 அவள் எவ்வளவு மெதுவாக விழுந்தாள் என்பதை நான் பார்த்தேன். நிச்சயம் அவளுக்குக் காயம் பட்டிருக்காது. அவள் பாவலா காட்டுகிறாள். அது எனக்கு எரிச்சலூட்டியது. ரிக்ஷாக்காரன் வம்பை விலைக்கு வாங்குகிறான். இனி அவன் பாடு.
அவள் வலிக்கிறது என்று சொன்னதுமே ரிக்ஷாக்காரன் ஒரு நிமிடம் கூட தயங்காமல், அவளை மெல்லக் கூட்டிக் கொண்டு முன்னே நடந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எதிரே ஒரு போலீஸ் நிலையம். காற்றுப் பலமாக வீசியதால் வெளியே யாரும் இருக்கவில்லை. ஆகவே ரிக்ஷாக்காரன் கிழவியை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையம் வாசலை நோக்கிச் சென்றான்.
திடீரென எனக்குள் ஒரு விநோதமான உணர்வு. அந்த ஒரு கணத்தில், அழுக்குப்படிந்த அவனுடைய உருவம். அவன் நடந்து செல்லச் செல்ல, எனக்கு பெரிதாகத் தெரிந்தது. அது விஸ்வரூபம் போல வளர்ந்து கொண்டே போனது. அதே வேளையில் என்னுள்ளே ஏதோ நிர்ப்பந்தம். குளிருக்குப் பாதுகாப்பான அங்கிக்குள் ஒளிந்து கொண்டிருந்த எனது சின்னத்தனமான மனதை அது அமுக்கிப் பிடித்தது.
நான் அசைவற்று அங்கேயே உட்கார்ந்திருந்தேன். எனது ஜீவசத்து எல்லாமே வற்றிவிட்டது போல் உணர்ந்தேன். எனது மனது காலியாகி விட்டது. ஒரு போலிஸ் காரன் வெளியே வந்த போது தான் நான் ரிக்ஷாவில் இருந்து இறங்கினேன்.
போலீஸ் காரன் என்னருகில் வந்து, "வேறொரு ரிக்ஷாவில் போங்க. அவன் இதை ஓட்ட முடியாது" என்றான்.
மறுசிந்தனை இல்லாமல் என் சட்டைப் பையில் இருந்து சில செப்புக்காசுகளை எடுத்து, "இதை அவனிடம் கொடுத்து விடுங்க" என்று கூறி போலீஸ் காரனிடம் கொடுத்தேன்.
காற்று முற்றிலுமாக நின்றுவிட்டது. ஆனாலும் சாலை அமைதியாக சலனமின்றி இருந்தது. சிந்தனையை ஓட்டியபடியே நடந்தேன். ஆனால் என்னைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பயமாக இருந்தது. நான் செப்புக் காசுகளை எதற்காக கொடுத்தேன்? அது ஒரு இனாமா? ரிக்ஷாக்காரனைப் பற்றிக் கணிப்பதற்கு நான் யார்? என் கேள்விக்கு என்னால் பதில் காண முடியவில்லை.
இப்போதும் கூட, அது என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அது எனக்கு வேதனை தருகிறது. என்னைப் பற்றிய சுயசிந்தனையைத் தூண்டுகிறது. அந்தக் காலத்திய அரசியல்—ராணுவ விவகாரங்களை, நான் சிறுவயதில் படித்த காவியங்களைப் போன்றே முற்றிலுமாக மறந்து விட்டேன். ஆனால் இந்தச் சம்பவம் மட்டும் திரும்பத் திரும்ப என் நினைவில் வகுகிறது. ஒவ்வொரு தடவையும் முன்பை விட பெரிதாக விஸ்வரூபம் எடுக்கிறது. எனக்கு வெட்கத்தைக் கற்றுத் தருகிறது. சீர்திருந்தும் படி என்னை வற்புறுத்துகிறது. எனக்குப் புதிய துணிவையும், நம்பிக்கையையும் ஊட்டுகிறது.
|