கிராமத்தில் இருந்து நான் தலைநகரத்துக்கு வந்து ஆறாண்டுகள் நழுவிக் கொண்டு ஓடி விட்டன. இந்தக் காலத்தில் நான் ஏகப்பட்ட அரசு விவகாரங்களைப் பார்த்து விட்டேன். கேள்விப்பட்டு விட்டேன். ஆனாலும் எதுவுமே என்னை வெகுவாகக் கவரவில்லை. அவற்றினால் என்னில் என்ன தாக்கம் ஏற்பட்டது என்று சொல்ல வேண்டுமானால், எனது கோபம்தான் அதிகரித்தது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், இரக்கமற்றவனாக மாறிக் கொண்டிருந்தேன்.
எனினும், ஒரு சம்பவம் மட்டும் என்னை எனது கோபத்தில் இருந்து விழித்தெழச் செய்தது. ஆகவே அதை இன்றைக்கும் மறக்க முடியவில்லை.
1917ஆம் ஆண்டு குளிர்காலத்தில் அது நிகழ்ந்தது. கடுமையான வாடைக் காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆயினும் பிழைப்பு நடத்த வேண்டுமே. அதனால் விடிகாலையிலேயே வெளியே வந்துவிட்டேன். சாலையிலே ஒரு சிடுகுஞ்சி கூட இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு ஒரு ரிக்ஷாவைப் பிடித்து தெற்கு வாசல் பகுதிக்கு போகச் சொன்னேன். அப்போது காற்று கொஞ்சம் தணிந்திருந்தது. புழுதி எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு, சாலை துடைத்துவிட்டது போல் இருந்தது. ரிக்ஷாக்காரன் வேகமாக ஓடினான். தெற்கு வாசலை நாங்கள் நெருங்கிக் கொண்டிருந்த போது, திடீரென யாரோ சாலையில் குறுக்கே வந்து ரிக்ஷாவில் மோதி கீழே விழுந்து விட்டார்.
அது ஒரு பெண். வயதானவள். நரை முடியும், கந்தலாடையும் கொண்ட அவள் நடை பாதையில் இருந்து திடீரென எங்கள் முன்னால் வந்து விட்டாள். ரிக்ஷாக்காரன் விலகி ஓடிய போதிலும், அவளுடைய கிழிசல் சட்டை பித்தான் போடப்படாமல் காற்றில் பறந்து கொண்டிருந்ததால் ரிக்ஷா தண்டில் மாட்டிக் கொண்டது. நல்ல வேளையாக ரிக்ஷாக்காரன் கடந்து விட்டான். இல்லாவிட்டால் அவளுக்கு படு காயம் ஏற்பட்டிருக்கும்.
அவள் தரையில் கிடந்தாள். ரிக்ஷாக்காரன் நின்றுவிட்டான். கிழவிக்கு காயம் பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மேலும் நடந்ததை நேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை. ஆகவே ரிக்ஷாக்காரனின் இந்த இரக்கம் எனக்குப் பிடிக்கவில்லை. வீணாக அவனை வம்பில்மாட்டிவிடும். எனக்கும் தாமதமாகும்.
"சரி, சரி...புறப்படு, போவோம்."
அவன் என்னை லட்சியப்படுத்தவில்லை. ஒரு வேளை நான் சொன்னது அவன் காதில் விழவில்லையோ என்னமோ! அவன் ரிக்ஷா தண்டைக் கீழே வைத்துவிட்டு, அந்த முதியவளைத் தூக்கி நிறுத்தினான். ஒரு கையால் அவளைத் தாங்கிப் பிடித்தபடியே, "ஒண்ணும் அடிபடலையே" என்று கேட்டான்.
"எனக்கு வலிக்குது."
|