி உள்ளவர்கள், அவர்களின் வாழ்க்கை பான் லின் லீயுடன் மிகவும் வேறுபட்டது. ஒரு முறை சாப்பாட்டிற்கு அவர்கள் செய்யும் செலவு, பான் லின் லீயின் ஒரு நாள் வாழ்க்கை செலவை விட அதிகமாகும். சனி, ஞாயிறு தினங்களில், அவர்கள் அடிக்கடி வெளியே சென்று, சேர்ந்து சாப்பிட்டு கடையில் பொருட்களை வாங்குகின்றனர். அதைக் கண்டு, பான் லின் லீக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. அவர் ஒவ்வொரு காசையும் சிக்கனப்படுத்தினால் தான், அன்றாட செலவை சமாளிக்க முடியும். உணவகத்தில் அவர் விலை மிகவும் குறைவான உணவை வாங்கினார். கடைக்கு போய் பொருட்களையும் புதிய சட்டைகளையும் வாங்குவது, அவருக்கு ஒரு கனவாகும்.
இதனால், பல்கலைக்கழகத்தில் படித்த துவக்க காலத்தில், பான் லின் லீ, இதர மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு, வெளியே போக விரும்பவில்லை. அவர், தமது அறையிலேயே முடங்கிக் கிடந்தார்.
|