க்ளீட்டஸ்: புத்தாண்டு நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ள திருநெல்வேலி கடையாலுருட்டி நேயர் பிச்சைமணி அன்மையில் சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் 4 நாடுகளில் பயணம் மேற்கொண்டு 53 ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளமை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி, ஆசிய அமைதியை நிலைநாட்ட நட்புறவுடன் வாழ சீனா மேற்கொள்ளும் நகர்வுகள் பாராட்டுக்குரியவை என்றுள்ளார். மேலும், தமிழ்மூலம் சீனம் கற்பிப்பதில் திரு.தமிழ்ச்செல்வம் மற்றும் வான்மதி மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலன் தரும் என்பது திண்ணம் என்றுள்ளார். தாங்கள் தயாரித்த பாடங்களை தயவு செய்து அனுப்பி வைக்கவும் என்றும் கேட்டுள்ளார்.
வாணி: நேயர்கள் சீனமொழியை கற்க ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி. நீங்கள் கேட்ட பாடங்கள் விரைவில் அனுப்பப்படும்.
க்ளீட்டஸ் நீங்கள் சீன மொழியில் ஏதேனும் கற்றுக் கொண்டீர்களா? க்ளீட்டஸ்: நான் சீன மண்ணில் கால் பதித்து இன்றோடு 10 நாட்கள் ஆகின்றன. அதிகம் கற்றுக்கொள்ளவில்லை.
வாணி: பரவாயில்லை, நீங்கள் விரைவில் கற்றுக்கொள்வீர்கள். நாங்கள் உங்களுக்கு உதவிசெய்வோம். அடுத்து யாருடைய கடிதம்.
க்ளீட்டஸ்: அடுத்து நேயர் நேரம் குறித்து தலைநாயர் நேயர் பரசலூர். பி.எஸ்.சேகர் எழுதியுள்ளார். சோழன் சீன வானொலி மன்ற தலைவர் கலைவாணன் ராதிகா பேட்டியில் தெரிவித்தவாறு நேயர் நேரத்தை வாரத்திற்கு இரு முறையாக ஒலிப்பரப்பலாம், அதில் வான் அஞ்சலுக்கு ஒரு நாள், மின்னஞ்சலுக்கு ஒரு நாள் என்று செயல்படுத்தலாம், மின்னஞ்சலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, மாற்றம் தேவை என்று எழுதியுள்ளார்.
வாணி: திரு. சேகரின் கருத்துக்கு நன்றி. மின்னஞ்சலுக்கு அதிக முக்கியத்துவம் வான் அஞ்சலுக்கு குறைவான முக்கியத்துவம் என்ற பாகுபாடுகள் நிச்சயம் இல்லை. வான் அஞ்சலோ, மின்னஞ்சலோ நேயர்களின் அனைத்து கடிதங்களும் முக்கியத்துவம் தரப்படுகின்றன. மற்றபடி வாரத்தில் இரண்டு முறை நேயர் நேரம் இடம்பேறவேண்டும் என்பது போன்ற, நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் என்பது அவ்வளவு எளிதாக செய்யமுடியாது.
க்ளீட்டஸ்: அடுத்து வேலூர் மாவட்டம் திமிரி ராமபாளையம் நேயர் முணுகப்பட்டு கண்ணன் சேகர், 7.2.2006 அன்றைய நிகழ்ச்சியின் மூலம் இந்திய புத்தமத நிழற்படக் கண்காட்சி அண்மையில் சீனாவில் நடைப்பெற்றதை அறிந்து கொண்டதாகவும், இக்கண்காட்சி இந்திய சீன பண்பாட்டு நட்புறவுக்கு அடிகோலும் என்பது வரவேற்கத்தக்கது என்றும் எழுதியுள்ளார்.
வாணி: இந்திய சீன நாடுகளிடையிலான நட்புறவு தொடர்பான கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பை கேட்டு கட்டுரை எழுத தயாராகிவிட்டீர்களா நேயர்களே...உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..சரி அடுத்த கடிதத்தை பார்ப்போமா க்ளீட்டஸ்.
க்ளீட்டஸ்: அடுத்து சென்னை 5 நேயர் எஸ். ரேணுகாதேவியின் கடிதம். சீன பண்பாடு, மலர்சோலை, ஆகிய நிகழ்ச்சிகள் குறித்து எழுதியுள்ள ரேணுகாதேவி அவர்கள், அறிவியல் உலகத்தில் ஆப்பிரிக்க குகைகளில் தோன்றிய ஆதி முதல் மனிதன், பற்றிய செய்தி, ஆழ்கடல் ஆய்வு, பான்டா கரடி ஆகியவை குறித்த தகவல் நன்று என்றுள்ளார். நாமக்கல் சேந்தமங்கலம் நேயர் திரு. கோபி, புத்தாண்டு நிகழ்ச்சி குறித்து விரிவான கடிதம் ஒன்றை எழுதி தனது சீன மக்கள் சிவப்பு நிறத்தை பயன்படுத்துவதன் பின்னணி பற்றிய வாணியின் விளக்கதிற்கு நன்றி கூறியுள்ளார்.
வாணி: நேயர் கோபி அவர்களுக்கு என் நன்றிகளும். நிகழ்ச்சிகள் நேயர்களுக்கு பயன் தருவதாக அமைவது எங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது.தொடர்ந்து பயனுள்ள நிகழ்ச்சிகளை உங்கள் சீன வானொலியில் கேட்டு மகிழலாம். அடுத்த கடிதம் யாருடையது.
|