• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-17 17:22:13    
வியர்த்து விறுவிறுத்து

cri

நமக்கு உடம்பில் எப்போது வியர்கிறது?உழைத்துக் களைக்கும் போது, வேர்வை மண்ணில் சொட்டச்சொட்ட வேலை செய்திருக்கிறேன் என்று பீற்றிக் கொள்கிறோம். தெருமுனையில் திடீரென ஒரு நாய் நம்மைப் பார்த்து உர்ரென்று முறைக்கும் போது, பயத்தில் வேர்த்து வெலவெலத்துப் போகிறோம்.

கொளுத்தும் கத்திரி வெய்யிலில் நடையாய நடந்து வீடு திரும்பும் போது, முகமெல்லாம் வேர்வை வழிந்தோட"ஸ், அப்பாடா"என்று நிழலுக்குள் நுழைகிறோம்.

இவ்வாறாக, உடம்பு வெப்பம் அதிகரிக்கும் போதும், உடம்பு அதிகமாக உழைக்கும் போதும், உணர்வுகள் நம் உள்ளத்தில் திக்கு முக்காடும் போதும், நமது உடம்பில் இருந்து வியர்வை வெளிப்படுகிறது. பொதுவாக வியர்ப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனென்றால் இது உடம்பின் தட்டவெப்பத்தை இயல்பு நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

ஆனால் சிலருக்கோ சும்மா இருக்கும் போதே வியர்த்துக் கொட்டுகிறது. அவர்களுடைய உள்ளங்கைகள் கூட வேர்த்து கசகசவென்று ஆகிவிடுகின்றன. இதை ஒரு கோளாறு என்கின்றனர் மருத்துவர்கள். அதற்கு ஆங்கிலத்தில் ஹைப்பர் ஹைடிராஸிய் என்று பெயர்.

நரம்பு மண்டலம் மிக வேகமாக வேலை செய்யும் போது உடம்பில் தேவைக்கு அதிகமாக வியர்வை சுரந்து, கைகளிலும் கக்கங்களிலும் பாதங்களிலும் கசகச என்றாகி, சங்கடமான ஒரு நிலை ஏற்படுகிறது. மேலும் உடம்பில் உள்ள அழுக்குடன் வியர்வை கலக்கும் போது ஒருவிதமான கத்தாழை நாற்றம் வீசுகிறது. இந்த உடம்புக் கோளாறை பெரும்பாலான சீன மருத்துவர்கள் அலட்சியம் செய்துள்ள வேளையில், மக்கள் விடுதலை ராணுவத்தின் விமானப்படை மருத்துவ மனையைச் சேர்ந்த டாக்டர் ஹு ஜெ யோங், பொது மக்களிடையே வியர்வை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார். அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இரண்டாண்டுகள் வேலை செய்யச் சென்றிருந்த போது, அளவுக்கு அதிகமாக வியர்ப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பற்றிக் கற்றுக்கொண்டார்.

வியர்ப்பது ஒரு வியாதியல்ல. ஆனால், சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தி, ஒருவரின் வேலையைப் பாதிக்கிறது. உள்ளங்கையில் வியர்ப்பதால் கணிணியில் தட்டச்சு செய்யும் போது வியர்வை சிந்தி, கணிணியின் மின்சுற்று சேதமடைந்து விட்டதாக ஒரு நோயாளி டாக்டர் ஹு விடம் கூறினார். மேடையில் பேசும் போது, நெற்றியில் வியர்வை வழிந்து, இந்த ஆளுக்கு மேடைப்பயம் போகலையோ என்று மற்றவர்களை நினைக்க வைக்கிறது. கோடைகாலத்திலோ கக்கத்தில் வேர்த்து, சட்டையில் கறைபடிகிறது.

ஒருவருக்கு வியர்த்துக்கொட்டினால், இவர் ஒரு பயந்தாங்கொள்ளி என்றோ, எதையோ மூடிமறைக்கப் பார்க்கிறார் என்றோ மற்றவர்கள் எண்ணுகிறார்கள். சிலருக்கு முகத்தில் முத்துமுத்தாக வியர்வை அரும்பி, பார்ப்பதற்கே அழகாக இருக்கும். மணவறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மணப்பெண்ணின் முகத்தில் சரம் கோர்த்த வியர்வை அரும்புகளை நீங்கள் கண்டு ரசித்தது இல்லையா?வேறு சிலருக்கோ, வியர்வை ஆறாக வழிந்தோடு. இப்படிப்பட்டவர்கள் எதையோ கண்டு அரண்டவர்களைப் போல முழிப்பார்கள் உடம்பில் ஊளைச்சதை போட்டவர்களுக்குத் தான் பொதுவாக நிறைய வியர்க்கிறது. அமெரிக்காவில் 2.8 விழுக்காடு மக்களுக்கு வியர்வைக் கோளாறு இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால் ஆசிய நாடுகளில் வசிக்கும் மக்களுக்குத் தான் அதிகம் வியர்க்கிறதாம்.

இப்படி அளவுக்கு அதிகமாக வியர்ப்பதற்கு என்ன காரணம் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்பட வில்லை. இது ஒரு பரம்பரைக் கோளாறாக இருக்கலாம் என்கிறார் மருத்துவர் ஹு.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஹைப்பர்தைராய்டு, ஊளைச்சதை அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது.

இதற்கு சில மருந்துகள் இருக்கின்றன. ஆனால் அவை நீடித்த பயனளிப்பதில்லை. ஆகவே, முகம், உள்ளங்கைகள், கக்கம் ஆகிய பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வியர்க்கும் நோயாளிகளுக்கு, வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டும் நரம்புகளைக் கட்டுப்படுத்துவதற்காக என்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை அளிக்கிறார். டாக்டர் ஹு, இதுவரை, இத்தகைய 60 அறுவை சிகிச்சைகளை இவர் செய்திருக்கிறார். பாதங்களில் அளவுக்கு அதிகமாக வியர்ப்பவர்களுக்கு அடிவயிற்றில் லும்பர் சிம்பதெக்டமி என்ற அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

ஆனால் இது கொஞ்சம் சிக்கலான அறுவை சிகிச்சை. உடம்பு முழுவதும் அளவுக்கு அதிகமாக வியர்த்தால், அதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது என்கிறார் டாக்டர் ஹு.