
கிழக்கு சீனாவின் சியாங்சு மாநிலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோச்சுவாங் என்னும் சிறிய நகர் உள்ளது. 4 பக்கங்களும் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ள இந்நகரம் சீனாவின் முதலாவது நீர் கிராமம் என்று அழைக்கப்படுகின்றது. இன்று நாங்கள் இந்தச் சிறு நகரைப் பார்க்கப் போகலாமா? பெரிய நகரங்களில் பரபரப்பான வாழ்க்கை நடத்திவரும் மக்கள் சோச்சுவாங் நகருக்குள் நுழைந்ததும், ஆற்று நீருடன் கலந்து மணம் கமழும் கிராமியச் சூழ்நிலையை உணரலாம். இது ஒரு புதிய உணர்வு என்று பெய்ச்சிங்கிலிருந்து வந்துள்ள பயணி செல்வி சோயிங் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, சோச்சுவாங் நகருக்கு வந்த போது, நீண்ட காலமாகப் பிரிந்திருந்த ஒரு பழைய நண்பரைப் பார்ப்பது போல என் கண் முன் தோன்றியது. இது மிகவும் அன்பான நகர். இந்நகரைக் கண்டதும் வேதனை, கவலை, மன நிறைவின்மை ஆகியவை அனைத்தையும் மறுந்துவிடுகிறேன்.

பயணிகள், இந்நகரிலுள்ள சிறிய பாலங்களையும் சலசலத்து ஓடும் ஆற்று நீரையும் கண்டுகளிப்படைகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், இந்த இடம் எனக்கு மகிழ்ச்சி தருகின்றது என்றார். சோச்சுவாங் நகருக்கு வருகை தந்த பயணிகளில் ஏனைய பலருக்கும் செல்வி சோயினின் இந்த அனுபவம் உண்டு. சோச்சுவாங் நகரம் அதன் தனிச்சிறப்புடைய இயற்கைக் காட்சிகளினால் பயணிகளுக்கு மன நிறைவு தருகின்றது. சோச்சுவாங் நகரின் தனிச்சிறப்பு என்ன?நேயர்களே! உங்களுக்குத் தெரியுமா? இது பற்றி நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இது பற்றி நான் உங்களுக்கு கூறுகின்றேன். கவனமாகக் கேளுங்கள். சிறிய பாலம், ஆற்று நீர், வீடு ஆகியவற்றுடன் கூடிய அழகான நகரக் காட்சி, சிறிய நகருக்குரிய இயற்கை காட்சி என சீன மக்கள் நீண்டகாலமாகக் கருதிவருகின்றனர். சீனாவின் பாரம்பரிய ஓவியங்களில் இக்கருத்து முக்கிய இடம் வகிக்கின்றது.

சோச்சுவாங் நகரம் இக்கருத்தின் சின்னமாக விளங்குகின்றது. ஆற்று நீரால் சூழப்பட்டுள்ள சோச்சுவாங் நகரம், நீரின் மேல் மிதக்கும் ஒரு தாமரைப் பூ போல இருக்கின்றது. தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் ஆறும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் ஆறும் இந்நகருக்கு ஊடாகச் செல்லுகின்றன. இவ்விரு ஆறுகளும் சோச்சுவாங் நகரை 2 பகுதிகளாகப் பிரிக்கின்றன. ஆற்று வழியை மையமாகக் கொண்டு இந்நகர் கட்டப்பட்டுள்ளது. கடைகளும் மக்களின் வீடுகளும் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டின் முன் வாசலிலும் ஆற்று நீர் பாய்கின்றது. ஆற்றின் குறுக்கே பழமை வாய்ந்த பல்வகை பாலங்கள் கட்டப்பட்டன. இப்பாலங்கள், நீர், பாதை, கடை, வீடு ஆகியவற்றை இணைக்கின்றன. வெவ்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்ட இப்பாலங்கள் சோச்சுவாங் நகருக்கு அழகூட்டுகின்றன. நகர மையப்பகுதியில் அமைந்துள்ள வூஅன் பாலத்தின் 4 முனைகளில் வேறுபட்ட தனிச்சிறப்புடைய தேநீர் கடைகள் இருந்தன. அக்காலத்தில் தே நீரைக் குடித்த வண்ணம், ஜன்னலுக்கு அப்பாலுள்ள மீன் பிடி படகைக் கண்டுகளிக்கும் உணர்வு சிறப்பானது என்று கூறலாம். சோச்சுவாங் நகரில் வெவ்வேறு பாணியில் 30க்கும் அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இது வரை பாதுகாப்புடன் இருக்கும் பாலங்களின் எண்ணிக்கை 13 மட்டுமே. இந்நகரில் காணப்படும் கட்டிடங்களில் பெரும்பாலானவை சீனாவின் மிங் வமிசக் காலத்திலும், சிங் வமிசக் காலத்திலும் கட்டப்பட்டவை. இவற்றில் சில, பல நூறு ஆண்டுகள் பழமையானவை. இந்தச் சிறிய நகரம், ஆயிரம் ஆண்டு வரலாறுடையது என்ற போதிலும், இதுவரை, அதன் பழைய நிலைமை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுவருகின்றது.

ஆற்றங்கரையில் போடப்பட்ட கறுப்பு நிறக் கல், கப்பல் துறைமுகம், ஆற்றின் மேல் பகுதியில் கல் பாலங்கள், மக்கள் வீடுகளில் கட்டப்பட்ட குறுகிய மரப்பலகைக் கதவு, பூக்கள் செதுக்கப்பட்ட மரப்பலகை ஜன்னல் ஆகியவை மக்களின் உணர்வை அந்தப் பழைய காலத்துக்குக் கொண்டுசெல்லுகின்றன. இந்நகரில் உள்ள ஏராளமான பிரபல இயற்கைக் காட்சித் தலங்கள் அனைவரையும் ஈர்க்கின்றன. நீரில் மிதக்கும் சிறிய நகரான சோச்சுவாங்கில், படகு தான் மிகவும் வசதியான போக்குவரத்து சாதனம் என்பதில் ஐயமில்லை. படகுகளை நிறுத்திவைக்க வசதியாக, இந்நகரில் ஏறக்குறைய அனைத்து வீடுகளுக்கும் படகு துறை உண்டு என்று வழிகாட்டி சாங்வென் கூறினார். அவர் கூறியதாவது, இந்நகரில், வீடுகளுக்கு ஊடாகப் படகு செல்லும் காட்சி குறிப்பிடத் தக்கது. சுசிங் என்னும் சிற்றாறு, சாங்தின் எனப்படும் முற்றத்தின் நடுப்பகுதிக்கு ஊடாகச் செல்வதை இது குறிக்கின்றது. முற்றத்தில் சுமார் 11 சதுர மீட்டர் பரப்பளவுடைய குளம் ஒன்று உள்ளது. பண்டைக் காலத்தில், இவ்வீட்டின் உரிமையாளர்கள், இந்தக் குளத்திலே படகு சவாரி செய்தனர். அல்லது இப்படகுகளில் சரக்குகளைக் கொண்டுசென்றனர் என்றார்.
|