• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-17 17:34:16    
பெற்றால்தான் பிள்ளையா?

cri

16 தம்பிகள், 98 புதல்வர்கள், 6 புதல்விகள், 26 பேரப்பிள்ளைகள் ஆக மொத்தம் 146 குழந்தைகள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தங்களது 68 வயகு அன்னைக்கு 'ஹேப்பி பர்த் டே' சொன்ன போது, அந்த அன்னை ஹான் யாச்சின் பூரித்துப் போனார். கண்களில் கண்ணீர் திரண்டது. அது அந்த அன்னைக்குப் பிறந்த நாள் அல்ல. ஆனாலும், 146 குழந்தைகளும் ஒவ்வோர் ஆண்டும் அன்னையர் தினத்தை ஹான் யாச்சினின் பிறந்த நாளாகக் கொண்டாடுகின்றனர்.

68 வயதுக்குள் 146 குழந்தைகளை அரவணைத்து அன்பு காட்டும் இந்த அன்னையின் பாசக் கதையைக் கொஞ்சம் கேளுங்கனேன். இந்த கதை 1983ஆம் ஆண்டின் நடுக்கும் குளிரில் ஒருகாலை நேரத்தில் தொடங்கியது. வட சீனாவின் ஷாங்சி மாகாணத் தலைநகரான தய் யுவான் நகரில், ஆள் குறைப்பினால் வேலை இழந்த 45 வயது ஹான் யாச்சின், தம்மைப் போலவே வேலை இழந்த சிலருடன் கூட்டுச் சேர்ந்து ஒரு சிற்றுண்டி விடுதியைத் தொடங்கினார்.

ஒரு நாள் காலையில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்த போது, கடைக்கு வெளியே நான்கு சிறுவர்கள் நிற்பதைக் கண்டார். கடைக்குச் சாப்பிட வருகிற ஒவ்வொருவரும் வெளியேறும் போது, அவர்கள் விட்டுச் செல்லும் எச்சில் பண்டங்களை தின்ன இந்தச் சிறுவர்கள் 'நான் முந்தி நீ முந்தி' என்று போட்டிபோடுவதைப் பார்த்தார். பரிதாபமாக இருந்தது. ஒன்றும் சொல்லவில்லை. அவர்களை விரட்டியடிக்கவும் இல்லை. சில மணி நேரங்கள் சென்றன. திடீரென அந்த நான்கு சிறுவர்களும் ஹான் யாச்சின் முன்னால் வந்து மண்டியிட்டு 'அம்மா, எங்களுக்கு ஏதாவது வேலை கொடுங்க' என்று கெஞ்சினார்கள்.

அந்த நான்கு சிறுவர்களும் இளங் குற்றவாளிகள். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து அப்போதுதான் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். பசியினால் உணவுப் பிச்சை கேட்க வந்த சிறுவர்கள், ஹான் யாச்சின் காட்டிய சகிப்புத்தன்மையை கண்டு, துணிச்சல் பெற்று, வேலை கேட்டு கெஞ்சினார்கள். "எங்கு குடும்பம் எங்களை விரட்டி விட்டது. பக்கத்து வீட்டுக்காரர்களும் எங்களை இழிவுபடுத்தினார்கள்" என்று நினைவு கூர்ந்தான் அந்த நான்கு சிறுவர்களில் மூத்தவனான வாங் யுவே ஹு. "நான் ஒரு பெண். நான் ஒரு தாய். இந்த ஏழை பையன்கள் பசியால் வாடுவதை எப்படி பார்த்துக் கொண்டிருப்பது? அதனால் விரட்டவில்லை" என்றார் ஹான்.

