• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-07 14:43:29    
சீனாவில் கிறிஸ்தவ மதம்

cri

சீனச் சமூகம் பொதுவுடைமைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, இது ஒரு நாத்திக நாடாகத்தான் இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள், நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் இங்கு வந்து தங்கியிருக்கும் போது, தான் சீனா பற்றிய பொதுவான கணிப்பு எவ்வளவு தவறானது எனத் தெரிகிறது.

சீனாவில் புதிது புதிதாகக் கோயில்கள் முளைப்பதில்லை, கடவுளின் திடீர் அவதாரங்கள் நிகழ்வதில்லை. தெருவை அடைத்துக் கொண்டு மத ஊர் வலங்கள் நடைபெறுவதில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை மக்களின் மனங்களில் இருந்து மறைந்து விடவில்லை. சீன அரசாங்கம் ஒரு நாத்திக அரசாங்கம். அதற்காக கடவுள் இல்லவே இல்லை என்று மேடை போட்டு பிரச்சாரம் செய்வதில்லை. மாறாக, "கடவுளையும் மதத்தையும் உன் வீட்டோடு வைத்துக் கொள்" என்று சொல்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பெளத்த ஆலயங்கள் இன்றைக்கும் கம்பீரமாக காட்சி தருகின்றன. மக்கள் அங்கு சென்று, ஊது வத்தி ஏற்றி, மணி அடித்து, மண்டியிட்டுக் கும்பிடுகிறார்கள். பழஞ்சிறப்புமிக்க ஆலயங்களை அரசே பராமரிக்கிறது-விளம்பரம் செய்யாமல், போஸ்டர் ஒட்டாமல்!

சீன அரசு மக்களின் மத நம்பிக்கையில் குறுக்கிடுவதில்லை. அதே வேளையில், மக்களின் மத நம்பிக்கைகள் மற்றவர்களின் அமைதியைக் குலைப்பதையும் அனுமதிப்பதில்லை. மதத்தின் பெயரால் எழக்கூடிய பயங்கரவாதத்தையும் தலைதூக்க விடாமல் நசுக்கிவிடுகிறது. அண்மையில் பிடிபட்ட ஒரு உய்கூர் பகுதி பயங்கரவாதிக்கு, குறுகியகாலத்தில் விசாரித்து முடித்து, மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதே இதற்குச் சான்று.

சீனச் சமூகத்தை பல்வேறு வமிசங்கள் ஆட்சி செய்து வந்துள்ளன. ஒவ்வொரு வம்சமன்னர்களும் தத்தமது மதநம்பிக்கைகளுக்கு ஏற்ப வெவ்வேறு மதங்களை ஆதரித்திருக்கிறார்கள். இவற்றில் தாவோ மதமும், பெளத்தமதமும் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றன. இப்போது கிறிஸ்தவ மதமும் ஆதிகாலத்திலேயே சீனாவில் வேரூன்றயிருந்தது என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார் 78 வயது அறிஞர் Wang Weifan. இவர் 2002ஆம் ஆண்டில், கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் உள்ள ச்சுஸோ நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில், ஹான் வம்ச பிரபு ஒருவரின் கல்லறையில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட பத்து கல் சித்திரங்களைக் கண்டார்.

ரோமப் பேரரசுக்கு சமகாலமான கி.பி. 25 முதல் 220 வரையில் ஆட்சி செய்த கிழக்கு ஹான் வமிசத்தைச் சேர்ந்த அந்தக் கலைக்கருவூலங்கள், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நூறாண்டுகளுக்குள்ளாகவே, கிறிஸ்தவ மதம் சீனாவுக்கு வந்து விட்டது என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன என்கிறார் வேங். இந்தக் கல்சித்திரங்கள் ச்சுஸோ நகரின் ஜியோனுதும் (Jiunudum) என்ற புறநகர்ப்பகுதியில் 1995இல் இரண்டு கல்லறைகளில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன. பண்டைய சீனாவில் நிலவி வந்த மரணத்துக்குப்பின் ஆவியின் வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை சித்திரிப்பதாக இந்த கல் சித்திரங்கள் உள்ளன என்று கலை வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஆனால், இந்தக் கல் சித்திரங்களில் விவிலியக் கதைகள் காலக்கிரமப்படி சொல்லப்பட்டுள்ளன என்கிறார் வேங். இதற்கு ஆதாரமாக அவர் பல விளக்கங்களை முன்வைக்கிறார்.