ஹான் வம்சத்தைப் பேரரசர் வூ ஆட்சியின் போது, அரண்மனைக்கு ஏராளமான அன்பளிப்புக்கள் வந்தன. அவற்றிலே ஒன்று ஒரு அபூர்வமான மது ஜாடி. அதிலே இருந்த மதுவைக் குடித்தால் மரணம் இல்லை என்று சொல்லப்பட்டது. எனவே அதை மிகவும் பாதுகாப்பாக மன்னர் வைத்தார். சாகாமல் இருக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது! ஒரு நாள் அரசவைப்புலவர் துங்பாங் ஷுவோ திருட்டுத் தனமாக அந்த மதுவில் கொஞ்சம் குடித்து விட்டார். இதைக் கேள்விப்பட்டதும் மன்னருக்கு ஒரே கோபம். கொதித்துபோய் அரசவையைக் கூட்டினார். அமைச்சர்களைக் கலந்தாலோசித்தார். கடைசியில் புலவரை விசாரித்தார்.
"நீ மதுவை குடிச்சியா?"
"ஆமாம் அரசே!"
"எப்படிக் குடிச்சே!"
"இதென்ன கேள்வி மன்னா? வாயாலதான்."
எடக்கு மடக்கான இந்தப் பேச்சு மன்னரின் ஆத்திரத்தைத் தூண்டியது.
"பாதுகாப்பாக வைக்கப்பட்ட மதுவை நீ திருட்டுத்தனமா குடித்தாயா?"
"ஆமாம் அரசே!"
"உனக்குத் தெரியும் அந்த மது எனக்காக வைக்கப்பட்டிருப்பது என்று, பின்னே ஏன் குடிச்சே?"
"அரசே! ஆசைக்கு அந்தஸ்து தெரியுமா? மரணபயம் இல்லாம இருக்கணும்னு எனக்கு ஆசை வந்தது."
"அப்படியா உனக்கு மரண தண்டனை, இவன் தலையை வெட்டுங்க" என்று மன்னர் உத்தரவிட்டார்.
மன்னரின் தலைவெட்டித் தீர்ப்பைக் கேட்டதும் துங் புலவர் அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.
"ஏன் சிரிக்கிறே?"
"மன்னா நான் குடித்த மது சாகா வரம் தருவது. சாகாமல் இருக்கணும் தான் நீங்க அதைக் குடிக்க விரும்பினீங்க. இப்போ உங்க உத்தரவுப்படி எனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அந்த மது போலி என்று ஆகாதா? அதை நினைச்சேன். சிரிப்பு வந்தது."
மன்னர் ஒரு கணம் யோசித்தார்.
"சரி, பிழைச்சுப் போ" என்று பெருந்தன்மையாக மன்னித்து விட்டார்.
|