இந்தியாவைப் புகழும் வேளையில், சீனாவைப் பற்றி அவநம்பிக்கையோடு பேசி, சீனாவின் வளர்ச்சியை சீர்குலைக்க முயலும் சில சர்வதேச சக்திகள் இருக்கத்தான் செய்கின்றன. இதனால் சில முதலீட்டாளர்களின் கவனம் சீனாவிடம் இருந்து விலகக் கூடும். எதிர்கால முதலீடு பற்றி முடிவெடுக்கும் போது, இரண்டு ஆசிய வல்லரசுகளிடையே எதைத் தெரிந்தெடுப்பது என்று முதலீட்டாளர்கள் விருப்பு வெறுப்பின்றி ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்தியாவும் சீனாவும் அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காக அவற்றிடம் உள்ள ஆற்றலையும் கண்டு இந்த இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்றனவோ என்று அன்னியர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டனர். ஆனால் இந்த இரண்டு நாடுகளின் பொருளாதாரங்களும் ஒன்றுக்கு ஒன்று துணையாக இருக்கக் கூடியவை. இவற்றுக்கு இடையே பொட்டி என்று சொல்வதை விட, பொது அக்கறையும் அதிக ஒத்துழைப்பும் உள்ளன என்றே செல்ல வேண்டும்.
இந்தியாவின் சேவைத் தொழிலுக்கு ஒரு நல்ல வாய்ப்பை சீனாவின் சந்தை வழங்குகிறது. சீனாவின் பொருள் தயாரிப்புத் திறன் இந்திய நிறுவனங்களைக் கவர்ந்துள்ளன.
உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சீனாவைக் காட்டிலும் இந்தியாவின் உபரி வர்த்தகம் அதிகரித்து விட்டதால், சீனா ஒரு போட்டி நாடு என்ற அச்சம் இந்தியாவின் மனதிலிருந்து படிப்படியாகக் குறைந்து விட்டது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி தனக்குப் பயன் தரும் என்பதை இந்தியா புரிந்து கொண்டது.
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்து மக்கள் 25 கோடிக்கு அதிகமாக உள்ளனர். இவர்களினால் உருவாகியுள்ள பிரம்மாண்டமான சந்தை, சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஒரு நல்ல விற்பனை வாய்ப்பை வழங்கியுள்ளது.
உலகச் சந்தையுடன் எவ்வாறு இணைவது என்பதையும், தனியார் தொழில் நிறுவனங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பதையும் இந்தியாவிடம் இருந்து சீனா கற்றுக் கொள்ளலாம். சீனா தனது பெரிய உள்நாட்டுச் சந்தையைப் புறக்கணிக்காமல் அதை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். மேலும், இந்தியா, சீனா இருநாடுகளுமே தங்களது தொழில் நிறுவனங்கள் பரஸ்பர நாடுகளில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்தலாம்.
இரு பெரும் வளரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும், உளரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் போது, தங்களது அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து, உலக அரங்கில் தங்களது நிலையை உயர்த்திக் கொள்ளலாம்.
உலகின் இரண்டு மாபெரும் சக்திகளான இந்தியாவும் சீனாவும் தங்களது பொருளாதார வளர்ச்சியில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதால், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருக்கின்ற இந்த இருநாட்டு மக்கள் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் எல்லா மக்களுமே பொதுவாக வளம் பெற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
|