• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-11 21:56:12    
பார்வை ஒன்றே போதுமே

cri

அண்மையில் உலகெங்கும் கொண்டாடப்பட்ட வாலன்ட்டைன் டே எனப்படும் காதலர் தினம் சீனாவிலும் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் கொண்டாடப்பட்டது. இதனால் ஒற்றை ரோஜாக்களும், சாக்லேட்டுகளும், ஐஸ்கிரீம்களும் விறுவிறுப்பாக விற்பனையாயின. மும்முரமாக முத்தப்பரிமாற்றங்களும் நடைபெற்றன. காணும் இடமெங்கும் காதல் நிரம்பிவழிந்தது. ஆனால் இது சிறிது சிந்தனைச் சலசலப்பையும் ஏற்படுத்தி விட்டது.

பொது இடங்களில் முத்தமிடுவதும், கட்டித்தழுவுவதும் சீனப் பாரம்பரியத்திற்கு உகந்த செயல்தானா என்ற கேள்விக்கணைகள் பாய்ந்தன. ஹாலிவுட் படங்களின் படையெடுப்பால்தான் சீனப் பண்பாடு சிதைகிறது என்ற விமர்சனங்கள் பெரியவர்களிடையே எழுந்தன. ஒரு பேராசிரியர் நண்பர் சொன்னார்! "இந்த அமெரிக்காவால் பொருளாதாரத்திலும் இராணுவ வல்லமையிலும் சீனாவை அண்ட முடியவில்லை. இப்போது பண்பாட்டுப் படையெடுப்பின் மூலம் சீன இளைஞர்களின் மனங்களை மாசுபடுத்தி, சீனாவை வீழ்த்தப்பார்க்கிறது." இது உண்மையாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஏனென்றால், பலம் குறைந்தவனைத்தான் வீழ்த்த முடியும். சீனப் பண்பாடு அவ்வளவு பலவீனமானதா என்ன?

பாரம்பரியச் சீனப் பண்பாடு, மேற்கத்திய பண்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இரண்டுக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு என்னவென்றால், உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவது மேலை நாட்டு மக்களின் பழக்கம். அதிலிருந்து தோன்றியது தான், இந்த பகிரங்க முத்தம். ஆனால் சீனப் பண்பாடோ அப்படியல்ல. எதையுமே பூடகமாக, மூடுமந்திரமாக, மறை முகமாக செய்வதுதான் சீனப் பண்பாட்டின் சிறப்பு. இந்தியப் பண்பாடும் அப்படித்தானே! இன்றளவுக்கும் இந்தியாவில் பொது இடங்களில் கட்டிப்பிடித்து முத்தமிடுவது என்பது கனவுகளிலும், கனவுகளின் வெளிப்பாடான திரைப்படங்களிலும்தானே சாத்தியம்!

சீனாவில் திறப்புக் கொள்கை 80ஆம் ஆண்டுகளில்தான் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பெல்லாம், சீனர்கள் "வொ அய் நி" என்று ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டது இல்லை. அதாவது ஒரு இளைஞன், இளம் பெண்ணிடம் போய் "நான் உன்னைக் காதலிக்கிறேன்," என்று சொல்ல மாட்டானாம். சீனத் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியை ஒரு நண்பர் நினைவுபடுத்தினார். அதிலே ஒரு இளைஞன், தன் காதலியிடம் போய் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொன்னதும், அவள் அவனுடைய கன்னத்தில் பஸிச் என்று முத்தம் கொடுப்பதற்குப் பதிலாக, பளார் ஒன்று ஒரு அறை விட்டாளாம். திகைத்துப் போய் நின்ற அவனிடம் "சொல்லாதே, செய்து காட்டு," என்றாளாம். உண்மைக் காதல் வார்த்தைகளில் கலந்து விரயமாகிவிடக்கூடாது. நான் விரும்புகிறேன் என்று சொன்னாலே போதும். காதல் கனிந்து விடுகிறது. எந்த ஒரு உணர்வுமே வார்த்தைகளால் வெளியேறும் போது மலிவாகி விடுகிறது. இது எனக்கு கல்லூரி நாட்களில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறது. நானும், நண்பர் பீட்டரும் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நடந்து கொண்டிருந்த போது, ஒரு உணவுவிடுதியின் முன்பு நண்பர் திடீரென நின்றார். வேகமாகப் போய் கல்லாவில் உட்கார்ந்திருந்த மொட்டையடித்த ஒருவரின் முன்னால் போய் நின்று அவருடைய கையைப் பற்றிக் கொண்டு சிறிது நேரம் பேசாமல் நின்றார். அவரும் எழுந்து நின்று கொண்டார். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கண்கள் மட்டும் லேசாகக் கலங்கின. பின்னர் நண்பர் வந்து விட்டார். "என்னாச்சு பீட்டர்?" என்று கேட்டேன்.

"போனவாரம் அவரோட அய்யா இறந்து போனாரு. துக்கம் விசாரிச்சேன்," என்றார்.

"நீங்க ஒண்ணும் கேட்கவே இல்லியே," என்றதற்கு, "ஒண்ணும் கேட்க வேண்டியதில்லை. கையைப் பிடிச்சாலே துக்கம் கேட்டமாதிரிதான்" என்றார் நண்பர்.

காதலில் மட்டும் தான் என்றில்லை. பொதுவாகவே சீனர்கள் முன்பு வெளிப்படையாக உணர்வுகளை பேச்சில் வெளிப்படுத்துவதில்லை. வெளியூர் செல்லும் குழந்தைகளை வழியனுப்பும் பெற்றோர்கள் கூட அவர்களைத் தழுவி, முத்தம் கொடுத்து வழியனுப்புவதில்லை. மாறாக, தோள்பட்டையில் லேசாகத் தட்டிக் கொடுத்து, அன்பு கனியப் பார்ப்பார்கள். அதே போல, பெற்றோர்கள் ஏதாவது வாங்கிக் கொடுத்தால் குழந்தைகள் "தேங்க்யூ" என்று சொல்வதில்லை. நன்றியோடு பார்ப்பார்கள்.

அன்பும் காதலும் ஆறாவது அறிவால் உணரப்பட வேண்டிய உணர்வுகள் வாய்வார்த்தையால் வீணாக்கப்பட வேண்டியவை அல்ல. பார்வை ஒன்றே போதுமே!