கடந்த சில ஆண்டுகளாக, சீன அரசு கிராமங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தியுள்ளது. ஆனால், சில பகுதிகளில், படிப்படியாக வளமடைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி கிடைப்பதில் புதிய இன்னல்கள் ஏற்பட்டன. இப்பிரச்சினையைத் தீர்க்க, சீன அரசு, கிராம நிதிச் சூழலை மேம்படுத்தி, முதலீட்டைத் திரட்டும் வழியை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.
சீனாவின் தென்பகுதியிலுள்ள ஹேய்நான் மாநிலத்தின் மக்கள் தொகையில், விவசாயிகள் 60 விழுக்காட்டினர். கடந்த சில ஆண்டுகளில், ஆழ்கடல் மீன்பிடித் தொழில் வளர்ச்சியடைந்திருப்பதால், மீன்பிடி மரப்படகுகளை செயல் திறன் மிக்க உருக்குப் படகுகளாக மாற்ற வேண்டும் என்று மீனவர்கள் விரும்பினார்கள். ஆனால், 100 டன் எடையுள்ள உருக்குக் கப்பலின் விலை, 20 லட்சம் யுவான். சாதாரண மீனவரைப் பொருத்தவரை, இது மிக அதிக தொகையாகும்.
இதனால், தற்போது சீனாவின் கிராம நிதிச் சூழலில் சில பிரச்சினைகள் வெளிப்பட்டன. இது குறித்து, சீன அரசவை வளர்ச்சி ஆய்வு மையத்தின் கிராம பொருளாதார ஆய்வகத்தின் தலைவர் ஹேன் சியுன் கூறியதாவது:
வேளாண் திட்டப்பணியில் முதலீடு செய்வதால், பயன் கிடைக்க நீண்டகாலமாகும். குறைவான வருமானம், அதிக இடர்கள், அதிகமான செலவு ஆகிய காரணங்களினால், விவசாயிகளுக்கும் கிராமச் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் கடன் பெறுவதில் இன்னல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், வணிக வங்கிகள், வேளாண் துறைக்கு கடன் வழங்குவதில் அக்கறை காட்டுவது இல்லை. தவிர, தற்போது, வேளாண் துறை காப்பீடு வளர்ச்சி குறைவாக உள்ள வளரும் நாடுகளில், சீனாவும் ஒன்று என்றார் அவர்.
கிராம நிதிச் சூழலினஅ பின்னடைவு பிரச்சினை, சீன அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்வாண்டின் சீன சமூக பொருளாதார வளர்ச்சி திட்டத்தில், கிராம நிதிச் சீர்திருத்தத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையை சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் முன்வைத்தார். வேளாண் துறையில் முதலீட்டை தொடர்ந்து அதிகரிப்பதோடு, விவசாயிகள் முதலீட்டைத் திரட்டும் வழியை விரிவாக்கி, நிதி முறையின் மூலம் உற்பத்தி அளவை விரிவாக்கி, இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு, வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்று, சீன அரசு உணர்ந்துள்ளதை, இது பிரதிபலிக்கிறது. சீனக் கிராமத்தின் வளர்ச்சிக்கு, நிதி ஆதரவு மிகவும் முக்கியமானது என்று சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணை தலைவர் செங் சி வே தெரிவித்தார். அவர் கூறியதாவது:
மூலதனம், தொழிலாளர்கள், ஒட்டுமொத்த ஆற்றல் ஆகியவை, வேளாண் துறையின் வளர்ச்சிக்கு மூன்று முக்கிய காரணிகளாகும். மூலதனம் இல்லாமல், வேளாண் துறை வளர்ச்சியடைய முடியாது. இதனால், நிதி துறையின் பல்வேறு தரப்புகள் சேர்ந்து, கிராமத்தில் மூலதனக்குறைவு என்ற பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றார் அவர்.
