• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-02-22 08:46:38    
பழைய வீடு 2

cri

சாமான்களை அப்புறப்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே வேறு ஊரில் அறை வாடகைக்கு எடுத்து சில பர்னிச்சர்களை வாங்கியிருந்தேன். மேலும் சிலவற்றை வாங்க வீட்டில் உள்ள பழைய சாமான்களை விற்றாக வேண்டும் என்று நான் கூறியதை அம்மா ஒப்புக் கொண்டாள். எல்லாச் சாமான்களும் பேக் செய்யப்பட்டு விட்டதாகவும், கொண்டு செல்ல கஷ்டமான பாதி பர்னிச்சர்களை விற்று விட்டதாகவும் அம்மா சொன்னாள். ஆனால் பணம் வாங்குவதுதான் கஷ்டமாக இருக்கிறது என்றாள்.

"ஒன்றிரண்டு நாள் ஓய்வெடு. சொந்தக்காரங்களைப் போய்ப் பாரு. அதுக்கப்புறம் புறப்படலாம்" என்று அம்மா சொன்னதும், "சரி" என்றேன்.

"அப்புறம் அந்த ஜுன்ட்டு இல்லே. அவன் வர்றப்ப எல்லாம் உன்னை விசாரிக்கிறான். உன்னைப் பார்க்கணும்னு சொல்றான். நீ வர்றதா சொன்னேன். அவன் எப்ப வேணும்னாலும் வருவான்."

அம்மா இப்படிச் சொன்னதும் என் மனதில் ஒரு விந்தையான காட்சி திடீரெனத் தோன்றி மறைந்தது. கருநீல வானில் தங்க நிலா தொங்கிக் கொண்டிருக்கிறது. அதன் கீழே கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று தர்பூசணித் தோட்டம். அதற்கு நடுவே பதினொன்று-பன்னிரண்டு வயதுப் பையன், கழுத்தில் வெள்ளிச் சங்கிலி அணிந்தபடி நின்று கொண்டிருக்கிறான். அவன் கையில் இருந்த இரும்புக் கம்பியால் தனது பலத்தை எல்லாம் கொண்டு சா வை குத்துகிறான். ஆனால் அது நழுவிக் கொண்டு, அவன் கால்களுக்கு ஊடாக நழுவிச் செல்கிறது.

அந்தப் பையன்தான் ஜுன்ட்டு. நான் அவனை முதலில் சந்தித்த போது, அவனுக்கு பத்து வயதுக்கு மேலிருக்கும்—அது முப்பதாண்டுகளுக்கு முன்பு. அப்போது அப்பா உயிரோடு இருந்தார். குடும்பம் வசதியாக வாழ்ந்தது. எனக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து கெடுத்து விட்டார்கள். அந்த ஆண்டில் குல தெய்வத்திற்குப் பலிகொடுக்க வேண்டியது எங்கள் குடும்பத்தின் முறை. முப்பதாண்டுகளுக்கு ஒரு தடவைதான் இந்த முறை வரும். முதல் மாதத்தில் குலதெய்வ விக்கிரகங்களுக்குப் படையவிட வேண்டும். அதற்காக பலி பாத்திரங்கள் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தன. அவற்றைக் காண பக்தர் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வந்ததால் திருடு போகாமல் பாதுகாக்க வேண்டியிருந்தது. எங்கள் குடும்பத்தில் ஒரே ஒரு பகுதிநேர வேலைக்காரன்தான் இருந்தான். நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருப்பதால் தனது மகன் ஜுன்ட்டுவை வரவழைத்து, பலிபாத்திரங்களைப் பாதுகாப்பதாக அவன் சொன்னான்.

எனது தந்தை சம்மதித்ததும் எனக்கு அளவு கடந்த ஆனந்தம். ஏனென்றால் நான் ஜுன்ட்டுவைப் பற்றி நீண்ட நாட்களுக்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். அவனுக்கு என் வயதுதான். அவன் பதின்மூன்றாவது மாதத்தில் பிறந்தவன். அவனுடைய ஜாதகத்தை கணித்த போது, பஞ்ச பூதங்களில் மண் சாதகபலனில் இல்லை என்று ஜோதிடர்கள் சொன்னதால், மண் என்று பொருள்படும் ஜுன்ட்டு என்ற பெயரை அவனுடைய தந்தை வைத்தார். அவன் பொறிவைத்து சிறு பறவைகளைப் பிடிப்பதில் கெட்டிக்காரன்.