இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் விட்டு வந்த எனது பழைய வீட்டை நோக்கி, நடுக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், எழு நூறு மைல்களுக்கும் அதிகமாகப் பயணம் செய்துவிட்டேன்.
அது ஒரு பின்பனிக் காலம். நாங்கள் எனது பழைய வீட்டை நெருங்கிக் கொண்டிருந்த போது, படகில் எங்கள் கேபினுக்குள் ஊதக்காற்று துளைத்துக் கொண்டிருந்தது. வானம் மோடம் போட்டிருந்தது. மூங்கில் தடுப்புக்களின் வழியாக, மங்கிய மஞ்சள் வானத்திற்குக் கீழே, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கிராமங்கள் ஜீவகளையின்றி சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது. என் மனம் மிகவும் சோர்ந்து விட்டது.
ஆகா! கடந்த இருபதாண்டுகளாக என் நினைவில் இருந்து வந்து பழைய வீடு இதுவல்ல.
எனது நினைவில் இருந்த பழைய வீடு இப்படி இருக்கவில்லை. அது எவ்வளவோ சிறப்பானதாக இருந்தது. அதனுடைய அழகுகளை—குறிப்பான தோற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்டால் சொல்ல முடியாது. தெளிவான ஒரு தோற்றம் என் மனதில் பதிந்திருக்கவில்லை. அதை வர்ணிக்க வார்தைகள் இல்லை. இப்போது எஞ்சியிருப்பதெல்லாம் இதுதான். பிறகு எனக்கு நானே நியாயப்படுத்திக் கொண்டேன். வீடு எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறது. அது மேம்படவில்லை என்றாலும், நான் கற்பனை செய்வது போல சலிப்பூட்டுவதாக இல்லை. என் மனம்தான் மாறிவிட்டது. ஏனென்றால் எவ்விதக் கனவுகளும் இன்றி நான் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
இறுதிவிடை பெறுவதற்காக இப்போது வந்திருக்கிறேன். பல ஆண்டுகளாக எனது மூதாதையர்கள் வாழ்ந்த பழையவீடு இன்னொரு குடும்பத்திற்கு விற்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக கைமாறியாக வேண்டும். புத்தாண்டு பிறப்புக்கு முன்பாக வாழ்ந்து பழகிய பழைய வீட்டை கடைசியாகப் பார்த்து விட்டு, என் குடும்பத்தினரை வெகு தொலைவில் நான் வேலை செய்யும் ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறேன்.
போய்ச் சேர்ந்த மறுநாள் காலையில் வீட்டு வாசலுக்கு வந்தேன். கூரையின் ஒடிந்த சோளத் தட்டைகள் குளிர்காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தன. இப்படிப்பட்ட வீட்டை இன்னும் வைத்திருக்க முடியுமா என்ன? எங்கள் குடும்பத்தின் பல சொந்தக்காரர்கள் ஏற்கனவே வெளியேறி விட்டதால் வீடு வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது. நான் வீட்டை அடைந்த போது என்னை வரவேற்க அம்மா வாசலில் காத்திருந்தாள். அவளுக்குப் பின்னே எனது சகோதரனின் எட்டு வயதுப் பெண் ஹுங் அர் ஓடிவந்து நின்றாள்.
|