• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-12-12 09:15:51    
ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு 4

cri

"சரி" என்று நான் சொன்னாலும், இந்த முதியவர் மாறுவேடத்தில் வந்திருக்கும் ஒரு கொலைகாரர் என்பதை நானறிவேன். நான் எவ்வளவு கொழுத்திருக்கிறேன் என்று தீர்மானிப்பதற்காக என் நாடி பிடித்துப் பார்த்தார். இதற்காக அவர் பங்குக்கு எனது கறி கிடைக்கும். ஆனாலும் நான் பயப்பட வில்லை. நான் மனிதமாமிசம் தின்பதில்லை என்றாலும் எனது தைரியம் அவர்களுடையதை விட அதிகம். நான் எனது இரண்டு கை முட்டிகளை நீட்டினேன். அவர் என்ன செய்வார் என்று பார்த்தேன். முதியவர் உட்கார்ந்து கண்களை மூடிக் கொண்டார். சிறிது நேரம் தடுமாறினார். சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். பிறகு தமது மாறுகண்களைத் திறந்து, "கண்டதை எல்லாம் நினைச்சுகிட்டு கிடக்காதே. கொஞ்ச நாளைக்கு ஓய்வெடு, நீ சரியாகி விடுவே."

கண்டதை எல்லாம் நினைத்துக் கொண்டு கிடக்காதே. கொஞ்ச நாட்களுக்கு ஓய்வெடு! நான் உடம்பு கொழுத்தால் இவர்களுக்குத்தானே நிறையத் தின்னக் கிடைக்கும். அதனால் எனக்கு என்ன ஆகும்? நான் எப்படி சரியாவேன்? இவர்கள் எல்லோருமே மனிதமாமிசம் தின்ன விரும்புகிறார்கள். அதே வேளையில் அதை மூடிமறைக்கிறார்கள். உடனே அதைச் செய்யும் துணிச்சல் இல்லை. சிரித்துச் சிரித்துச் செத்துவிடுவேன் போலிருக்கு. எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. பொங்கி வெடித்த சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்னுடைய சிரிப்பில் நேர்மையும், துணிச்சலும் இருக்கிறது. எனது துணிச்சலைப் பார்த்து அண்ணனும் முதியவரும் திகைத்துப் போனார்கள். அவர்களுடைய முகம் வெளிறிப் போனது.

நான் துணிச்சலுடன் இருக்கிறேன் என்பதற்காகவே என்னைத் தின்று அதிகத் துணிச்சல் பெற வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம் அதிகமாகிவிட்டது. முதியவர் வாசலுக்கு வெளியே போய்விட்டார். ஆனால் அதற்கு முன் மிகவும் தணிவான குரலில் "உடனே தின்பதற்கு" என்று என் அண்ணினிடம் முணுமுணுத்தார். என் அண்ணனும் சரியென்பது போலத் தலையசைத்தான். ஆக, நீயும் இதில் இருக்கிறாயா! பயங்கரமான இந்த விஷயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் நான் எதிர்பார்த்ததுதான். எனது அண்ணனே என்னைத் தின்பதற்கு உடந்தையாக இருக்கிறான்!

மனித மாமிசம் தின்பவன் எனது அண்ணன்!

மனித மாமிசம் தின்கிற ஒருவனுடைய தம்பி நான்!

என்னை மற்றவர்கள் தின்னப் போகிறார்கள். அது பெரிய விஷயமல்ல, நான் மனித மாமிசம் தின்பவனுடைய தம்பி!

கடந்த சில நாட்களாகத் திரும்பத் திரும்ப நான் சிந்திக்கிறேன். அந்த முதியவர் மாறுவேடத்தில் வந்த கொலைகாரனாக இல்லாமல், உண்மையிலேயே ஒரு மருத்துவராக இருப்பாரானால், அதனால் என்ன, அப்படியும் மனிதமாமிசம் தின்பவராகத்தானே இருப்பார். அவருக்கு முன்பு இருந்த மருத்துவர் கொண்டு வந்த மூலிகை மருந்துப் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளதே. மனிதமாமிசத்தை அவித்துத் தின்ன வேண்டும் என்று. அப்படியிருக்க, நான் மனிதனைத் தின்ன மாட்டேன் என்று அவரால் சொல்ல முடியுமா?