திருடர்கள் பெரிய தந்திரக்காரர்கள். எவ்வளவு பெரிய ஞானியையும் மண்ணைக் கவ்வ வைத்து விடுவார்கள்.
ஒரு கிராமத்தின் கோயிலில் ஒரு பெரிய கண்டா மணி தொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஊர் வழியே நதியில் சென்று கொண்டிருந்த பக்கத்து ஊர் கொள்ளைக்காரர்களுக்கு அந்த மணி மீது ஒரு கண். அந்த மணியை உருக்கி, விவசாயக் கருவிகளைச் செய்து விற்றுவிடலாம் என்று திட்டம் போட்டார்கள். படகைத் துறையில் நிறுத்திவிட்டு கோயிலுக்கு வந்தனர். கஷ்டப்பட்டு மணியை கீழே இறக்கி, அதற்குள்ளே நிறைய மண்ணைத் திணித்துவிட்டு, சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடித்தனர். மணிக்குள் மண் இருப்பதால் ஒரு சத்தம் கூட இல்லாமல் மணி துண்டு துண்டாக உடைந்தது. அந்தத் துண்டுகளை தோளில் சுமந்து கொண்டு போய்விட்டனர். இவ்வளவு நடந்தும் அந்த ஊரில் ஒரு சிடு குஞ்சிக்குக் கூட தெரியாமல் போய்விட்டது.
இன்னொரு திருடன் பட்டப்பகலில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து, பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த அலங்காரமான மணியை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினான். வீட்டை விட்டு தெருவில் இறங்கியிருப்பான் அந்த வீட்டுக்காரக் கிழவனார் எதிரே வந்து விட்டார். உடனே திருடன் சமாளித்துக் கொண்டு, "என்ன தாத்தா! நல்ல மணி இருக்குது வாங்குறீங்களா? பூஜை அறையில் நன்றாக இருக்கும்" என்றான். அவரோ "எனக்கு வேண்டாம்பா. என் வீட்டு லேயே நல்ல மணி இருக்குது" என்றார் உடனே திருடன் மாயமாய் மறைந்து விட்டான். அவர் வீட்டுக்குள்ளே போய் பார்த்த போதுதான் விஷயம் புரிந்தது.
இன்னொரு திருடன் இவர்களைவிட கெட்டிக்காரன்.
ஒரு சமையல்காரன் பெரிய வாணலியை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு காட்டு வழியே பக்கத்து ஊருக்கு போய்க் கொண்டிருந்தான். வழியில் அவனுக்கு சிறு நீர் கழிக்க வேண்டியிருந்தது. உடனே வாணலியை இறக்கி வைத்துவிட்டு மரத்தடியில் ஒதுங்கினான்.
அந்த வழியே வந்த ஒரு திருடன் இதைக் கண்டுவிட்டான். உடனே அந்த வாணலியைத் தூக்கி தனது தலையில் சுமந்தபடியே அந்த சமையல்காரனுக்கு அருகில் போய் நின்று கொண்டு சிறு நீர் கழிக்கத் தொடங்கினான். சமையல்காரன் தனது காரியம் முடிந்ததும், சுற்று முற்றும் தேடினான். அவன் இறக்கி வைத்த வாணலியைக் காணவில்லை. அப்போது அந்தத் திருடன் சொன்னான்—
"காலங்கெட்டுக் கிடக்கு. அசந்து மறந்தா ஆளையே தூக்கிட்டுப் போயிருவாங்க. நீங்க இவ்வளவு கவனக் குறைவா இருக்கலாமா? என்னைப் பாருங்க வாணலியை தலையில் இருந்து கீழே இறக்கவே இல்லியே. இறக்கி வைத்திருந்தால் திருடன் இதையும் தூக்கிட்டுப் போயிருப்பான்."
|