• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-05 08:27:06    
ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு 3

cri

நான் மோசமானவன் இல்லை, ஆனாலும், குவின் கணக்குப் பேரேடுகளைப் புரட்டிப்பார்த்ததில் இருந்து எல்லாமே தொட்டால் சுருங்கிகளைப்போல் ஆகிவிட்டனர். நான் யூகிக்கமுடியாத ரகசியங்கள் அவர்களிடம் உள்ளன. அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் மோசமானவன் என்று சொல்லிவிடுவார்கள் எனக்கு நினைவிருக்கிறது—அண்ணன் எனக்குக் கட்டுரை எழுதக் கற்றுக் கொடுத்தான். நல்லவர்களுக்கு எதிரான கருத்துக்களை நான் எழுதினால் அதை அங்கீகரித்து விடுவான். தீயவர்களின் செய்கையை மன்னிக்கும்படியாக நான் எழுதினால், "நல்லா எழுதியிருக்கே, உன்னோட ஒரிஜினாலிட்டி தெரியுது" என்று சொல்வான். அவர்கள் மனிதர்களைத் தின்னத் தயாராக இருக்கும் போது, அவர்களுடைய ரகசியச் சிந்தனைகளை எப்படி என்னால் ஊகிக்க முடியும்?

எல்லாவற்றையும் பற்றிக் கவனமாக யோசித்துப் பார்க்கும் போதுதான் புரிகிறது. எனக்கு நினைவுக்கு வருகிறது. பழங்காலத்தில் மனிதனைத் தின்னும் மக்கள் இருந்தார்களாம். ஆனால் இதைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. வரலாற்றுப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் "நன்மையும் ஒழுக்கமும்" என்று கிறுக்கியிருக்கிறது. எனக்குத் தூக்கம் வராததால், அந்த இரவில் பாதியைத்தான் படித்தேன். அப்போது சொல்லப்படாத அர்த்தங்கள் எழுத்துக்களுக்கு இடையே புதைந்து கிடப்பது தெரிந்தது—மனிதர்களைத் தின்பது.

புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள இந்த எழுத்துக்களும் எங்களுடைய குத்தகைக்காரனின் பேச்சும் குரூரமான சிபிப்போடு என்னைப் பார்க்கின்றன.

நானும் மனிதன்தான். அவர்கள் என்னையும் தின்ன விரும்புகிறார்கள்.

காலையில் நான் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். சென் கிழவர் பகலுணவு கொண்டு வந்தார். ஒரு கிண்ணத்தில் கால்கள். இன்னொரு கிண்ணத்தில் அவித்த முழுமீன். மீனின் கண்கள் வெள்ளையாக, கடினமாக இருந்தன. அதனுடைய வாய் திறந்தே இருந்தது—மனிதமாமிசம் தின்ன விரும்புகிறவர்களைப் போல. சில வாய்கள் அள்ளிச் சாப்பிட்டேன். என் வயிற்றுக்குள் வழுக்கிக் கொண்டு போனது மீனா, மனித மாமிசமா என்று சொல்ல முடியவில்லை. உடனே வாந்தி எடுத்து விட்டேன்.

"சென் தாத்தா, அண்ணன்கிட்ட சொல்லுங்க எனக்கு மூச்சுத்திணறுது. தோட்டத்தில் நடந்துட்டு வாறேன்" சென் கிழவர் எதுவும் பேசாமல் வெளியே போனார். திரும்பவந்து வாசலைத் திறந்து விட்டார்.

நான் அசையவில்லை. அவர்கள் என்னைப் போகவிட மாட்டார்கள் என்று தெரியும். என்னை எப்படி நடத்துகிறார்கள் என்று காண விரும்பினேன். நிஜம்தான். மெதுவாக எனது அண்ணன் ஒரு கிழவரை அழைத்துக் கொண்டு வந்தான். அவனுடைய கண்களில் கொலை வெறி மின்னியது. நான் அதைப் பார்த்து விடுவேனோ என்று பயந்து, தலையைத் தாழ்த்தியபடியே, கண்ணாடிக்கு ஊடே கடைக் கண்ணால் என்னைப் பார்த்தான்.

"இன்னைக்கி நல்லா இருக்கே போலிருக்கே" அண்ணன் சொன்னான்.

"ஆமா."

"இன்னைக்கி உன்னை பரிசோதிக்க ஹோ வந்திருக்காரு. நான்தான் வரச் சொன்னேன்."