"ஷுவெய் ஷெங், இங்க வா. முகலாளிக்கு வணக்கம் சொல்லு" தலையை பின்னால் திருப்பி அழைத்தான். தனக்குப் பின்னால் ஒண்டிக் கொண்டிருந்த ஒரு பையனை முன்னுக்கு இழுத்தான். அந்தப் பையன் இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்த ஜுன்ட்டுவைப் போலவே இருந்தான். ஆனால் கொஞசம் வெளிறிப் போய் மெலிந்திருந்தான். அவன் கழுத்தில வெள்ளித் தாயத்து இருக்கவில்லை.
"இவன் என்னொட அஞ்சாவது குழந்தை. வெளி உலகத்தைப் பார்த்தது இல்லே. அதனால் ரொம்பக் கூச்சப்படுறான்."
எங்கள் குரலைக் கேட்ட அம்மா கீழே இளங்கி வந்தாள். கூடவே ஹுங் அர்ரும் வந்தாள்.
"கொஞ்ச நாளைக்கி முன்னாடி கடுதாசி வந்திச்சு அம்மா. முதலாளி வந்தது ரொம்பவே சந்தோஷம்."
"அடடே, எதுக்கு இவ்வளவு மரியாதை நீங்க முந்தி சேர்ந்து விளையாடு னவங்கதானே?" என்றாள் அம்மா உற்சாகத்துடன். "முந்திபோலவே சுன் தம்பின்னே கூப்பிடலாம்."
"அட போங்கம்மா. அது மரியாதை இல்லே. முந்தி நான் சின்னப் பையன் ஒண்ணும் புரியாம இருந்தேன்." அவன் பேசிக் கொண்டே, முன்னால் வந்து வணங்கும்படி ஷ்வெய் ஷெங்கிறகு சாடை காட்டினான். ஆனால் அந்தப் பையனோ மிகவும் கூச்சப்பட்டு, தந்தைக்குப்பின்னால் மரக்கட்டை போல நின்று கொண்டிருந்தான்.
"இவன்தானா ஷ்வெய் ஷெங்? உன்னோட அஞ்சாவது குழந்தையா?" என்று கேட்டாள் அம்மா.
"நாங்க எல்லாம் அவனுக்கு புது ஆளாத் தெரியுறோம். அவனைச் சொல்லிக் குத்தம் இல்லே... ஹுங் அர் இவனைக் கூட்டிக் கிட்டுப் போயி விளையாடு."
இதைக் கேட்டதும் ஹுங் அர்ருடன் சேர்ந்து தயக்கமின்றி விளையாடப் போனான் ஷ்வெய் ஷெங். அம்மா ஜுன்ட்டுவை உட்காரச் சொன்னாள். தயங்கித்தயங்கி உட்கார்ந்தான். பிறகு ஹுக்காவை மேளஜ மீது சாத்திவைத்து விட்டு, காகிதப் பொட்டலத்தைக் கொடுத்தான்.
"குளிர்காலத்துல கொண்டுவர்றதுக்கு ஒண்ணும் இல்லே. இந்த மொச்சைச் கொட்டைகள் நாங்களே உலர்த்தினது. மன்னிச்சுக் கோங்க அய்யா."
எல்லோரும் சௌக்கியமா என்று நான் கேட்டபோது அவன் தலையை உலுக்கினான்.
"ஒண்ணும் சரியில்லே. என்னோட ஆறாவது குழந்தைகூட ஏதாவது வேலை செய்யுது. அப்படியும் சாப்பாட்டுக்கு போதலை. வருமானத்துக்கும் உத்தரவாதம் கிடையாது. விதிமுறைன்னு எதுவுமே இல்லே. எல்லாருக்கும் பணம் தேவைப்படுது. சரியான விளைச்சல் இல்லே. விளைவிச்சு விக்கறதுக்குக் கொண்டு போனா பலவரிகள் கட்ட வேண்டியிருக்கு. பணம் நஷ்டமாகுது. விக்காமப் போட்டுவச்சா கெட்டுப் போகும்."
|