• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-11-28 21:03:41    
ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு 2

cri

எனக்குத் தெரியும். அவர்களுடைய பெற்றோர்களிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கலாம்.

இரவில் தூங்க முடியவில்லை. எல்லாவற்றையும் கவனமாக யோசிக்க வேண்டியுள்ளது.

அந்த ஆட்கள்—சிலர் நீதிபதியால் தண்டிக்கப்பட்டவர்கள். சிலர் உள்ளூர் காவல்காரனிடம் அறை வாங்கியவர்கள். வேறு சிலர் தங்கள் மனைவிகளை கங்காணியிடம் தூக்கிக் கொடுத்தவர்கள். வேறு சிலரின் பெற்றோர்களோ கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்கள். ஆனால் ஒருபோதும் அந்த ஆட்களின் பார்வையில் இவ்வளவு பயம் தெரிய வில்லையே? நேற்று மட்டும் ஏன் அப்படிப் பார்க்க வேண்டும்?

எல்லாவற்றுக்கும் மேலாக நேற்று தெருவில் தனது குழந்தையைப் போட்டு அடித்த பெண், "குட்டிப் பிசாசே, உன்னைக் கடிச்சித்தின்னாத்தான் ஆத்திரம் தீரும்" என்று சொன்னாளே! அதுவும் என்னைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். எனக்குத் திடுக் என்றது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது பல் நீண்டு கோரமாகக் காட்சியளித்த எல்லோரும் வெறித்தனமாகச் சிரித்தார்கள். பெரியவர் சென் என்னை அவசர அவசரமாக வீட்டுக்குத் தள்ளிக் கொண்டு போய்விட்டார்.

வீட்டில் உள்ளவர்களோ என்னைத் தெரியாதது போல நடந்து கொண்டனர். ஆனால் எல்லோருடைய பார்வையும் என்மீதே இருந்தது. நான் படிப்பு அறைக்குள் நுழைந்ததும் கோழி அல்லது வாத்தை கூண்டுக்குள் தள்ளி மூடுவது போல அறையை இழுத்து மூடிவிட்டார்கள்.

இது என்னை மேலும் அதிகமாக பயமுறுத்திவிட்டது.

சில நாட்களுக்கு முன்பு ஓநாய்க்குட்டி கிராமத்தில் இருந்து எங்கள் குத்தகைக்காரன் வந்திருந்தான். பயிர் விளைச்சல் சரியில்லை என்று அண்ணனிடம் புலம்பித்தீர்த்து விட்டு ஒரு விஷயம் சொன்னான். அவர்கள் ஊரில் ஒரு ரௌடியை அடித்துக் கொன்று விட்டார்களாம். அப்புறம் சிலர் அவனுடைய இதயத்தையும் ஈரலையும் பிடுங்கி எடுத்து, எண்ணெயில் பொரித்துத் தின்றார்களாம். அப்படித் தின்றால் தைரியம் வளருமாம். நான் நடுவில் குறுக்கிட்ட போது, குத்தகைக் காரனும் என் அண்ணனும் என்னை உற்றுப் பார்த்தனர். அவர்களின் கண்களில் வெளியில் இருந்த ஆட்களின் அதே பார்வை தெரிந்ததை இன்றுதான் உணர்கிறேன்.

அதைப் பற்றி நினைத்தாலே உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை நடுங்குகிறது.

அவர்கள் மனிதர்களைத் தின்பவர்கள். என்னையும் அவர்கள் தின்றுவிடக் கூடும். உன்னை கடிச்சித் தின்னத்தான் என்று அந்தப் பெண் சொன்னது, பல்நீண்ட கொடியவர்களின் எக்காளச் சிரிப்பு, அன்றொரு நாள் குத்தகைக் காரன் சொன்ன கதை எல்லாமே ரகசிய அறிகுறிகளாக எனக்குத் தோன்றியது. அவர்களின் பேச்சில் இருந்த விஷம், வாள்வீச்சாகப் பாய்ந்த சிரிப்பு எல்லாவற்றையும் புரிந்து கொண்டேன். அவர்களின் பற்கள் வெள்ளை வெளேர் என்று பளபளக்கின்றன—அவர்கள் எல்லோருமே மனிதனைத் தின்பவர்கள்.