
சீனத் தேசிய கூடைப் பந்தாட்ட வீராங்கனைகளான சுய் பெ பெயும் மியொ லி ஜேயும் மே 20ஆம் நாள் அமெரிக்காவின் WNBA SACRAMENTO MONARCHS அணியில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்துள்ளனர். அவர்கள் 21ஆம் நாள் 2005ஆம் ஆண்டுக்கான WNBA போட்டியில் கலந்துகொள்வார்கள். WNBA கூடைப் பந்தாட்டப் போட்டி, மரபு வழி போட்டியும் பருவத்துக்குப் பிந்திய போட்டியும் என பிரிக்கப்படுகின்றது. மொத்தம் 13 அணிகள் இப்போட்டியில் கலந்துகொள்ளும்.
சீனப் பல்கலைக்கழக மாணவர் கூடைப்பந்து போட்டி 20ஆம் நாள் நிறைவடைந்தது. இறுதிப் போட்டிக்கான 2ம் ஆட்டத்தில் சீன மக்கள் பல்கலைக்கழக மாணவர் அணி 97-96 என்று புள்ளிக்கணக்கில் ச்சிங் ஹுவா பல்கலைக்கழக மாணவர் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.
பேஸ்பால் (BASEBALL) 2005 ஆசிய பேஸ்பால் சாம்பியன் பட்டப் போட்டி 22ஆம் நாள் ஜப்பானில் நிறைவடைந்தது. சீன அணி 4-3 என்ற புள்ளிக் கணக்கில் தென் கொரிய அணியைத் தோற்கடித்து மூன்றாம் இடம்பெற்றது. ஜப்பானிய அணி 11-2 என்ற புள்ளிக் கணக்கில் சீனத் தைபெய் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இப்போட்டியில் முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகள், இவ்வாண்டு செப்டம்பர் திங்களில் நெதர்லாந்தில் நடைபெறும் உலக கோப்பைக்கான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன.
இலக்கு சுடும் போட்டி உலக கோப்பைக்கான இலக்கு சுடும் போட்டியின் ரோம் சுற்று 22ஆம் நாள் நிறைவடைந்தது. சீன வீரர்கள் மொத்தம் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களைப் பெற்றனர். மகளிருக்கான பல திசைகளில் பறக்கும் தட்டுகளைச் சுடும் போட்டியில் சீனாவின் பழைய வீராங்கனை கௌ ஓ 94 முறை இலக்கு தவறாமல் தட்டைச் சுட்டு, உலக சாதனை நிகழ்த்தினார். இந்த போட்டிக்குப் பின், சீன வீரர்கள் இத்தாலியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தட்டு சுடும் உலக சாம்பியன் பட்டப் போட்டியில் கலந்துகொள்வார்கள்.

டென்னிஸ் பிரெஞ்சு டென்னிஸ் ஒப்பன் போட்டி மே 23ஆம் நாள் துவங்கியது. சீன வீராங்கனை பெங் சுவய் முதலாம் சுற்றில் 2-0 என்ற செட் கணக்கில் பிரெஞ்சு வீராங்கனை MAILYNE ANDRIEUX ஐத் தோற்கடித்தார். இப்போட்டியில் கலந்துகொள்ளும் சீன வீராங்கனை செங் ஜெ கடந்த ஆண்டில் நடைபெற்ற இந்த ஒப்பன் போட்டியில் முதல் 16 இடங்களில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் லீ திங்-சுன் தியன் தியன் மகளிருக்கான இரட்டையர் சாம்பியன் பட்டம் பெற்ற பின்னர், சீன டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் போட்டியாற்றல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
|