அரசு அதிகாரியாக இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட யெ ஹெங் கிராமத்திற்குத் திரும்பி, தமது வீரப்பிரதாபங்களை அளப்பதில் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்.
ஒரு முறை அவர் கடுமையாக நோய் வாய்பட்டார். "இனி அவ்வளவுதான். இந்த ஆள் கதை முடிந்தது" என்று நினைத்த எல்லோரும், அவரைக் கடைசியாகப் பார்த்து விடலாம் என்று சாரிசாரியாக வந்து போய்க் கொண்டிருந்தனர்.
"நான் சாகப்போறேன். அதப்பத்தி கவலை இல்லை. ஆனால் மறு உலகம் எப்படி இருக்குமோ... இவ்வளவு வசதிகள் அங்க இருக்குமான்னுதான் ஒரே கவலையா இருக்கு" என்று வந்தவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, "அதுப் பற்றி ஏன் கவலைப்படுறீங்க? அடுத்த உலகத்துல எல்லாம் நல்ல படியாத்தான் இருக்கும்" என்று தேற்றினார் படுக்கையைச் சுற்றி அமர்ந்திருந்த குட்டித்தலைவர்களில் ஒருவர்.
"அது எப்படி அவ்வளவு நிச்சயமாச் சொல்றே! முன்னப்பின்ன செத்து அனுபவமோ!" என்று ஆச்சரியப்பட்டார் யெ ஹெங்.
"அனுபவம் எல்லாம் ஒண்ணுமில்லே. சும்மா ஒரு யூகம்தான்."
"எப்படி... எப்படி?"
"இதுவரைக்கும் லட்சக்கணக்கான ஆட்கள் செத்திருப்பாங்க இல்லே."
"ஆமா."
"அவங்கள்ள யாராவது ஒருத்தர் திரும்பி வந்துருக்காங்களா?"
"இல்லே."
"அதான்... அடுத்த உலகம் நல்லபடியா இல்லேன்னா இது வரைக்கும் செத்துவங்க எல்லாம் திரும்பி வந்துருப்பாங்களே. அதனால, தலைவரே, நீங்க தைரியமா சாகலாம்."
|