 சோளக்காட்டிலே குச்சிக்காலும் குச்சிக கையுமாக மொம்மை நிற்பது பார்த்திருப்பீர்கள். விளைந்தகதிர்களைக் கொத்தி தானியமணிகளைப் பொறுக்கி சேதம் ஏற்படுத்த கூட்டங்கூட்டமாகப் பறந்து வரும் பறவைகளை விரட்டுவதற்காக இந்தப் பொம்மைகளை நிறுத்தி வைப்பது விவசாய பெருங்குடி மக்களின் வழக்கம்.
பண்டைய புராணகாலத்திலே குறத்திமகள் வள்ளி திணைக் காட்டிலே ஆலோலம் பாடி பறவைகளை விரட்டினாள். அதாவது ஆரவாரமான ஒலியை எழுப்பினால் சோ சோ என்று பாடினால் பறவைகள் மிரண்டு கலைந்து பறந்தோடிப் போகும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் அண்மையில் சீன அரசு ஒரு நடவடிக்கை எடுத்தது.
பயிர் விளைந்த சாகுபடி நிலங்களி பறவைகள் படையெடுப்பதைப் போலவே விமான நிலையங்களின் ஓடுபாதையில் முளைத்துள்ள புல்வெளியில் இரை பொறுக்குவதற்காகவும் பறவைகள் வந்து குவிகின்றன. விமானங்கள் தரை இறங்கும் போதும் மேலே எழும்பும் போதும் இந்தப் பறவைகள் அபாயத்தை விளைவிக்கின்றன. அவை விமான எஞ்சினுக்குள் புகுந்து விட்டால் அல்லது விமானத்தின் சட்டத்தின் மீது மோதிவிட்டால் அவ்வளவுதான் விமானம் கீழே விழ வேண்டியதுதான். உலகில் 1988ம் ஆண்டுக்குப் பிறகு பறவைகள் விமானத்தின் மீது மோதியதால் சுமார் 200 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் பறவைத் தாக்குதல் கமிட்டி தெரிவித்தது.
பொதுவாக விமானத் திடல்களில் பட்டாசுகளை வெடித்து அல்லது துப்பாக்கியால் சுட்டு பறவைகளை விரட்டுகின்றனர். அப்புறம் சிறுசிறு பறவைகள் கழுகு போன்ற பெரிய கொடிய பறவைகளைக் கண்டு பயப்படக் கூடியவை. இந்த அடிப்படையில் அமெரிக்காவில் கழுகுகளின் ஒலியைப் பதிவு செய்த ஓர் இயந்திரத்தை உருவாக்கி விமானத் திடல்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்கள்.

1997ல் பெய்சிங் விமான நிலையத்தில் பறவைத் தாக்குதல் விமான விபத்து நிகழ்ந்த பிறகு, இந்தக் கருவியை வாங்குவது என சீன அதிகாரிகள் முடிவு செய்தனர். கருவியும் வந்தது. விமான ஓடுபாதையில் வைத்து கழுகு ஒலி ஒலிப்பரப்பப்பட்டது. ஆனால் பயனில்லை. காரணம், அமெரிக்கக் கழுகுகளின் மிரட்டல் ஒலியை சீனப் பறவைகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அமெரிக்க கழுகுகளின் ஆங்கிலக் கூச்சலுக்கு அவை டிமிக்கி கொடுத்து விட்டன. மேலும் இது நம்ம ஊர் கழுகு இல்லை என்ற செய்தி எல்லாப் பறவைகளுக்கு பரவிவிடவே. கூட்டம் கூட்டமாக அவை வந்து இரை எடுக்கத் தொடங்கின.
இயற்கை எதிரிகளின் ஒலிக்கும் செயற்கை எதிரிகளின் ஒலிக்கும் இடையே வேறுபாட்டைக் காணும் அறிவு பறவைகளுக்கு இருக்கின்றது என்று பெய்சிங் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியரும் பறவைகள் நிபுணருமான சான் ச்சுன் வுவான் கூறுகின்றார். ஆகவே, கழுகு படம் வரையப்பட்ட பெரிய தட்டிகளை விமான ஓடுபாதையில் அதிகாரிகள் வைத்துள்ளனர்.
பறவைகளை விரட்டும் போர் அவ்வளவு சீக்கிரமாக முடிந்து விடாது என்கிறார் பெய்சிங் விமான நிலைய அதிகாரி மா ருச்சான்
|