"அம்மா எங்களை ஏற்காமல் விரட்டியடித்திருந்தால் நாங்கள் என்ன செய்திருப்போம்? ஏதாவது வங்கியைக் கொள்ளை அடித்திருப்போம். வேறு என்ன செய்ய முடியும்?" என்று கூறிய வாங் யுவே ஹு, இப்போது தய் யுவான் நகரின் ஒரு நட்சத்திர சமையல் கலைஞர். "எல்லோரும் சொல்வது போல இந்த சிறுவர்கள் மோசமானவர்கள் அல்ல. யாராவது ஒரு வாய்ப்பு கொடுத்தால் நல்லவர்களாக மாறுவார்கள்.

எல்லோரும் கைவிட்டால் மீண்டும் சிறைக்குத்தான் போவார்கள்" என்று கூறி அவர்களை அரவணைத்துக் கொண்ட ஹான் யாச்சின், இந்த 22 ஆண்டுகளில், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஏராளமான குழந்தைகளை தனது அன்புப் பிடிக்குள் வைத்துக் கொண்டார். மொத்தம் 146 குழந்தைகள். இவர்களில் சிலருக்கு ஹானை விட வயது அதிகம். ஆனாலும் எல்லோருமே 'அம்மா' என்றுதான் ஹான் யாச்சினை அழைக்கின்றனர். மூத்த குழந்தைகளை தம்பி என்றுதான் ஹான், அழைக்கின்றார். ஆனாலும் தாய்ப் பாசத்துக்காக தவித்து அந்த எல்லாக் குழந்தைகளுமே பிடிவாதமாக அம்மா என்றே கூப்பிடுகின்றனர்.

கல்கத்தாவில் தொழு நோயாளிகளிடையே தொண்டு புரிந்த அன்னை தெரஸாவை இந்த உலகமே அம்மா என்று அழைக்க வில்லையா? 146 குழந்தைகளுடன் இவ்வளவு பெரிய குடும்பத்தைக் கட்டி இழுத்துச் செல்வது கஷ்டமாக இல்லையா? தொடக்கத்தில் அடிக்கடி பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. குழந்தைகளுக்காகத் தனது கடையில் இருந்தே பங்காளிகளுக்கு தெரியாமல் உணவைத் திருடினார் ஹான். உணவு விடுதியின் மேஜைகளை ஒன்றாக இழுத்துப் போட்டு குழந்தைகளுக்கு படுக்கை உண்டாக்கினார். குளிர்காலத்தில் அவர்களுக்கு வேண்டிய கம்பளி விரிப்புக்களைத் தனது வீட்டில் இருந்தே கொண்டு வந்து கொடுத்தார். கல்வி கற்பிப்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. வயிற்றுப்பாட்டுக்கே தாளம் போடும் போது, புத்தகங்கள் வாங்க பணத்துக்கு எங்கே போவது?

இதற்கும் ஒரு புதுமையான வழி கண்டுபிடித்தார். ஹான் யாச்சின். குழந்தைகள் அனைவரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு மிகவும் இழிவான வேலைகளைக் கூடச் செய்தார். பிணங்களை சுடுகாட்டுக்கு தூக்கிச் சென்று சம்பாதித்தார். சவ அறைகள் கட்டிச் கொடுத்தார். காய்கறி தோட்டத்தில் காவல் புரிந்தார். இவ்வளவு கஷ்டங்களும் எதற்காக? கஷ்டப்பட்டால்தான் வாழ்க்கையில் சுகம் என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்தியதோடு, சம்பாதித்த பணத்தைக் கொண்டு பாடப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். சட்டப் புத்தகங்கள் வாங்கி, குழந்தைகளோடு சேர்ந்து தாமும் சட்டம் பயின்றார். யாருமே கெட்டவனாகப் பிறப்பதில்லை.

இந்தக் குழந்தைகள் சட்டப் புத்தகங்களைப் படித்து, சமூகத்தில் எப்படி நன்றாகப் பழகுவது என்பதைத் தெரிந்து கொள்கின்றனர். ஒரு வேலையை நல்ல மனிதனால் மட்டுமே நன்றாக செய்ய முடியும் என்று தனது குழந்தைகளுக்கு அடிக்கடி போதிக்கிறார் ஹான் யாச்சின்.