• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-01 08:09:19    
பழைய வீடு 3

cri

புத்தாண்டுப் பிறப்புக்காக, ஜுன்ட்டு வருகைக்காக, ஒவ்வொரு நாளும் காத்திருந்தேன். கடைசியாக புத்தாண்டு பிறந்தது. ஜுன்ட்டு வந்துவிட்டதாக அம்மா சொன்னாள். அவனைப் பார்க்க பறந்தோடிப் போனேன். சமையலறையில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு செக்கச் சிவந்த வட்ட முகம் தலையில் ஒரு சிறு தொப்பியும், பளபளக்கும் வெள்ளித் தாயத்தும் அணிந்திருந்தான். அவன் இறந்துவிடுவானோ என்ற பயத்தில் தெய்வங்களிடம் வேண்டிக் கொண்டு அந்தத் தாயத்தை அவனுடைய அப்பா அணிவித்திருந்தார். அவனுக்கு கூச்சசுபாவம். என்னிடம் மட்டும்தான் தயங்காமல் பேசுவான். அதுவும் அருகில் யாரும் இல்லாமல் இருக்க வேண்டும். சிலமணி நேரங்களிலேயே நாங்கள் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.

நாங்கள் என்ன பேசினோம் எனத் தெரியவில்லை. ஜுன்ட்டு ரொம்பவும் உற்சாகமாகப் பேசினான். நகருக்கு வந்த பிறகு பல புதிய விஷயங்களைப் பார்த்ததாக சொன்னான்.

மறுநாள் பறவைகளைப் பிடித்துத்தரச் சொன்னேன்.

"முடியாது" என்றான் உறுதியாக. "அதுக்கு கடுமையாகப் பனி பெய்யணும். பனி பெய்த பிறகு மணலைப் பெருக்கியெடுத்து தரையைச் சமமாக்கி, பெரிய பிரம்புத் தட்டை வைக்கணும். அதுல ஒரு குட்டையான குச்சியை வச்சி. நீளமான நூலால கட்டணும். தட்டுல பரப்புன தவிட்டைத் திங்கறதுக்கு பறவைகள் வந்து உட்கார்ந்ததும் குச்சியைக் கட்டியிருக்கிற நூலைச் சுண்டி இழுப்பேன். பறவைகள் அந்தத் தட்டுல மாட்டிக் கொள்ளும். காட்டுக் கோழி, காட்டுப்புறா, காடை, கவுதாரி... இந்த மாதிரி எல்லா வகையான பறவைகளும் வந்து மாட்டிக்கிடும்" என்று விவரித்துக் கொண்டே போனான்.

ஆகவே, எப்போது பனிபெய்யும் என்று நான் ஆர்வத்தோடு காத்திருந்தேன். இன்னொரு தடவை "இப்போ ரொம்ப குளிரா இருக்குது. நீ கோடையில் வந்திருக்கணும்" என்றான் ஜுன்ட்டு. "அப்போ பகலில நாம கடற்கரைக்குப் போய் சோழிகளைத் தேடி எடுக்கலாம். பச்சைச் சோழி, சிவப்புச் சோழி, பிசாசுவிரட்டற சோழி, புத்தர் சோழி. இப்படி நிறையக் கிடைக்கும் சாயந்தரம் என் அப்பனோட சேர்ந்து தர்பூசணி காவலுக்குப் போகலாம்."

"திருடங்களைப் பிடிக்கவா?"

"திருடனா? வழியில் போறவுக தாகத்துக்காக ஒரு தர்பூசணியை பிடுங்கித் தின்னா அது திருட்டு இல்லே. நாம போறது முள்ளம் பன்றி வேட்டைக்கு. முள்ளம் பன்னி, நரி இந்தமாதிரி. தர்பூசணியை நரி கடிச்சுத்திங்கற சத்தத்தைக் கேட்டதும் குத்தீட்டியை எடுத்துக்கிட்டு பின்னால போயி ஒரேயடியா போட்டுத் தீத்தறணும்."

எனக்குப் புரியவில்லை. இந்த cha எப்படி இருக்கும்? அது ஏதோ ஒரு சின்ன நாய் போல இருக்கும்... பயங்கரமானதா இருக்கும் என்று நினைத்தேன்.

"அது ஆளுகளைக் கடிக்கதா?"

"எங்கிட்டதான் குத்தீட்டி இருக்குல்ல. பின்னாடி போய். அது பார்வையில் பட்டதும் ஒரே போடாப் போட்டுரு. அது ரொம்ப தந்திரமானது. உன் காலுக்குள்ளார நுழைஞ்சு தப்பிச்சுரும். அதன் ரோமங்கள் எண்ணெய் போல வழுவழுப்பா இருக்கும்."