அரசு வங்கிகள் மூலம், விவசாயிகளுக்கு கடனை வழங்குவது, தற்போது விவசாயிகளின் முதலீட்டை விரிவடைய செய்யும் நல்ல நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது, சீனாவின் மூன்று அரசு வங்கிகளில் ஒன்றான சீனத் தேசிய வளர்ச்சி வங்கி, விவசாயிகளுக்கு கடனை வழங்க தொடங்கியுள்ளது. கடன் வழங்குவதில் உள்ள இடர்களையும், கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் செலவையும் குறைக்கும் பொருட்டு, இந்த வங்கி உள்ளூர் அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து, கிராமங்களில் பல நம்பிக்கை சங்கங்களை நிறுவியுள்ளது. இச்சங்களின் மூலம் கடன் விண்ணப்பம் செய்தவர்களின் நம்பகத்தன்மை மற்றும் பணத்தைத் திரும்ப செலுத்தும் ஆற்றலை மதிப்பிட்டு, வங்கிகளால் பரிசீலனை செய்த பிறகு, கடன் வழங்கும் என்று இவ்வங்கியின் தலைவர் சென் யுவான் செய்தியாளரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
உள்ளூர் அரசுகளுடன் ஒத்துழைத்து, நம்பிக்கை சங்கத்தின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, கிராம நம்பிக்கை அடிப்படைக்கு ஆதரவை அளித்து, சில விவசாயிகளுக்கு கடன் வழங்கும். கடன் பெறுவதன் மூலம், முதலீட்டைத் திரட்டும் இந்த முறை தொடர்ந்து இயங்கி வருகிறது என்றார் அவர்.
நிதி ஆதரவை வழங்கியதுடன், கிராமக் கூட்டுறவுக் கடன் அமைப்புகளை கிராம வணிக வங்கிகளாக சீர்திருத்தி, புதிய நிர்வாக அமைப்பு முறையையும் கருத்துக்களையும் உட்புகுத்தி, செயலாற்றலை உயர்த்த, சீன அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, சீனாவில் இத்தகைய 72 வங்கிகள் நிறுவப்பட்டுள்ளன. வேளாண் துறையின் வளர்ச்சியில் இவை பங்காற்றியுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார். பெய்ஜிங் கிராம வணிக வங்கியின் இயக்குநர் ஜின் வே ஹுங் கூறியதாவது:
தற்போது, வேளாண் துறையிலான முதலீடு, மொத்த முதலீட்டில், 67 விழுக்காடாகும். பெரும்பாலான கடன், கிராம வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது எனலாம் என்றார் அவர்.
விவசாயிகள் முதலீட்டைத் திரட்டுவதில் விவசாயிகளின் இன்னல்களைத் தீர்ப்பதோடு, சீனாவின் வேளாண் துறை காப்பீடும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 2005ம் ஆண்டின் ஜனவரி திங்களில், ஹெலூங்சியாங் மாநிலத்தில் யியாங்குவாங் வேளாண் துறை காப்பீடு நிறுவனம் நிறுவப்பட்டது. இதுவே, சீனாவில் முதல் வேளாண் துறை காப்பீட்டுத் தொழில் நிறுவனமாகும். கடந்த ஆண்டில், இந்நிறுவனம், சுமார் 15 லட்சம் ஹெக்டர் விளை நிலங்களுக்குக் காப்பீடு அளித்துள்ளது. காப்பீடு வருமானம், 20 கோடி யுவானைத் தாண்டியது. கடந்த ஜூன் திங்களில் ஹெலூங்சியாங் மாநிலத்தின் சில பகுதிகளில் கடும் உறைப்பனியால் பேரழிவு நிகழ்ந்தது. காப்பீட்டுத் தொழில் நிறுவனம் உரிய நேரத்தில் இழப்பீடு வழங்கியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உடனடியாக மீண்டும் உற்பத்தியில் ஈடுபடத் துவங்கினர் என்று இந்தக் காப்பீடு நிறுவனத்தின் தலைமை மேலாளர் சுன் சான் சியுன் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
கிராம நிதி அமைப்பு முறை கட்டுமானத்தை வலுப்படுத்துவதில் சீனா செய்ய வேண்டிய பணி மிக அதிகம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். கிராம நிதி மேம்பாடு பற்றி ஹேன் சுன் கூறியதாவது:
விவசாயிகள் கடன் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகளைக் குறைத்து, கடன் நிதியை மேலும் அதிகமாக கிராமத்தில் ஒதுக்கீடு செய்து, விவசாயிகளின் சேமிப்பைக் கொண்டு, அவர்களுக்கு கடன் வழங்கி, வேளாண் துறை காப்பீட்டை வளர்ப்பது, கிராம நிதி மேம்பாட்டு அமைப்புமுறை என்று அழைக்கப்படும் என்றார் அவர்.
|