• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-22 09:08:21    
பழைய வீடு 6

cri

ஒண்ணும் பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தேன்.

"இந்தா பாரு. பணம் நிறையச் சேரும்போது கஞ்சனா ஆயிடுறாங்க. கஞ்சத்தனமா இருக்கறதால நிறையப் பணம் சேருது" என்று கூறிய காம்ப்பஸ் அழகி, எரிச்சலோடு திரும்பி மெதுவாக நடக்கத் தொடங்கினாள். போகிற போக்கில் தற்செயலாகச் செய்வது போல் என் அம்மாவின் ஒரு ஜோடி கையுறைகளை எடுத்து தனது பாக்கெட்டுக்குள் திணித்தபடி வெளியே நடந்தாள்.

அதன்பிறகு அண்டை அயலில் உள்ள பல உறவினர்கள் வந்து போனார்கள். அவர்களுடன் பேசியபடியே நடுநடுவே பேக் செய்தேன். இவ்வாறாக மூன்று நான்கு நாட்கள் கழிந்தன.

ஒருநாள் மிகவும் குளிராக இருந்த பிற்பகலில் பகலுணவை முடித்துக் கொணடு, தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது யாரோ வருவது போன்ற உணர்வு. தலையைத் திருப்பிப் பார்த்தேன். பார்த்தவுடனே திடுக் கென்றது. அவசர அவசரமாக எழுந்து நின்று, ஓடோடிச் சென்றேன் அவனை வரவேற்க.

ஜுன்ட்டு வந்திருந்தான். பார்த்தவுடனே ஜுன்ட்டுதான் எனத் தெரிந்து விட்டது. அது என் நினைவில் நின்ற ஜுன்ட்டு அல்ல. முன்பிருந்ததை விட இருமடங்கு வளர்ந்து விட்டிருந்தான். செக்கச்சிவந்த வட்டவடிவமான முகம் வெளிறிப்போய், கோடுகளும் சுருக்கங்களும் நிறைந்திருந்தன. கண்களும் அவனது தந்தையினுடையதைப் போலவே சிவப்பாக, இமைகள் வீங்கிப் போயிருந்தன. நான் முழுவதும் கடல்காற்றுப் படும்படியாக வேலை செய்யும் கடலோர விவசாயிகள் பொதுவாக இப்படித்தான் இருப்பார்கள். அசிங்கமான ஒரு தொப்பி தலையோடு ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரே ஒரு மெல்லிய சட்டை. தலை முதல் கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தான். கையில் ஒரு பேப்பர் பையும், நீளமான ஹுக்காவும் வைத்திருந்தான். எனது நினைவில் இருந்த கைகளோ கொழுத்துச் சிவந்திருந்தன. ஆனால் இந்தக் கைகள் சொர சொரப்பாக சுருங்கி பைன் மரப்பட்டை போல இருந்தன.

அவனைப் பார்த்ததில் பரவசமடைந்த நான் என்ன சொல்வதெனத் தெரியாமல், "ஓ! ஜுன்ட்டு, நீ தானா இது?" என்றேன்.

எவ்வளவோ பேச விரும்பினேன். கொட்டிவிட்ட மணிகள் போல, காட்டுக் கோழிகள் போல, எகிறிக் குதிக்கும் மீன்களைப் போல, சோழிகளைப் போல, குள்ள நரி போல—வார்த்தைகள் வந்து விழுந்திருக்க வேண்டும். ஆனால் நான் பேச நினைத்ததை எல்லாம் சொல்ல முடியாமல் வாய் மூடி நின்றேன்.

அவன் நின்று கொண்டிருந்தான். மகிழ்ச்சியும் துக்கமும் கலந்து தெரிந்தன அவன் முகத்தில். உதடுகள் அசைந்தன. ஆனால், ஒரு ஒலிகூட வரவில்லை. கடைசியாக, மிகவும் மரியாதை கலந்த தொனியில் தெளிவாகப் பேசினான்.

"முதலாளி..."

எனக்குள்ளே ஒரு நடுக்கம். எவ்வளவு கெட்டியான சுவர் எழும்பிவிட்டது எங்களுக்கு இடையில்! ஆனாலும் நான் எதுவும் பேசாது இருந்தேன்.