புழுக்கம் மிகுந்த ஒரு கோடைகாலம். வெய்யிலின் சூட்டில் சீனத்துப் பெருஞ்சுவரில் நடக்க முடியாமல் மென்மையான பாதங்கள் திண்டாட, நிழல் தேடி ஓடிக் கொண்டிருந்தனர் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக. பல நிறங்கள், பல வடிவங்கள், பல உடைகள், பல மொழிகள்—அலை அலையாக பதாலிங் வாசல் வழியாக சுற்றுலாப் பயணிகள் பெருஞ்சுவருக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். பல அயல் நாட்டவர்களின் கும்பலுக்கு நடுவில் ஒரு தமிழர் கூட்டமும் இருந்தது.
முதல் தடவையாக வெளிநாட்டுக்கு வந்த ஒரு மருட்சியில், இயல்பாகத் தோற்றமளிக்க முயன்றனர். நுழைவுச் சீட்டு வாங்கிய கையோடு பேசம் பேரத் தெரியாமல் ஒரு யுவான் மூங்கில் தொப்பியை 10 யுவான் கொடுத்து வாங்கி மாட்டியபடி, வகை வகையான கருப்புக் கண்ணாடிகளுக்குள் தமிழ்த் தோற்றத்தை மறைத்த அந்தக் குழுவில் 5 பேர் இருந்தனர். மூன்று பெண்கள். இரண்டு ஆண்கள். எல்லோருமே சமவயது—கனவுகள் வாட்டி வதைக்கும் வாலிப வயது. அவர்களிலே ஒருத்தி மட்டும் வித்தியாசமாகத் தெரிந்தாள் சளசளவென பேசிக் கொண்டே—அவள்தான் சரளா—சளசள சரளா. சுண்டெலி போல துள்ளினாள். மற்றவர்களை எள்ளி நகையாடினாள். தனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மற்றவர்களை எரிந்து விழுந்த போது சிடுசிடு சிங்காரியாகத் தெரிந்தாள். மற்ற நால்வருக்கும் துள்ளும் இளமைமதான். ஆனால் தோற்றம் மட்டுமே வித்தியாசம். இருவர்—ஒரு ஆதாமும் ஏவாளும்—ஒரேமாதிரி நரைத்த தலையோடு இருந்தனர். பாவம் இளநரை. அவர்களுடைய பெயரும் தோற்றத்துக்கு ஏற்றமாதிரி வெள்ளைச் சாமி, வெள்ளையம்மான். மற்ற இருவருக்கும் கருகரு கூந்தல். பெயரும் கருப்பசாமி—கருப்பாயி.
பெருஞ்சுவரில் ஒருவசதி. அரை கிலோமீட்டருக்கு ஒரு மாடம் அந்தக் காலத்திலேயே கற்களினால் கட்டி வைத்திருக்கிறார்கள். மாடத்தில் நான்கு சிறு அறைகள்—நான்கு திசைகளை நோக்கிய சாளரங்களுடன். அந்தச் சாளரத்தின் வழியே எட்டிப்பார்த்தால் குளுகுளு எனக் காற்று தலைப் பிய்க்கும். கீழே குதித்தால் கால்கை ஒடியக் கூடிய ஆழத்தில் பாறைகளுக்கு நடுவில் மரஞ்செடி-கொடிகள் தலையாட்டிக் கொண்டிருந்தன. மலைத் தாவரங்களின் தனிவாசம் மூக்கைத் துளைத்தது.
நம்ம தமிழர் கூட்டம் வெய்யிலின் வேகத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு மாடத்திற்குள் நுழைந்தது. இவர்கள் வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் போகும் பாதையில் இருந்து விலகிச் செல்லும் பிரிவில் சென்றதால், மற்றவர்கள் குரல் எட்டாத தொலைவில் புள்ளிகளாகத் தெரிந்தனர். தனது வழக்கத்தை விடாமல் சிடுசிடுத்துக் கொண்டிருந்தான் சளசள சரளா.
|