
2005ஆம் ஆண்டு கடந்துவிட்டது. கடந்த ஓராண்டில் சீனாவின் விளையாட்டுத் துறை பெரும் சாதனை பெற்றது. சீன வீரர்களும் வீராங்கனைகளும், ஒலிம்பிக் விளையாட்டுக்களில் அடங்கும் 28 நிகழ்ச்சிகளில் உலக சாம்பியன்களைப் பெற்றனர். தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றை அடுத்து, மூன்றாம் இடம் இது வகிக்கின்றது. மேசை பந்து, பூப்பந்து, நீர் குதிப்பு, இலக்கு சுடுதல் உள்ளிட்ட சீனாவின் மேம்பாடுடைய விளையாட்டுகளில் சீன அணி தனது ஆற்றல் மிக்க நிலையில் தொடர்ந்து இருக்கின்றது.
கடந்த மே திங்களில் நடைபெற்ற ஷாங்கை உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் சீன அணி அனைத்து 5 நிகழ்ச்சிகளிலும் தங்கப் பதக்கம் பெற்றது. இதே திங்களில் நடைபெற்ற சூதிர்மன் கோப்பைக்கான பூப்பந்து கலப்பு குழுப் போட்டியின் இறுதிப் போட்டியில் சீன அணி வலுவான இந்தோனேசிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. இதனால், உலகின் பூப்பந்து போட்டி வரலாற்றில் ஒரே நேரத்தில் மூன்று பெரிய பூப்பந்து போட்டிகளின் கோப்பைகளான சூதிர்மன், தோமஸ் மற்றும் யூபர் கோப்பை பெற்றுள்ள அணியாக சீன அணி திகழ்கின்றது.

கடந்த ஜூலை திங்களில் கனடாவின் மொன்ட்ரில் நகரில் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டியில், கனவு அணி என்று அழைக்கப்படும் சீன அணி மொத்தம் பத்து நீர்குதிப்பு நிகழ்ச்சிகளில் 5 தங்கப் பதக்கங்களை பெற்று, இந்த விளையாட்டிலான சீனாவின் மேம்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில், முன்பு சீன அணி பலவீனமாக இருந்த சில ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சிகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த நவம்பர் திங்களில் சீனாவின் மியன்யாங் நகரில் நடைபெற்ற 13வது உலக குத்துச் சண்டை சாம்பியன் பட்டப் போட்டியில் சீன வீரர் சோ ஷி மிங் பல வலுவான வெளிநாட்டு வீரர்களைத் தோற்கடித்து 48 கிலோகிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் சீன வீரர் தங்கப் பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
|