2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போது, வணிகம், தொண்டர் பணி முதலிய துறைகளில் தைவான் உடன்பிறப்புகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சீன ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் தூ மிங் தே கூறியுள்ளார். மார்ச் திங்கள் 5ஆம் நாள் பேசிய அவர், 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக முழு நாட்டிலும் 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் தொண்டர்கள் அழைக்கப்படுவார்கள். தைவான் உடன்பிறப்புகள் பெயர் பதிவு செய்வது வரவேற்கப்படும் என்றார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட விரும்பினால், தைவான் உடன்பிறப்புகள் சீனத் தைபெய் ஒலிம்பிக் கமிட்டி மூலம் அல்லது சீனப் பெருநிலப் பகுதியிலுள்ள உற்றார் உறவினர்கள் மூலம் சீட்டு ஆடர் செய்யலாம், இணையம் மூலமும் சீட்டு ஆடர் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
பெய்சிங் 2008 ஒலிம்பிக் தீபந்தம் பற்றிய வடிவமைப்புகளைச் சேகரிக்கும் நடவடிக்கை அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தற்போது இப்பணி நிபுணர்களின் மதிப்பீட்டுக் கட்டத்தில் நுழைந்துள்ளது. சீனாவின் 28 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள், மாநகரங்கள், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம், தைவான் பிரதேசம் ஆகியவற்றிலிருந்தும், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்கேரி, இத்தாலி, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் இந்த வடிவமைப்புகள் வந்துள்ளன. நிபுணர் மதிப்பீட்டுப் பணி மார்ச் திங்கள் முதல் நாள் முதல் ஏப்பரல் 18 ஆம் வரை நடைபெறுகின்றது. மதிப்பீட்டுக் குழு இந்த படைப்புகளிலிருந்து மூன்றை தேர்ந்தெடுத்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு இறுதியில் நிர்ணயிக்கப்படும்.
மேசைப் பந்து 2006ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் மார்ச் 5ஆம் நாள் ஜப்பானில் நிறைவடைந்தது. சீன வீரர்களும் வீராங்கனைகளும் ஆண் பெண் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றனர். ஆடவர் ஒற்றையர் போட்டியில் சீன வீரர் வாங் ஹௌ 4-0 என்ற செட் கணக்கில் தனது சக நாட்டவரான சென் ச்சியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் சீன வீராங்கனை வாங் நான் 4-2 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனை லீ ச்சியா வெய்யைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.
நீச்சல் 7வது ஆசிய நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டி மார்ச் திங்கள் 5ஆம் நாள் சிங்கப்பூரில் நிறைவடைந்தது. முதல் நாள் நடைபெற்ற அனைத்து 7 நிகழ்ச்சிகளிலும் சீன வீரர்களும் வீராங்கனைகளும் சாம்பியன் பட்டம் பெற்றனர். ஆடவருக்கான 50 மீட்டர் மல்லாந்த நீச்சல் போட்டியில் சீன வீரர் ஓயாங் குன்பொங்கும், மகளிருக்கான 400 மீட்டர் கலப்பு நீச்சல் போட்டியில் சீன வீராங்கனை சாங் சின்னும் சாம்பியன் பட்டம் பெற்றனர். 7வது ஆசிய நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டி 6 நாட்கள் நடைபெறும். மொத்தம் 19 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 300க்கும் அதிகமான வீரர்களும் வீராங்கனைகளும் இதில் கலந்துகொள்கிறார்கள்.
|