• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-09 16:52:40    
சாப்ஸ்டிக்ஸ்

cri

எனது மனக்கவலையை மாற்றும் மருந்தாக அண்மையில் சைனா டெய்லி நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் Zou Han Ru என்ற பத்திரிகையாளர். காட்டுவளம் குறைந்து வரும் இந்தக் காலத்தில் இன்னமும் குச்சிகளைப் பயன்படுத்தி சாப்பிடுவது சரிதானா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அவர் வழியில் சிறிது ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். சீனாவில் முதன் முதலில் எப்போது சாப்பிடுவதற்குக் குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்?

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவைப் பரிமாறினால் சூடு ஆறிவிடுமே என்பதற்காக, மரங்களில் இருந்து விழுதுகளை ஒடித்து, அவற்றால் உணவை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். இந்த விழுதுகளைத்தான் இன்றைய சாப்ஸ்டிக்குகளின் தந்தை என்று சொல்ல வேண்டும்.

காலப் போக்கில், இந்த சாப்ஸ்டிக் கொரியாவுக்கும், ஜப்பானுக்கும், வியத்நாமுக்கும் பரவியது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிழக்காசிய நாடுகளில் மரத்தில் இருந்தும், மூங்கிலில் இருந்தும் உணவுக் குச்சிகளைத் தயாரித்தனர். கொஞ்சம் வசதிபடைத்த பணக்காரர்கள் எலும்பு, தந்தம், வெள்ளி ஆகியவற்றாலும் உணவுக் குச்சிகளைச் செய்து வைத்துக் கொண்டனர். ஆரம்பகால கிழக்காசிய நாகரிகத்தில், வனவளம் மிகுந்து இருந்ததால் உணவுக்குச்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது, இப்போது?

காலம் மாறி விட்டது. காடுகள் நிறைய இல்லை. நிலப்பரப்பு பசுமையாக இல்லை. நீரூற்றுகள் வற்றி விடுகின்றன. மக்கள் தொகையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்படிப்பட்ட நிலையில், நமது சாப்ஸ்டிக் பசிக்காக காடுகளைத் தின்று கொண்டிருக்கிறோம் என்று வருத்தத்துடன் கூறுகிறார், பத்திரிகையாளர் Zou Han Ru.

முன்பெல்லாம், சாப்பிட்டு முடித்ததும் உணவுக் குச்சிகளைக் கழுவி எடுத்து வைத்து திரும்பவும் பயன்படுத்தினார்கள். இப்போதோ, உண்டு முடித்ததும் குச்சிகளைத் தூக்கி எறியும் பழக்கம் வந்து விட்டது. சீனாவில் தான் இத்தகைய தூக்கி எறியும் குச்சிகள் உலகிலேயே மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்றைக்கு 300க்கும் அதிகமான தொழிற்சாலைகளில் சுமார் 60,000 தொழிலாளர்கள் இத்தகைய தூக்கி எறியும் குச்சிகளைத் தயாரிக்கின்றனர். 2000மாவது ஆண்டுக்குப் பிறகு கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து 65,000 டன் தூக்கி எறியும் உணவுக் குச்சிகளை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. இவற்றில் 1500 கோடி குச்சிகள் ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் உணவு மேஜைகளில் விளையாட்டுக் காட்டுகின்றன. இவற்றினால், வனவளம் அழிந்து, மரங்கள் குறைவதோடு, ஏராளமான குப்பையும் சேர்கிறது. ஆகவே ஜப்பானில் 69 விழுக்காடு நிலப்பரப்பு காடுகளாக இருந்த போதிலும், தூக்கி எறியும் உணவுக் குச்சிகளை உற்பத்தி செய்வதில்லை. மாறாக, இறக்குமதி செய்து, அவற்றை சுத்தப்படுத்தி திரும்பத்திரும்பப் பயன்படுத்துகின்றனர். சீனாவில் ஆண்டுதோறும் 4500 கோடி தூக்கி எறியும் உணவுக்குச்சிகள் பயன்படுத்தப்படுவதால், இரண்டரைக் கோடி நன்கு வளர்ந்த மரங்கள் வெட்டப்படுகின்றன என்று வருத்தப்படுகிறார் மத்திரிகையாளர் Zou Han Ru.

இதற்கு என்ன செய்வது? தூக்கி எறியும் உணவுக் குச்சிகளை உணவு விடுதியில் இலவசமாக வழங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்டணம் வசூலிப்போம். அதில் ஒரு பகுதியை காடு வளர்க்கச் செலவிடுவோம். அல்லது, எஃகு, அலுமினியம், அல்லது பிளாஸ்டிக் உணவுக் குச்சிகளைப் பயன்படுத்தலாம்.

அல்லது, இன்னும் சிறப்பாக நமது கைகளையே பயன்படுத்தி உணவு உண்ணலாமே! கைகளின் 5 விரல்களுக்கு இணையாக வேறு ஏதேனும் உண்டா? இயற்கையை மதிப்போம். அதற்கு நமது கைகளால் உண்பதைத் தவிர வேறு வழியில்லை.

கடவுள் கொடுத்த கைகளுக்கும், கடவுள் படைத்த வாய்க்கும் நடுவில் செயற்கைப் பொருள் எதற்கு? என்று பத்திரிகையாளர் Zou Han Ru எழுதியதைக் கண்டதும். நான் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.