
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தொண்டர் படையை உருவாக்கும் பணி ஜுன் 5ஆம் நாள் அதிகாரபூர்வமாக துவங்கியது. இதற்காக பெய்சிங் வந்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகேயும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் கமிட்டித் தலைவர் லியூ ச்சியும் துவக்க விழாவில் கலந்துகொண்டனர். இந்தத் தொண்டர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் உண்மையான தூதுவர்கள். ஒலிம்பிக் எழுச்சியை பரப்பி, உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு நியாயமான, இணக்கமான போட்டிச் சூழலை உருவாக்கித் தரும் பொது நோக்கத்தை அவர்கள் கொண்டுள்ளனர். அன்று, ஐ.நா பொது செயலாளர் அன்னானும் துவக்க விழாவுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார்.

சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் தலைவரும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் கமிட்டியின் நிர்வாக தலைவருமான லியூ பெங் ஜுன் திங்கள் 5ஆம் நாள் பெய்சிங்கில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகேயைச் சந்தித்துப் பேசினார். 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிச்சயம் வெற்றி பெறும் என்று ரோகே நம்பிக்கையோடு கூறினார். சீன அரசு மற்றும் பல்வேறு துறைகளின் பெரும் ஆதரவுடன், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அனைத்து ஆயத்த பணிகளும் மிகவும் சீராக நடைபெற்று வருகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வழிக்காட்டல் மற்றும் முன்மொழிவுகளுடன் பெய்சிங் மாநகரம் பணிகளை மேலும் செவ்வனே நிறைவேற்றும் என்று லியூ பெங் குறிப்பிட்டார்.
2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக மொத்தம் சுமார் ஒரு லட்சம் தொண்டர்கள் திரட்டப்படுவார்கள். அவர்களில் 70 ஆயிரம் பேர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கும் 30 ஆயிரம் பேர் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கும் சேவை புரிவார்கள். இந்தத் தொண்டர் படையில் முக்கியமாக பெய்சிங் பிரதேசத்திலுள்ள உயர் கல்வி நிலையங்களின் மாணவர்கள், பெய்சிங் குடி மக்கள், சீனாவின் இதர இடங்களின் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த பொது மக்கள், ஹாங்காங் மகௌ மற்றும் தைவான் உடன்பிறப்புகள், வெளிநாடுகளில் வாழும் சீனர்கள், சர்வதேச நண்பர்கள் ஆகியோர் இடம் பெறுகின்றனர். தொண்டர்களைச் சேர்க்கும் பணி 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் தொடங்கி 2008ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் நிறைவடையும்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும் பீச் வாலிபால் போட்டியை பெய்சிங் மாநகரிலுள்ள சௌ யாங் பூங்காவில் நடத்தலாம் என்ற முன்மொழிவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகரித்துள்ளது. அண்மையில் பெய்சிங்கில் நிறைவடைந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒருங்கிணைப்புக் கமிட்டியின் 4வது முழு அமர்வில் இது குறித்து,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் சர்வதேச வாலிப்பால் சம்மேளனமும் உடன்பாடு கண்டன. இந்த போட்டி நடைபெறும் இடத்தை மாற்றலாம் என்ற பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டு கமிட்டி தெரிவித்த முன்மொழிவை அவை அங்கீகரித்தன.
|