2010ஆம் ஆண்டுக்குள், சீன சமூக நுகர்வு பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை தொகை, 10 லட்சம் கோடி யுவானைத் தாண்டக்கூடும் என்றும், உலகளாவிய தொழில் நிறுவனங்கள் இதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன என்றும் சீன வணிக அமைச்சரின் உதவியாளர் Huang Hai கூறியுள்ளார். அண்மையில் ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், கடந்த ஆண்டு, சீன சமூக நுகர்வு பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை தொகை, 6 லட்சத்து 70 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது, 2004ஆம் ஆண்டில் இருந்ததை விட 12.9 விழுக்காடு அதிகமாகும் என்றார். விலை காரணியைத் தவிர உண்மையான வளர்ச்சி விகிதம் 12 விழுக்காடாக இருக்கும் என்று அவர் கூறினார். சீன சந்தையின் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல், மேலும் அதிகமான வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டில், 1027 அன்னிய வணிக நிறுவனங்கள் தொடங்குவதற்கு வணிக அமைச்சகம் ஒப்புதல் அளித்தது என்று புள்ளி விபரம் காட்டுகின்றது.
|