• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-21 14:41:46    
ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு 1

cri

நான் உயர் நிலைப் பள்ளியில் படித்த போது எனக்கு இரண்டு சகோதரர்கள் நல்ல நண்பர்களாக இருந்தனர். பிறகு பல ஆண்டுகள் அவர்களுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. அவர்களில் ஒருவனுக்கு உடல்நிலை ரொம்பவும் மோசமாக இருப்பதாகச் சில நாட்களுக்கு முன்பு கேள்விப்பட்டேன். ஊருக்குத் திரும்பும் வழியில் அவர்களைப் பார்க்கப் போனேன். அவர்களில் மூத்தவனைத்தான் பார்க்க முடிந்தது.

"எங்களைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கியே" என்று பாராட்டிய அவன், "என் தம்பி கொஞ்ச காலத்துக்கு முன்புதான் உடல் குணமாகி, அரசாங்க வேலைக்காக இன்னொரு ஊருக்குப் போயிட்டான்" என்றான். பிறகு சிரித்தபடியே தனது தம்பியின் இரண்டுடைரிகளைக் கொடுத்தான். "இதைப் படிச்சா என் தம்பிக்கு என்ன நோய் என்பது தெரிந்து விடும். பழைய நண்பன் இதைப் படிக்கிறதுல தப்பு இல்லே."

நான் அந்த டைரிகளைப் படித்த போது அந்தத் தம்பிக்கு ஒரு வகையான பயப்பிராந்தி பீடித்திருந்தது தெரிந்தது. தேதி எதுவும் போடாமல் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் டைரியை எழுதியிருந்தான். ஒரே தடவையில் இந்த டைரிகள் எழுதப்படவில்லை என்பது மை வேறுபாட்டில் தெரிந்தது. பெயர்களை மாற்றி, அந்த டைரிகளில் இருப்பதை அப்படியே கூறுகிறேன்.

இன்று இரவு நிலா மிகவும் பிரகாசமாக இருந்தது. முப்பது ஆண்டுகளாகப் பார்க்காமல் இருந்து இன்று பார்ப்பதால் எனக்கு மிகமிக சந்தோஷமாக இருந்தது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருட்டிலேயே கிடந்திருக்கிறேனே. இனி நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ச்சாவோ வீட்டு நாய் என்னை இரண்டு தடவை முறைத்துப் பார்த்தது.

நான் பயப்படுவதற்குக் காரணம் உண்டு.

இன்று இரவு அமாவாசை இது நல்லதுக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். ச்சாவோ என்னை வித்தியாசமாகப் பார்த்தார். என்னைக் கண்டு பயப்படுவது போல, என்னைக் கொல்ல விரும்புவது போல அவர் பார்வை தெரிந்தது. அவரோடு வேறு ஏழெட்டுப் பேர் இருந்தனர். எல்லோரும் ஏதோ முணுமுணுப்பாகப் பேசிக் கொண்டனர். என்னைப் பார்க்க அவர்கள் பயப்பட்டனர். நான் கடந்து சென்ற எல்லோருமே அப்படித்தான். அவர்களில் கொஞ்சம் முரடனான ஒருவன் என்னை முறைத்த போது எனக்குத் தலை முதல் கால் வரை உதறல் எடுத்தது. எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள் போலிருக்கே!

நான் பயப்படவில்லை. என் வழியில் போய்க் கொண்டு இருந்தேன். சில குழந்தைகளும் என்னை பற்றிப் பேசிக் கொண்டு இருந்தன. அவர்களுடைய பார்வையும் ச்சாவோ பார்வை போலவே இருந்தது. அவர்களின் முகம் பயங்கரமாக வெளிறிப் போய் தெரிந்தது. இந்தக் குழந்தைகளுக்கு என் மேல் எனன வெறுப்பு இருக்க முடியும்? ஏன் இப்படிப் பார்க்க வேண்டும்? "இங்க வாங்க" என்று நான் அழைத்ததும் அவர்கள் ஓடி விட்டனர்.

எனக்குப் புரியவில்லை. ச்சாவோவுக்கு என்மீது என்ன வெறுப்பு இருக்க முடியும்? பாதையில் நான் பார்த்த மக்களுக்குத்தான் என்ன வெறுப்பு இருக்க முடியும்? இருபதாண்டுகளுக்கு முன்பு கு ஷியுவின் பழைய கணக்குப் பேரேடுகளைப் புரட்டிப் பார்த்தேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. அவருக்கு ச்சாவோவை தெரியாது. பழக்கமில்லை. ஆனாலும், அதைப் பற்றிக் கேள்விப்பட்டு, பழிவாங்குவதற்காக மற்றவர்களோடு சேர்ந்து சதி செய்கிறாரோ! சரி, குழந்தைகளுக்கு என்ன வந்தது? அப்போது இவர்கள் பிறந்திருக்க கூட இல்லையே! இன்று என்னை ஏன் அவர்கள் வித்தியாசமாகப் பார்க்க வேண்டும்? என்னைப் பார்த்துப் பயப்படுவது போல, என்னை கொல்ல நினைப்பது போல ஏன் பார்க்கணும்? எனக்குப் பயமாக இருக்கிறது. கவலையாக இருக்கிறது.