
ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பைக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் ஜெர்மன் சுற்று மார்ச் 25ஆம் நாள் நடைபெற்றது. மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. சமநிலையற்ற கம்பிகள் என்ற நிகழ்ச்சியில் சீன வீராங்கனை லீ யா தங்கப் பதக்கம் பெற்றார். ஆடவருக்கான RING நிகழ்ச்சியில் சீன வீரர் சென் யீ பிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பிரிட்டிஷ் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 18வது பிரிட்டிஷ் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 26ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நிறைவடைந்தது. ஆஸ்திரேலியா 84 தங்கப் பதக்கங்களைப் பெற்று முதலிடம் வகித்தது. இங்கிலாந்து 36 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் கனடா 26 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன. மார்ச் 15ஆம் நாள் துவங்கிய இந்த விளையாட்டுப் போட்டியில் 71 உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்து 4000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டிகளில், தடகளப் போட்டி, நீச்சல், பூப்பந்து, கூடைப் பந்து உள்ளிட்ட 21 விளையாட்டுகள் இடம்பெற்றன.
2006 ஆம் ஆண்டு சியாமென் சர்வதேச மாரதான் ஓட்டப் போட்டி மார்ச் 25ஆம் நாள் நடைபெற்றது. சீன வீரர் சுன் வெய் வெய் 2 மணி 26 நிமிடம் 32 வினாடி என்ற சாதனையுடன் மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டம் பெற்றார். ஆடவர் பிரிவில் கெனிய வீரர் ஸ்டெபென் கமார் சாம்பியன் பட்டம் பெற்றார். 39 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொண்டனர்.
2006ஆம் ஆண்டு சீன ஸ்னூக்கர் ஒப்பன் போட்டியின் இறுதிப் பந்தயம் மார்ச் 26ஆம் நாள் நடைபெற்றது. பிரிட்டிஷ் வீரர் மார்க் விலியம்ஸ் 9-8 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டம் பெற்றார். மார்ச் திங்கள் 20ஆம் நாள் துவங்கிய இப்போட்டியில் உலகின் பல்வேறு இடங்களிலுள்ள 32 வலுவான வீரர்கள் பங்கெடு்த்தனர்.
கனடாவின் கல்காரி நகரில் நடைபெற்ற 2006ஆம் ஆண்டு உலக உருவப் பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டப் போட்டியின் இரட்டையர் சறுக்கலில் சீன வீராங்கனை பாங் ச்சிங், வீரர் தொங் சியன் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது. சீன வீராங்கனை சாங் டான், வீரர் சாங் ஹௌ ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. ரஷியாவின் புகழ்பெற்ற வீராங்கனை பெட்ரோவா, வீரர் திஹொங் னோப் ஜோடி வெண்கலப் பதக்கம் பெற்றது.
|