ஹுங் அர்ரும் நானும் கேபின் ஜன்னலில் சாய்ந்தபடி வெளியே மங்கலாகத் தெரிந்த காட்சிகளை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென,
"மாமா, நாம எப்போ திரும்ப போவோம்?" என்று ஹுங் அர் கேட்டாள்.
"திரும்பப் போறாதா? இன்னும் புறப்படவே இல்லே. அதுக்குளே திரும்பப் போகணுங்கிறியே."
"இல்லே. ஷுவய் ஷெங் என்னை அவனோட வீட்டுக்கு வரச் சொன்னான்." மிகவும் கவலையோடு தன்னுடைய கரிய விழிகளை அகல விரித்தபடி பேசினாள்.
எனக்கும் அம்மாவுக்கும் மிகவும் துக்கமாக இருந்தது. ஆக, திரும்பவும் ஜுன்ட்டுவின் பெயர் அடிபட்டது. நாங்கள் சாமான்களைக் கட்டத் தொடங்கிய பிறகு, தயிர்க்கடை யாங் தினமும் வந்ததாக அம்மா சொன்னாள். ஒரு நாளைக்கு முன்பு அவள் சாம்பல் குவியலில் இருந்து ஒரு டஜன் கிண்ணங்களையும் தட்டுக்களையும் எடுத்தாளாம். அவற்றை ஜுன்ட்டுதான் ஒளித்து வைத்திருக்க வேண்டும் என்று அடித்துச் சொன்னாளாம். இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு யாங் மிகுந்த சந்தோஷத்தோடு நாய்க் கூண்டை எடுத்துக் கொண்டு மாயமாய் மறைந்து விட்டாள். (நாய்க் கூடு என்பது கோழிப் பண்ணைக்காரார்கள் பயன்படுத்துவது. அது மரத்தினால் செய்யப்பட்ட ஒரு கூண்டு. அதில் வைக்கப்படும் கோழிகள் மட்டுமே எக்கி எக்கி கொத்தித் தின்ன முடியும். நாய்கள் அநதக் காட்சியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.) அவ்வளவு பெரிய பாதங்களுடன் எப்படி இவ்வளவு வேகமாக அவளால் ஓட முடிந்தது! அதிசயம்தான்.
எனது பழைய வீடு எனக்குப் பின்னால் வெகு தொலைவில் மங்கி மறைந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றியிருந்த மலைகளும், ஆறுகளும் கூட மெல்லமெல்ல மறைந்தன. எனக்கு வருத்தமில்லை. என்னைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத பெருஞ்சுவர் எழும்பி, என்னை எனது தோழர்களிடம் இருந்து பிரிப்பதை மட்டும் உணர்ந்தேன். எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது. தர்பூசணிகளுக்கு இடையே வெள்ளித் தாயத்து அணிந்த அந்த சிறு வீரனின் முகம் முதலில் பட்டப்பகல் போல் தெளிவாக தெரிந்தது. இப்போது திடீரென மங்கத் தொடங்கியதும் எனது மனச்சோர்வு தீவிரமடைந்தது.
அம்மாவும் ஹுங் அர்ரும் தூங்கி விட்டனர்.
படகுக்கு கீழே கிழிபடும் தண்ணீரின் ஓசையை கேட்டபடியே நான் படுத்திருந்தேன். நான் விட்டுவிலகிப் போய்க் கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. எனக்கும் ஜுன்ட்டுவுக்கும் இடையில் பெரிய தடுப்பு இருக்கும் போது எங்கள் குழந்தைகளுக்கு இடையில் எப்படி இன்னமும் நிறைய இணக்கம் இருக்கிறதே. எப்படி? இந்த நேரத்தில் ஷுவய் ஷெங்கை ஏன் ஹுங் அர் நினைக்க வேண்டும்? யோசித்தேன். எங்கள் குழந்தைகள் எங்களைப் போல இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் என்னைப் போல இயந்திரமாகவோ, ஜுன்ட்டுவைப் போல முட்டாள்தனமாக துன்பப்பட்டுக் கொண்டோ, அல்லது மற்றவர்களைப் போல சக்தியை எல்லாம் விரயமாக்கிக் கொண்டோ இருக்கக் கூடாது என நினைத்தேன். நாங்கள் அனுபவித்தறியாத ஒரு புது வாழ்க்கை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
இந்த நம்பிக்கை என்னைப் பயமுறுத்தியது. சாம்பிராணித் தட்டும், மெழுகுவத்திகளும் வேண்டும் என்று ஜுன்ட்டு கேட்ட போது, நான் விழுந்துவிழுந்து சிரித்தேன். இன்னமும் விக்கிரக வழிபாட்டை விடாமல் இருக்கிறானே! ஆனால், இப்போது என்னுள் எழுந்த நம்பிக்கையும் ஒரு விக்கிரகம் போன்றதுதான். எனக்கு நானே உருவாக்கிக் கொண்ட ஒரு விக்கிரகம் ஒரே வித்தியாசம். அவன் விரும்பி வேண்டிக் கொண்டது எட்டும் தொலைவில் இருந்தது. நான் விரும்புவதையோ அவ்வளவு எளிதில் அடைந்துவிட முடியாது.
நான் லேசாகக் கண்ணயர்ந்த போது, என் கண் முன்னே பச்சைப்பசும் கடற்கரை விரிந்தது. மேலே, கருநீல வான் வெளியில் மென்னிறத்தில் வட்ட நிலா தொங்கிக் கொண்டிருந்தது. நம்பிக்கை இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது. அது பூமியின் பாதையைப் போன்றது. ஆரம்பத்தில் மண்ணில் பாதை இருப்பது இல்லை. மனிதர்கள் நடந்து நடந்து தடம் பாதையாகி விடுகிறது.
|