திடுக்கிட்டுப் போய் பார்த்தேன். அம்பது வயசு மதிக்கத்தக்க, தாடை எலும்பு துருத்திக் கொண்டிருக்கிற, மெல்லிய உதடுகளை உடைய ஒரு பெண், இடுப்பில் கைகளை ஊன்றியபடி நின்று கொண்டிருந்தாள். பாவாடை அணியாமல் பேன்ட் போட்டு, கால்களை அகலவிரித்து அவள் நின்ற காட்சி ஜியாமெட்ரிப் பெட்டியில் உள்ள காம்ப்பஸை நினைவு படுத்தியது.
திகைத்துப் போனேன்.
"என்னைத் தெரியலியா? நான் உன்னை தோள்ல தூக்கி வளர்த்தேனே!"
எனக்கு இன்னும் திகைப்பாக இருந்தது. நல்ல வேளையாக அப்போது என் அம்மா வந்து விட்டாள்.
"ரொம்ப நாளா வெளியே இருந்துட்டு வந்திருக்கான். அவனுக்கு எப்படி நினைவிருக்கும்?" என்று அம்மா சமாதானம் சொன்னாள்.
"உனக்கு நினைவில்லியா? இவங்க திருமதி யாங். ரோட்டுக்கு அந்தப்பக்கத்துல மொச்சைப் பயறு தயிர்க்கடை வச்சிருக்க俄ங்க" என்றாள் என்னிடம்.
அப்புறமாக எனக்கு நினைவுக்கு வந்தது. நான் குழந்தையா இருந்தப்போ, ரோட்டுக்கு அப்பால் இருக்கற தயிர்க்கடையில் யாங் எந்த நேரமும் உட்சார்ந்திருப்பாள்.
அவளை எல்லோரும் தயிர் அழகி என்று அழைப்பார்கள். அப்போதெல்லாம் அவளோட தாடை எலும்பு துருத்திக் கொண்டிருக்காது. உதடுகளும் இவ்வளவு வற்றிப்போய் இருக்காது. எல்லா நேரமும் அவள் உட்கார்ந்தே இருந்ததுனால, காம்ப்பஸ் போல இருப்பாள் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவளாலதான் தயிர்வியாபாரம் ரொம்ப நல்லா நடக்குதுன்னு சொல்வாங்க. ஆனால், என் வயசு காரணமோ என்னமோ என்னை அவள் ஈர்க்கவில்லை. அதனாலேயே பின்னாளில் அவளைத் துப்புரவா மறந்துட்டேன். காம்ப்பஸ் அழகி என்னை எரிச்சலோடு பார்த்தாள். நெப்லியனைப் பற்றிக் கேள்விப்பட்டிராத ஒரு ஆளை பிரெஞ்சுக்காரன் பார்ப்பது போல, வாஷிங்டன் பற்றி அறிந்திராத ஒருவனை அமெரிக்கன் ஒருவன் பார்ப்பது போல இருந்தது அவளுடைய பார்வை. நக்கலாகச் சிரித்தபடியே, "நீ என்னை மறந்திட்டியா? உன்னோட கவனத்துல எல்லாம் நான் வர முடியுமா?" என்றாள்.
"அப்படியில்லே... வந்து... நான்" எழுந்து நின்று கொண்டு பதில் சொல்லத் தடுமாறினேன்.
"அப்படின்னா, சுன் கவனமாக் கேளு. நீ பணக்காரனாயிட்டே. இந்த சாமான்கள் எல்லாம் கனமா இருக்கு. உன்னால எடுத்துட்டுப் போக முடியாது. பழைய சாமான்களை வச்சி இனி என்ன பண்ணப்போறே. நான் எடுத்துக்கிடுதேன், எங்களைப் போல ஏழை ஜனங்களுக்கு பழைய சாமான்கள் போதும்."
"நான் ஒண்ணும் பணக்காரனில்லே இத வித்துத்தான் புதுசு."
"சரிதான்பா. பெரிய பெரிய ஆளுங்களோட பழகுறே. நீ பணக்காரன் இல்லேன்னு சொல்றியா? இப்போ உனக்கு மூணு வப்பாட்டிகள். நீ வெளியே போறப்போ எல்லாம் பல்லக்கு நாற்காலியில உக்காரவச்சு எட்டுப்பேரு தூக்கிட்டு போறாங்க. பணக்காரன் இல்லேங்கிறியா? ஆங். எங்கிட்ட இருந்து எதையும் மறைக்க முடியாது."
|