 உலகெங்கும் சுற்றுச் சூழல் தூய்மை இயக்கம் பரவுவதற்குக் காரணமாக இருந்த உலகப் புவி தினத்தை தோற்றுவித்த அமெரிக்கர் கேலார்டு நெல்சன் அண்மையில் தமது 89 வது வயதில் காலமானார். முதலாவது உலகப் புவி தினத்தை 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் இவர் கொண்டாடத் தொடங்கிய பிறகு 35 ஆண்டுகள் கழித்து இன்றைக்கும் உலகெங்கும் உலகப் புவிதினத்தன்று மக்கள் பலர் மரம் நடுகின்றனர். குப்பை கூளங்களை அகற்றுகின்றனர். சுற்றுப் புறத் தூய்மை பற்றிப் பிரச்சாரம் செய்கின்றனர்.
அமெரிக்க செனட் அவை உறுப்பினராக மூன்று பதவிக் காலத்திற்கு இவர் பதவி வகித்தபோதும் விஸ்கான்சின் மாநில ஆளுநராக இருந்த போதும் அமெரிக்காவில் பல சுற்றுச் சூழல் பராமரிப்புக் கொள்கைகள் உருவெடுக்க இவர் காரணமாக இருந்திருக்கின்றார். அவற்றிலே மிக முக்கியமானது 3380 கி.மீ தொலைவுள்ள அப்பலாச்சியன் மலைப் பாதையைப் பேணிக்காத்தது. தேசிய மலை ஏற்ற முறை ஒன்றை உருவாக்கியது. அனைத்துக்கும் சிகரமாக உலகப் புவிதினத்தை உருவாக்கியது.
வியத்நாம் போருக்கு எதிராகப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென இவர் மனதில் ஒரு பொறி தட்டியது. சுற்றுச் சூழல் பராமரிப்பு பிரச்சாரம் ஏன் செய்யக் கூடாது என்கிற எண்ணம் தலைதூக்கியது. 1969 செப்டம்பரில் சியாட்டல் நகரில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது கேலார்டு நெல்சன் இதை அறிவித்தார். உடனே சூடு பிடிக்கத் தொடங்கியது. 1970ம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று இவர் முதலாவது புவிதினம் கொண்டாடிய போது உலகெங்கும் இரண்டு கோடி மக்கள் திரண்டனர். நியூயார்க் நகரின் ஐந்தாவது அவெந்யூவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு அணிவகுத்து சென்றனர். அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டமே ஒத்திபோடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுச் சூழல் தூய்மைப் பேரணியில் பங்கேற்றனர். குறைந்து 2000 பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் உலகப் புவிதினம் கொண்டாடினார்கள். அன்று நியூயார்க்கில் தோன்றிய சிறு பொறி மாபெரும் காட்டுத் தீயாக உலகெங்கும் பரவியது. ஆனால் அந்தக் காட்டுத்தீ உலகைச் சுட்டெரிக்கவில்லை. மாறாக பசுமைமயமாக்கியது.
கேலார்டு நெல்ஸன் உலக சுற்றுச் சூழல் தூய்மை இயக்கத்திற்கு ஆற்றிய அரும் பணிகளைப் பாராட்டி அன்றைய அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் 1995ல் அதிபரின் சுதந்திரப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தார்.
புவி தினத்தின் தந்தை என்ற முறையில் அதைத் தொடர்ந்து உருவான சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம் காற்றுத் தூய்மைச் சட்டம் தண்ணீர் தூய்மைச் சட்டம், பாதுகாப்பான குடிநீர் சட்டம் ஆகியவற்றுக்குத் தாத்தாவாக கேலார்டு நெல்சன் திகழ்கின்றார் என்று பில் கிளிண்டன் தமது பாராட்டுரையில் கூறினார்.
ஒரு நாட்டின் செல்வமே காற்று, தண்ணீர், காடுகள், இயற்கை அழகு, வனவிலங்குகளின் உறைவிடம் ஆகியவைதான் இவற்றைப் பறித்து விட்டால் பாலை நிலம்தான் மிச்சமாக இருக்கும் என்று விஸ்கான்சின் சட்டமன்றத்தில் பேசுகையில் கேலார்டு நெல்சன் கூறினார். உண்மைதானே.
|