• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-07 21:54:10    
கடவுள் தந்த கரண்டி

cri
தில்லியில் இருந்து பெய்ச்சிங்கிற்கு வந்து கொண்டிருந்த போது, நான்ஜிங் பல்கலைக்கழக சமூக இயல் பேராசிரியர் என்னோடு விமானத்தில் பயணம் செய்தார். இந்திய-சீன சமூகப் பழக்க வழக்கங்கள் பற்றி உரையாடியபடியே, விமானப்பயணம் ஊட்டிய சலிப்பை மறந்து கொண்டிருந்தோம். சீனர் ஒருவரைப் பார்த்ததும் 'நி ஹாவ்' என்று சொல்லுங்கள். அவர் ஏதாவது உங்களுக்கு உதவி செய்தால் 'சியே சியே' என்று நன்றி சொல்லுங்கள். நீங்கள் செய்யும் உதவிக்கு அவர் தாங்க் யூ! என்று சொன்னால் 'புசியே! புசியே!' என்று சொல்லுங்கள் என்று சீனச் சமூகப் பழக்கங்கள் பற்றி விரிவாக விளக்கி விட்டு கடைசியில் ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போட்டார். 'நீங்க எப்படி உணவு சாப்பிடுவீர்கள்?' என்று கேட்டார். 'ஏன்? இதிலென்ன சந்தேகம்? கையால்தான்' என்றேன். 'கையாலா?' என்றார் சற்றுத் தயக்கத்துடன். 'ஆமா: சாதமும், குழம்பும் போட்டுப் பிசைந்து சாப்பிடுவேன்.' என்றேன். 'உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஜப்பானியர்கள் சாதத்தையும், குழம்பு கறிகளையும் தனித்தனியாகத் தான் எடுத்துச் சாப்பிடுவார்கள். இரண்டையும் போட்டுப் பிசைவது அரிசிக்கு இழைக்கப்படும் அவமானம் என்று ஜப்பானியர்கள் கருதுகிறார்கள்," என்றார் பேராசிரியர். சரிதான்! சோறு, கறி இவற்றைத் தனித்தனியே எடுத்துச் சாப்பிடுவதற்கு குச்சி தேவை தான். ஆனால் பிசைந்து சாப்பிட கடவுள் தந்த கரண்டியான கைவிரல்கள் இருக்கிறதே' என்றேன் சிரித்தபடியே. "எப்படியோ, சீனாவில் போய் இறங்கியதும் முதல் வேலையாக குச்சியால் சாப்பிடக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் சீனர்கள் உங்களை இளப்பமாக நினைப்பார்கள்" என்று கூறிவிட்டு சாங்கையில் விடை பெற்றுச் சென்றார் பேராசிரியர். சீனாவில் முதல் விருந்து சகோதரி கலையரசி கொடுத்தார். சீனச் சம்பிர தாயப்படி முட்டை பொறித்த சோறு, கோழிக்கறி, பன்றிக்கறி, மாட்டுக் கறி, அவரை, தோஃபு, ... இப்படி வகை வகையாக வந்து மேஜையில் உட்கார்ந்தன. எல்லாவற்றுக்கும் பக்கத்தில் அப்பாவியாக வந்து உட்கார்ந்தன இரண்டு குச்சிகள். என்னைப் பார்த்து 'மாட்டிக் கொண்டாயா?' என்று இளக்காரமாகச் சிரித்தன. எனது திண்டாட்டத்தைப் பார்த்த கலையரசி சிரித்தபடியே, குச்சிகளை உறையில் இருந்து பிரித்துக் கொடுத்தார். 'சரி, ஒருகை பார்த்து விடுவோம்,' என்று அசட்டுத் துணிச்சலுடன் குச்சிகளை கையில் எடுத்தேன். ஒரு கஷ்டம். இரண்டு குச்சிகளையும் சமநீளத்தில் சேர்த்துப் பிடிக்க முடியவில்லை. அப்படியே சேர்த்துப் பிடித்தாலும், பிரியமான கோழிக்கறியைப் பற்றி வாய்க்கு கொண்டு போவதற்கு முன் பிடிதளர்ந்து கீழே விழுந்து விட்டது. இவ்வளவு பெரிய கோழிக்கறித் துண்டையே எடுக்க முடியாத போது, சிறு சோற்றுப் பருக்கையை எப்படி எடுக்கப் போகிறேன்? ஆகவே குச்சிகளை அப்பால் வைத்தேன். உடனே கலையரசி, "அப்புறமா முயற்சி பண்ணலாம்," என்று சொல்லிவிட்டு, பணிப் பெண்ணிடம் 'சாவ்பாஸ்' என்றார். அவரும் ஒரு மாதிரியாகச் சிரித்தபடியே கத்தி, கரண்டி, முள்கரண்டி கொண்டு வந்து வைத்தார். சிரித்தது அவர்கள் மட்டுமல்ல, சில மாதங்கள் கழிந்து பெய்ச்சிங் வந்த நண்பர் வி. டி. ரவிச்சந்திரனும் குச்சிகள் என்னைப் படுத்தும் பாட்டைப் பார்த்து விட்டு இளப்பமாகச் சிரித்தபடியே, குச்சிகளுடன் அவர் புகுந்து விளையாடினார். அவருக்கு மலேசிய வாழ்க்கை அனுபவம் கைகொடுத்தது. எனக்கு?