• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-01-18 09:22:38    
ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு 9

cri
முதியவர் சென் எல்லோரையும் விரட்டினார். என் அண்ணன் மறைந்து விட்டான். என்னுடைய அறைக்குத் திரும்புமாறு சென் கிழவர் சொன்னார். அறை கும்மிருட்டாக இருந்தது. என் தலைக்கு மேலே உத்தரக் கட்டைகள் என்னை வெறித்துப் பார்த்தன. அவை குலுங்கின. சிறிது நேரம் குலுங்கிய பின் பெரிதாக நீண்டு வளர்ந்தன. நீண்டு வளர்ந்து என் மீது குவியலாய் விழுந்தன.

பளு தாங்க முடியவில்லை. என்னால் அசைய முடியவில்லை. நான் சாக வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். அந்தப் பளு போலியானது என்பதை அறிவேன். ஆகவே வியர்த்து விறுவிறுக்க வெளியே வந்தேன். ஆனாலும் நான் சொல்ல வேண்டியிருந்தது.

அதன் பிறகு சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடியவில்லை. அறைக்கதவு திறக்கப்படவில்லை. தினமும் இரண்டு வேளை உணவு, அவ்வளவுதான்.

குச்சிகளைப் பிடித்து உண்ணத் தொடங்கினேன். எனது அண்ணனைப் பற்றி நினைத்தேன். எனது தங்கை எப்படி இறந்தாள் என்று இப்போது தெரிகிறது. அவனால்தான் அவள் செத்தாள். அப்போது என் தங்கைக்கு ஐந்து வயதுதான். அவள் எவ்வளவு பாசத்திற்கும் பரிதாபத்திற்கும் உரியவளாக இருந்தாள் என்பது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. அம்மா அழுது அழுது கரைந்துவிட்டாள். அழாதே என்று அவளைத் தேற்றினான் அண்ணன். ஒருவேளை தங்கையை அவன் தின்றிருக்கலாம். அதனால் அம்மா அழுவது அவனுக்கு அவமானமாக இருந்திருக்கலாம். அவனுக்கு மானம், வெட்கம் என்று ஏதாவது இருக்கா என்ன?

எனது தங்கையை அண்ணன் தின்று விட்டான். ஆனால் இதை அம்மா உணர்ந்தாளா என்பது எனக்குத் தெரியவில்லை.

அம்மாவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அழும்போது இதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. அது சரியல்ல என்று நினைத்தாளோ என்னமோ! எனக்கு நான்கு அல்லது ஐந்து வயதாக இருந்தபோது என் அண்ணன் சொன்னது இன்னும் மறக்கவில்லை. ஒருவனுடைய பெற்றோர் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தால், அவனுடைய சதையில் ஒரு துண்டை வெட்டி அதைக் கொதிக்க வைத்து அவர்களுக்குத் தின்னக் கொடுக்க வேண்டுமாம். அப்போதுதான் அவனை நல்லமகன் என்று சொல்வார்களாம். அவன் அப்படிச் சொன்னபோது அம்மா மறுக்கவில்லை. ஒரு துண்டு சதையை தின்னலாம் என்றால், முழுவதையுமே தின்னலாமே. அப்புறம் அழுது புலம்புகிறார்கள். இதுதான் எனக்கு விநோதமாக இருக்கிறது. இதைப் பார்க்கும் போது என் நெஞ்சு ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.

அதைப் பற்றி நினைக்கவே என்னால் முடியவில்லை.

நாலாயிரம் ஆண்டுகளாக மனிதமாமிசம் தின்னப்படும் ஒரு இடத்தில் நான் வாழ்கிறேன் என்பதை இப்போதுதான் உணர்கிறேன். எங்கள் தங்கை இறந்ததும் வீட்டுப் பொறுப்பை அண்ணன் எடுத்துக் கொண்டான். சாதத்திலும் கறியிலும் அவளுடைய மாமிசத்தை அவன் கலந்திருப்பான். தெரியாமல் நாங்கள் அதைச் சாப்பிட்டிருக்கிறோம்.

எனது தங்கையின் மாமிசத்தில் பல துண்டுகளை நான் என்னை அறியாமலே தின்றிருக்கக் கூடும்.

நாலாயிரம் ஆண்டுகள் மனிதமாமிசம் தின்னும் ஒரு வரலாற்றை உடைய மனிதக் கூட்டத்தில் ஒருவனான நான்—முதலில் அதைப் பற்றி எனக்குத் தெரியாது என்றாலும் கூட, உண்மையான ஒரு மனிதனை எப்படி ஏறெடுத்துப் பார்க்க முடியும்?

இன்னும் மனிதமாமிசம் தின்னாத குழந்தைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்.