வணக்கம்!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில், மீண்டும் மகிழ்ச்சியுடன் சந்தித்துள்ளோம்.
நான்காவது பாடத்தில், அனுமதி கேட்பது பற்றிய பல வாக்கியங்களைப் படித்துள்ளோம். நீங்கள் பயிற்சி செய்தீர்களா? கொஞ்சம் சொல்லத் தெரியுமா? இன்று அனுமதி கேட்பது பற்றிய இன்னொரு வாக்கியத்தை படிக்கின்றோம்.
இந்த சொல் தமிழ் மூலம் சீனம் என்ற நூலின் 25ஆம் பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ளது.
NENG BU NENG?
இந்த சொல், HAO BU HAO? XING BU XING?KE YI BU KE YI? ஆகியவை போல ஒரே பொருள்தான். முடியுமா இல்லையா? அல்லது முடியுமா முடியாதா? என்பது பொருள். இதுவும், மற்றவரின் கருத்தைக் கேட்டறியும் போது, அல்லது அனுமதி கேட்கும் போது பயன்படுத்தப்படுகிறது. பதிலளிக்கும் போது, NENG முடியும், அல்லது BU NENG முடியாது என்று சொல்ல வேண்டும்.
இப்பொழுது ஒரு உரையாடலை பார்க்கின்றோம்.
இந்த உரையாடல் தமிழ் மூலம் சீனம் என்ற நூலின் 26ஆம் பக்கத்தின் மேல் பகுதியில் உள்ளது.
WO NENG BU NENG CHU QU YI HUI ER?
NENG。
இந்த உரையாடலின் தமிழாக்கம் வருமாறு
WO MENG BU NENG CHU QU YI HUI ER?
நான் சற்று வெளியே போய் வர முடியுமா?
NENG。
முடியும்.
ஆனால் NENG BU NENG,KE YI BU KE YI என்ற வினா சொற்களைப் பயன்படுத்தும் போது, ஒரே இடத்தில் கவனிக்க வேண்டும். இந்த சொற்களை எழுவாய்க்கு பின் தான் சேர்க்க வேண்டும். HAO BU HAO,XING BU XING ஆகிய வினா சொற்கள் வாக்கியத்தின் கடைசியில் தான் வரும்.
எடுத்துக்காட்டாக, WO NENG BU NENG HUI JIA? என்ற வாக்கியத்திலுள்ள NENG BU NENG என்ற வினா சொல், WO என்ற எழுவாய்க்கு பின் தான் வருகிறது அல்லவா. இந்த வாக்கியத்தை, WO KE YI BU KE YI HUI JIA?என்றும் சொல்லலாம். ஆனால், WO HAO BU HAO HUI JIA? WO XING BU XING HUI JIA? என்று சொல்லுவது இல்லை. HAO BU HAO,XING BU XING,ஆகிய இரண்டு வினா சொற்களை வாக்கியத்தின் கடையில் தான் போட வேண்டும். அதாவது, WO HUI JIA,HAO BU HAO? WO HUI JIA,XING BU XING? என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று நாம் ஒரு புதிய வினா சொல்லையும் ஒரு புதிய உரையாடலையும் படித்துள்ளோம். பாடத்துக்குப் பின் நன்றாக பயிற்சி செய்யுங்கள்.
|