மாமனார் வீட்டுக்கு விருந்தாட வந்த மாப்பிள்ளை நீண்ட நாட்கள் தங்கி விட்டார். 'சே! இந்த வெட்டிப் பயலுக்கு சமைச்சுப் போட்டே ஆண்டியாயிருவேன் போலிருக்கே' என்று சலித்துக் கொண்ட மாமனார் ஒரு நாள் மெல்ல தயங்கித் தயங்கி மாப்பிள்ளையிடம் பேச்செடுத்தார்.
"மாப்பிளே, நீங்க வந்து இவ்வளவு நாள் எங்களோட தங்கியிருந்தது ரொம்பரொம்ப சந்தோஷம். ஆனா, வீட்டுல இருந்த கோழிகளை எல்லாம் அடிச்சி விருந்து வச்சாச்சி. ஒத்தப் பொட்டு தானியம் இல்லே. அதனால..." என்று இழுத்தார் மாமா.
மாமனாரின் இந்த நாசூக்கான பேச்சு மாப்பிள்ளைக்கு உறைக்கவில்லை. அவ்வளவு முரட்டுத் தோல். "அதனால என்ன மாமா? நான் வர்றப்போ மலைச்சரிவுல ஏகப்பட்ட மான்கள் கூட்டம் கூட்டமா மேஞ்சிக்கிட்டு இருந்தது. நல்லா கொழுத்த மான்கள். அதுல ஒண்ணை போய்பிடிச்சுட்டு வாங்க. போட்டுறுவோம். ஒரு மாசத்துக்கு வச்சித திங்கலாம்" என்று யோசனை சொன்னான்.
"மாப்பிளே! நீங்க வந்தே ஒரு மாசத்துக்கு மேலே ஆச்சு. இவ்வளவு நாள் அந்த மான்கள் அங்கேயே இருக்குமா என்ன?" என்று சந்தேகத்தை கிளப்பினார்.
"அதெல்லாம் இருக்கும் மாமா. நல்ல தீனி கிடைக்கிறப்போ யார்தான் ஒரு இடத்தைவிட்டுப் போவாங்க..."
இந்த மாப்பிள்ளை இப்படி ஒட்டிக் கொண்டார் என்றால் இன்னொரு மாப்பிள்ளையின் தந்திரத்தைக் கேளுங்கள்.
மருமகன் வந்து நீண்ட நாட்கள் சங்கிவிட்டதால் வெறுத்துப்போன மாமனார் ஒரு நாள் மெல்லச் சொன்னார்.
"மாப்பிளே, வீட்டுல தானியம் எதுவும் இல்லே. சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம்?"
"மாமா நான் வந்த குதிரை இருக்குதே. அதை போட்டுறுவோம். ரொம்ப நாளைக்கி கறிவரும்" என்றான்.
"அடப்பாவி, குதிரை இல்லேன்னா இவன் திரும்பிப் போக மாட்டானே" என்று பயந்து போனா மாமனார்.
"அய்யய்யோ மாப்பிளே, குதிரை எல்லாம் வேணாம். அப்புறம் நீங்க சவாரி செய்ய முடியாம போகும்" என்றார்.
"அதப்பத்தி கவலைப்படாதீங்க மாமா. உங்க வீட்டு முற்றத்துல பாருங்க. எத்தனை கோழிகள், வாத்துகள்! இதுல ஒண்ணை உங்ககிட்ட கேட்டுவாங்கி. அதுல சவாரி செஞ்சுட்டுப் போறேன்" என்றான் கெட்டிக்காரத்தனமாக.
|