
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா காட்சித் தலமான ஹுவாங்சானிலிருந்து புறப்பட்டு, பேருந்தில் ஏறி தெற்கு நோக்கி சுமார் 2 மணி நேரம் பயணம் செய்த பின் மாபெரும் மலை ஒன்றைச் சென்றடையலாம். 7 கிலோமீட்டர் பரப்பளவுடைய இந்த மலையில் ஆண்டுதோறும் வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில், எங்கெங்கும் azalea மலர்களும் crape myrtle மலர்களும் மலர்கின்றன. இதனால், இது மலர் மலை என்று அங்குள்ள மக்களால் அழைக்கப்படுகின்றது. இப்போது நாம் செல்லும் இடமான கற்குகை, இந்த மலர் மலைச் சரிவில் அமைந்துள்ளது. 1700 ஆண்டுகளுக்கு முன் இந்த மாயமான கற்குகை வெட்டப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 36 கற்குகைகளில் மிக பெரியதன் பரப்பளவு 12 ஆயிரம் மீட்டர். இது, 10 கூடைப்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவுக்குச் சமம். பழம் பெரும் கற்குகை கண்டுபிடிக்கப்பட்டது முதல், மக்களுக்கு எல்லையற்ற கற்பனையும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளன. கற்குகை குடையப்பட்டதால், மலர் மலைக் குன்றின் உள் பகுதி உள்ளீடின்றி ஏறக்குறைய காலியாக இருக்கின்றது. குடைந்து எடுக்கப்பட்ட கற்கள் எங்கே போயிவிட்டன என்பது ஒரு சந்தேகம் என்று வழிகாட்டி சோ ஸுவாசியெ எமது செய்தியாளரிடம் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, இந்தக் கற்குகை மிகவும் பெரியது. இதிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் கணக்கிட முடியாதவை. இவ்வளவு அதிகமான கற்களைக் கொண்டு பாதை போட்டால், அதன் நீளம் 240 கிலோமீட்டரைத் தாண்டும் என கணக்கிட்டோம். இங்குள்ள மக்கள் வீடுகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தும் கற்களின் வகை வேறு. இந்த மலர் மலையின் கற்களை மக்கள் பயன்படுத்தி வீடு கட்டவில்லை. அப்படியானால், இந்த லட்சக்கணக்கான கற்கள் எங்கே போய்விட்டன என்பது ஒரு ஐயம் என்றார். இது தவிர, இக்கற்குகை பற்றிய பல ரகசியங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, 1700 ஆண்டுகளுக்கு முன் எங்களுடைய மூதாதையர்கள் எந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கற்குகையை குடைந்தனர்? இவ்வளவு பிரமாண்டமான திட்டப்பணி பற்றி அவ்விடத்தின் வரலாற்றுப் பதிவேட்டில் சிறிதளவேனும் எழுதப்படவில்லை. இது பற்றி மக்களிடையில் கட்டுக்கதையும் இல்லை ஏன்? பண்டைக்கால மனிதர் இந்தக் கற்குகைகளை வெட்டியதன் நோக்கம் என்ன என்பது ஒரு கேள்வி.

இதுவரை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கற்குகைகளில் சில, மக்களின் குடியிருப்பாகவோ புத்தர்கள் வழிபாடு செய்யும் கோயிலாகவோ பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த மலர் மலையின் கற்குகையிலுள்ள இவ்வளவு பிரமாண்டமான இடம், சாதாரண மக்களின் வசிப்பிடம் அல்ல என்பது தெளிவு. அத்துடன், இக்கற்குகைக்குள்ளே சுவர் ஓவியமோ, புத்தர் உருவச் சிலையோ இல்லை. ஆகவே, இவ்விடம், புத்தர்கள் வழிபாடு செய்யும் இடம் போலவும் தோன்றவில்லை. மலர் மலையில் கற்குகையை வெட்டியதன் நோக்கம் பற்றி பல ஊகங்கள் உள்ளன. உண்மையிலே அவற்றுக்கு அறிவியல் சாட்சியம் இல்லை என்று இந்த மாயமான கற்குகை மீது அதிக அக்கறை கொண்டுள்ள லொசியௌபிங் அம்மையார் எமது செய்தியாளரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, கற்களை வெட்டும் போது, திறந்த இடத்திலே வெட்டலாம். அது அவ்வளவு சிரமம் இல்லை. குகைக்கு உள்ளே எப்படி வெட்டப்பட்டது? படை வீரர்கள் ஒளிவதற்கோ தானியங்களைச் சேமிப்பதற்கோ பயன்படுத்தப்படுமானால், இவ்விடம் உலர்ந்த இடம் அல்ல. மன்னர் யாரோ ஒருவரின் கல்லறையாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினால், இதற்கு வரலாற்றுச் சாட்சியம் எதுவம் இல்லை. இதனால், இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை என்றார்.

ஒரு வேளை இவ்வளவு அதிகமான கேள்விகள் இருப்பதன் காரணமாகவே, உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் இவ்விடத்துக்கு வருகை தருகின்றனரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. மாயமான கற்குகை தம்மை ஈர்த்துள்ளதாக அமெரிக்கப் பயணி டொமு எமது செய்தியாளரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, இக்கற்குகை மாயமானது. இது போன்ற இடத்துக்கு நான் ஒருபோதும் சென்றதில்லை. இக்கற்குகை 1700 ஆண்டுகள் பழைமையானது என்று எனக்குத் தெரியும். இக்கற்குகை, கற்களைத் தோண்டியெடுப்பதற்குப் பயன்படுத்தப்படக் கூடும். ஆனால், கற்கள் எங்கே போய்விட்டன? முன்பு, யார் இக்குகையில் வசித்தது? படையினர் இக்குகையில் வசித்திருக்கலாம். ஆனால் யாருக்கும் தெரியாது. ஊகம் மட்டுமே. சாட்சியம் இல்லை என்றார். உண்மையில் இந்தக் கற்குகையில் நடந்துசெல்லும் போது எந்நேரத்திலும் புதிய கேள்விகள் தோன்றும். நேயர்களாகிய நீங்கள் இதில் அக்கறை கொண்டால், இவ்விடத்துக்கு வருகை தாருங்கள். ஒரு சமயம், உங்களுக்கு இக்கேள்விக்குப் பதில் கிடைக்கக் கூடும்.
|