எனது அண்ணனைப் பற்றி நான் சந்தேகிப்பதற்குக் காரணம் இருக்கிறது.
எனக்கு அவன் பாடம் சொல்லிக் கொடுத்த போது, "மக்கள் தங்களது மகன்களைத் தின்பதற்காக பரிமாறிக் கொள்வார்கள்" என்று தன்வாயாலேயே சொல்லியிருக்கிறான். ஒரு முறை தீயவன் ஒருவனைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த போது, 'அவனைக் கொல்வதோடு, அவனிடைய மாமிசத்தைத் தின்று, தோலை உரித்து அதில் படுத்துத் தூங்க வேண்டும்'என்றான்.
அப்போது நான் மிகவும் சிறுவனாக இருந்தேன். அவன் சொன்னதைக் கேட்டதும் சிறிது நேரத்திற்கு என் இதயம் வேகமாகத் துடித்தது. அப்புறம் நரிக்குட்டி கிராமத்தில் இருந்து வந்த எங்கள் குத்தகைக்காரன், மனிதனுடைய இதயமும் ஈரலும் தின்னப்பட்டதாகச் சொன்ன போது, அண்ணன் ஆச்சரியம் அடையவில்லை.
தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் முன்பு போலவே கொடூரமாக இருக்கிறான். தின்பதற்காக மகன்களைப் பரிமாறலாம் என்றால் எதை வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ளலாம். யாரை வேண்டுமானாலும் தின்னலாம். முன்பெல்லாம் அவன் சொன்ன விளக்கங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது. அவன் எனக்கு விளக்கிய போது அவனுடைய உதட்டோரங்களில் மனிதரத்தம் வழிந்தது. அது மட்டுமல்ல, அவனுடைய இதயம் முழுவதுமே மனிதர்களைத் தின்பதிலேயே இருந்தது.
கும்மிருட்டு. இரவா, பகலா என்று எனக்குத் தெரியவில்லை. ச்சாவோ வீட்டுநாய் மீண்டும் குரைக்கத் தொடங்கிவிட்டது.
சிங்கத்தின் குரூரம், முயலின் மருட்சி, நரியின் தந்திரம்......
அவர்களுடைய தந்திரம் எனக்குத் தெரியும். அவர்கள் யாரையும் ஒரேயடியாகக் கொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு அந்தத் துணிச்சலும் இல்லை. பின் விளைவுகளுக்குப் பயந்தார்கள். ஆகவே அவர்கள் எல்லோரும் அணிதிரண்டு, என்னைத் தற்கொலை செய்யும்படி தூண்டுவதற்காக, எல்லா இடங்களிலும் பொறி வைத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தெருவில் ஆண்களும் பெண்களும் எப்படி நடந்து கொண்டார்கள்! கடந்த சில நாட்களாக எனது அண்ணனின் போக்கு! எல்லாம் தெளிவாகத் தெரிகிறது. அவர்களின் நினைப்பே வேறு. ஒரு ஆள் தனது இடை வாரை அவிழ்த்து, உத்தரத்தில் கட்டி தூக்கிட்டுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கொலைப் பழிக்கு ஆளாகமல் தங்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். அதனால்தான் எக்காளமாகச் சிரித்து கொக்கரிக்கிறார்கள் அல்லாமல், ஒருவன் பயந்து போயோ கவலைப்பட்டோ செத்தால், அவன் மெலிந்து போவான். அப்படியும் அவர்களுக்கு பரவாய் இல்லை.
|