ச்சி தேசத்தில் ஒரு விந்தை மனிதன் வசித்து வந்தான். அவன் நடந்தால் நிற்க மறந்துவிடுவான். தூங்கத் தொடங்கினால் கண்விழிக்க மறந்துவிடுவான். அவனைப் பற்றி மனைவிக்கு ஒரே கவலை. ஒரு நாள், "இந்தா பாருங்க. உங்களைத்தானே பக்கத்து தேசத்துல அய் வைத்தியர்னு ஒருத்தர் இருக்காராம். அவர் செத்த பிணத்தை கூட உயிரோட எழும்ப வச்சிருவாராம். போய் அவர்கிட்ட உங்க உடம்பைக் காட்டுங்களேன்" என்று கெஞ்சினாள்.
கணவனும் ஒப்புக் கொண்டான். "ஆகா! நல்ல யோசனை" என்று மனைவியைப் பாராட்டி விட்டு, குதிரையில் ஏறிப் புறப்பட்டான். கூடவே கையில் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டான். 30 மைல் கடந்து சென்றிருப்பான். அதற்குள் வயிற்றைப் புரட்டியது. "சரி, வயிற்றைக் காலி பண்ணிருவோம்" என்று நினைத்து குதிரையை விட்டு குதித்தான். அம்பை தரையில் குத்திவைத்தான். குதிரையை பக்கத்தில் இருந்த மாத்தில் கட்டினான். மரத்துக்குப் பின்னால் உட்கார்ந்து வயிற்றைக் காலி செய்து விட்டு, எழும்பி நின்றவன் இடது பக்கம் திரும்பிப் பார்த்தான். தரையில் குத்திக் கொண்டு ஒரு அம்பு நின்று கொண்டிருந்தது. அது தான் குத்தி வைத்த அம்புதான் என்பதை மறந்து விட்டு,
"ஆகா! மயிரிழையில் உயிர் தப்பினேனே! எந்தப் பயல் நம் மீது அம்பு விட்டான்னு தெரியலியே" என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.
வலது பக்கம் திரும்பிப் பார்த்தான். அங்கே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது. அது தன்னுடைய குதிரைதான் என்பதையும் மறந்து விட்டான்.
"நல்ல வேளை, பயந்தே போயிட்டேன். எந்தப் பயலோ இங்க குதிரையை கட்டி வச்சிருக்கான். இதுல ஏறி தப்பிச்சிர வேண்டியதுதான்" என்று தீர்மானித்து, குதிரையை அவிழ்ப்பதற்காக திரும்பியவன், கால் தடுமாறி தான் கழித்த மலத்தின் மீதே மிதித்து விட்டான்.
"எந்த நாயோ இங்கே விட்டை மோட்டு வச்சிருக்கு, இப்போ என் செருப்பு அசிங்கமாயிடுச்சே," "என்ன செய்றது?" என்று புலம்பியபடியே, குதிரையில் ஏறி சாட்டையை சொடுக்கினான். தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது போல தலை தெறிக்க குதிரையை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வீட்டுக்கு முன்னால் வந்து இறங்கியவனுக்கு ஒரே திகைப்பு, முன்னும் பின்னுமாக நடந்து சென்று உற்றுப் பார்த்தான்.
"இது யார் வீடுன்னு தெரியலியே. ஒரு வேளை அய் வைத்தியர் இங்க தான் குடியிருக்காரோ" என்று நினைத்தபடி கதவைத் தட்டினான். மனைவி கதவைத் திறந்ததும் கணவன் நின்று கோலத்தைக் கண்டு திடுக்கிட்டாள். அவளுக்கு புரிந்துவிட்டது. சரமாரியாகத் திட்டித் தீர்த்தாள். அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
"யார் இந்தப் பொம்பளை? நான் இவளை இதுக்கு முன்னே பார்த்ததே இல்லையே." "ஏ, பொண்ணே என்னை ஏன் திட்டுறே" என்று கேட்டான்.
|