அக்கறை இல்லாதவன் போல் முணுமுணுத்தான். "இல்லை."
"இல்லையா? அப்படியானா அவங்க ஏன் இன்னும் அதைச் செய்யணும்?"
"நீ என்ன பேசறே!"
"நான் என்ன பேசறனா? நரிக்குட்டி கிராமத்தில் அவங்க மனிதனைத் தின்கிறார்கள். எல்லாப் புத்தகங்களிலும் எழுதியிருக்கே, உனக்குத் தெரியலியா? சிவப்பு மைகூட உலராம இருக்கே."
அவனுடைய முகத்தோற்றம் மாறியது. பயங்கரமாக வெளிறிப் போனது. "இருக்கலாம்" என்று என்னைப் பார்த்தவாறே சொன்னான். "எப்பவுமே அப்படித்தானே இருந்து வந்திருக்கு."
"எப்பவுமே அப்படியே இருந்து வந்தால் அது சரியாகிவிடுமா?"
"இதைப் பத்தி உங்கிட்ட பேச விரும்பவே நீ இதைப் பத்தி எல்லாம் பேசக் கூடாது. இதைப் பத்தியார் பேசுனாலும் அது தப்பு."
துள்ளிக்குதித்து எழுந்தேன். கண்களை அகலவிரித்துப் பார்ப்பதற்குள் அவன் மாயமாய் மறைந்துவிட்டான். எனக்கு வியர்த்துக் கொட்டியது. அவன் எனது அண்ணனைவிடச் சின்னவன்தான். ஆனாலும் அவனும் இதில் சேர்ந்திருக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் இதைப் பழக்கி விட்டிருப்பார்கள். அவன் தன் மகனுக்கும் இதைப் பழக்கி விட்டிருப்பான். அதனால்தான் குழந்தைகள் என்னைக் குரூரமாகப் பார்க்கிறார்கள்.
மனிதர்களைத் தின்ன வேண்டும். அதே வேளையில் மற்றவர்கள் தன்னைத் தின்றுவிடக் கூடாது. எல்லோரும் ஒருவரை ஒருவர் ஆழ்ந்த சந்தேகத்துடனே பார்த்துக் கொண்டார்கள்...
இந்த நப்பாசைகளை எல்லாம் விட்டு விட்டு, அவர்கள் வேறு வேலை செய்தால், உண்டு உறங்கி நடந்து நிம்மதியாக வாழ்க்கை நடத்தினால் எவ்வளவு வசதியாக இருக்கும்? அவர்கள் இந்த நல்ல காரியம் மட்டும் செய்தால் போதும். ஆனால் தந்தைகளும் தனயர்களும், கணவனும் மனைவியும், அண்ணனும் தம்பியும், நண்பர்களும் பரம விரோதிகளும், ஆசிரியர்களும் மாணவர்களும், ஏன் அன்னியர்களும் கூட எல்லோருமாக இந்தச் சதியில் சேர்ந்திருக்கிறார்களே. அவர்கள் ஒன்று சேர்ந்து ஒருவரை ஒருவர் இந்த நல்ல காரியத்தைச் செய்யவிடாமல் தடுக்கிறார்கள்.
|