• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-20 22:13:06    
குகை வீடுகள்

cri

ஆதிமனிதர்கள் குகைகளில் வாழ்ந்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது பயங்கரவாதி ஒசாமா பின்லாதேன் ஆப்கன் மலைக் குகைகளில் எவராலும் அணுக முடியாத பாதுகாப்பு அரணை அமைத்துக் கொண்டு ஒளிந்திருப்பதாகப் படித்திருக்கிறோம். ஆனால் சமவெளிப் பகுதியில் பூமிக்கு அடியில் குகை தோண்டி, ஒரு வீடு போலவே சகல வசதிகளுடன் வாழ்க்கை நடத்தும் புதுமையான மக்களை சீனாவில் காண முடிகிறது. ஹென்னான் மாநிலத்தின் சன்மெங்க்சியா நகரை ஒட்டியுள்ள கிராமங்களில் இந்தப் புதுமையான குகைக் குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. இந்தக் குகை வீடுகள் சற்றே வித்தியாசமானவை. மலைகளை ஒட்டியுள்ள குகைகளுக்கு, மலைச்சரிவுகளே சுவராக இருக்கும். ஆனால் இவற்றுக்கோ ஆதாரமாகச் சுவர் எதுவும் கிடையாது. பூமியில் ஆழமாகக் குழிதோண்டி, அந்தக் குழிக்குள்ளே குடைந்து, இந்த நிலத்தடிக் குகைவீடுகள் உருவாக்கப்படுகின்றன. இவை 4000 ஆண்டுகள் பழமையானவை, ஆனாலும், இன்றும் இவற்றில் மக்கள் வசிக்கின்றனர்-சிரமம் எதுவும் இன்றி.

ஹென்னான் மாநிலத்தின் சன்மெங்க் சியா நகரில் இருந்து 20 கி. மீ. தொலைவில் மியோஷங் (MIAOSHANG) கிராமம் உள்ளது. அங்கே பல நவீன ஒற்றை மாடி அல்லது பலமாடிக் கட்டிடங்கள் இருந்தாலும், ஊருக்கு வெளியே சமவெளியில் பூமிக்கு அடியில் குகை வீடுகளும் காணப்படுகின்றன. சமவெளியில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் செவ்வக வடிவிலான குழிகள் இந்தக் குகைக் குடியிருப்புக்களை பார்வையில் இருந்து மறைக்கின்றன.

ஒரு குகைக் குடியிருப்பைக் கட்டுவதற்கு முதலில் சதுர வடிவில் அல்லது செவ்வக வடிவில் பூமியில் ஒரு பள்ளம் தோண்டப்படுகிறது. 6 அல்லது 7 மீட்டர் ஆழத்திற்குப் பள்ளம் தோண்டிய பிறகு, அதன் நாலா புறங்களிலும் குடைந்து குகைகள் உருவாக்கப்படுகின்றன. பிறகு பள்ளத்தின் தரை சமதளமாக்கப்பட்டு, அதன் நடுவிலே ஒரு கினறு தோண்டப்படுகிறது. அந்தக் கிணறு மழை நீர் சேகரிப்புக்காகப் பயன்படுகிறது. மழைக்காலத்தில் பள்ளத்திற்குள் விழும் நீர் கிணற்றில் தேக்கப்பட்டு, கால்நடைகளுக்கும், மனிதர்களின் உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. கிணற்றில் தேங்கும் தண்ணீர் பூமிக்குள்ளேயே கசிந்து குகைகளின் சுவர்களைப் பலவீனப்படுத்தி விடாதா? அவ்வாறு நிகழாமல் தடுப்பதற்காக, கிணறு உள்ள முற்றத்தை நோக்கியுள்ள குகையின் சுவர்களில் மெல்லிய களிமண் பூச்சு தரப்படுகிறது. பிறகு கிணற்றின் அடிப்பகுதியில் செங்கல்கள் பதிக்கப்பட்டு, நீர் கசிவது தடுக்கப்படுகிறது. இவ்வாறு தோண்டப்படும் ஒவ்வொரு பள்ளத்திலும் 8 முதல் 12 குகை வீடுகள் குடையப்படுகின்றன. இவ்வாறு குடைந்து எடுக்கப்படும் மண் மஞ்சள் பழுப்பு நிறத்தில் உள்ள மிருதுவான களிமண் ஆகும். இந்த மண் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ற மிகச்சிறந்த கட்டுமானப் பொருளாகும்.