
நான் பாளையங்கோட்டை யோவான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, பக்கத்து சேவியர் கல்லூரியில் ஒரு விலங்கியல் பேராசிரியர் பணியாற்றினார். அவர் எம். வி. ராஜேந்திரன். அவரை பாம்புப் பேராசிரியர் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். காரணம், எப்போதும் அவருடைய கோட்டுப்பைகளில் இரண்டு, மூன்று பாம்புகள் இருக்கும். கல்லூரிக்கு அவர் சைக்கிளில் வரும் போது, கழுத்தில் பாம்பு ஒன்று சுற்றுக் கொண்டிருக்கும்-சிவபெருமான் கருத்தில் இருப்பது போல. அவருடைய வீட்டில் வகை வகையான பாம்புகளை வளர்த்தார். அவருடைய குழந்தைகளுக்கும் பாம்புக்காதல் வந்து விட்டது. அவருடைய மகள் அருணாவும் தந்தை வழியில் பாம்புகளின் மேல் ஈடுபாடு கொண்டு, ஒரு விலங்கியல் பேராசிரியராக ஆகிவிட்டார்.

இவ்வளவு ஆண்டுகள் கழித்து பாம்புப் பேராசிரியர் பற்றிய நினைவுகள் எனநெஞ்சில் நிழபாடியதற்குக் காரணம். சீனாவில் நான் சந்தித்த ஒரு வண்ணத்துப்பூச்சி ஆசிரியர்.
மத்திய சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள லெளதி என்ற சிறு நகரில் ஒரு இடைநிலைப்பள்ளியில் உயிரியல் ஆசிரியராக இருக்கும் சாங் சுன் ஹே (Zhang Chun He), தமது வீட்டில் உள்ள சிறிய படிப்பறைக்கு "மூன்று வாசனைகள்" என்று பெயரிட்டிருக்கிறார். 8 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவு உள்ள பாலகளியை படிப்பறையாக மாற்றி, சன்னல் நெடுகிலும் மரப் பெட்டிகளை வளர்த்து, அவற்றில் கற்பூரம், ஆரஞ்சு மற்றும் சீனாவின் டூன் மரங்களை நட்டு வளர்க்கிறார். வேறு சில மலர்ச்செடிகளும் உள்ளன. வசந்தகாலம் வந்து, இந்தச் செடிகளில் பூக்கள் பூக்கும் போது, அந்தச் சிறிய படிப்பறை முழுவதும் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் இறகடித்துப் பறக்கின்றன. இந்த வகையில் 1998 முதல் கிட்டத்தட்ட 10,000 வண்ணத்துப்பூச்சிகளை இவர் வளர்த்திருக்கிறார். தமது படிப்பறையில் வண்ணத்துப்பூச்சிகளின் வாசனையும், மண் வாசனையும், புத்தகங்களின் வாசனையும் கலந்து வீசுவதால் மூன்று வாசனை என்று பெயர் வைத்திருக்கிறார். 37 வயதான சாங் தமது படிப்பறைக்குள் நழைந்ததுமே, வண்ணத்துப்பூச்சிகள் அவரது முகத்திலும், கைகளிலும் மொய்த்தபடி, அவருடைய வியர்வையை உணவாக உட்கொள்ளுமாம்.

சரி, சாங் சுன்ஹே எப்படி வண்ணத்துப் பூச்சிகளின் மீது ஈடுபாடு காட்டத் தொடங்கினார்? 1998ஆம் ஆண்டு கோடைகாலத்தில், தமது 5 வயது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு அற்புதக் காட்சி தெரிந்தது. ஒரு பெரிய வண்ணத்துப்பூச்சி முன்னே செல்ல, அதற்குப் பின்னால் இருபதுக்கும் அதிகமான சிறிய வண்ணத்துப் பூச்சிகள் அணிவகுத்தப் பறந்து சென்றன. பிரகாசமான சூரிய ஒளியில் அவற்றின் இறக்கைகள் பளபளத்தன. அந்தப் பெரிய வண்ணத்துப் பூச்சியைப் பிடிப்பதற்குள், அது பறந்து மலைப்பகுதிக்குள் மறைந்து விட்டது. அப்போது தான், நாமே வண்ணத்துப் பூச்சிகளை வளர்த்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. நூற்றுக்கும் அதிகமான வெவ்வேறு வகை கம்பளிப்புழுக்களைப் பிடித்து வளர்க்கத் தொடங்கினார். அவற்றுக்கு உணவாக, ஊருக்கு வெளியே சென்று பசுமையான புற்களை விடுங்கிக் கொண்டுவந்தார். வண்ணத்துப் பூச்சிகளுடன் தொடர்புடைய புத்தகங்களை எல்லாம் தேடிப்படித்தார். ஷாங்க்ச்சி மாநிலத்தின் சியான் நகரில் உள்ள வட மேற்கு வேளாண் மற்றும் வனவளப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ச்சோ யாவ் (Zho Yao) சீனத்து வண்ணத்துப்பூச்சிகள் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவருடன் தொடர்பு கொண்டு, 800 யுவான் விலை கொடுத்து அவருடைய புத்தகத்தை வாங்கினார்.
|