துனீசிய அணியின் அலி பௌம்னியேல் ஜூன் 14ம் நாள் பந்து காப்பாளர் கோல் கீப்பராக களத்தில் இறங்கினால், உலக்கோப்பையில் பங்கேற்ற மிக அதிக வயதானவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். இதற்கு முன்பு 1990ல் கேமரூன் நாட்டு ரோஜர் மில்லா தனது 40வது வயதில், 40 வயது 39 நாட்கள் ஆன நிலையில் பங்கேற்றதே இதுவரையில் மிக வயதானவர் என்றாக பதிவாகியிருக்கிறது, ஜூன் 14ம் நாள் சவுதி அரேபியாவுக்கு எதிராக துனீசியாவின் அணியில் அலி பௌம்னியேல் விளையாடும்போது அவருக்கு வயது 40 ஆண்டுகள், 62 நாட்கள். ஆக உலக்கோப்பையில் விளையாடிய மிக அதிக வயதுடையவராக அவர் பதிவாவார்.
உலகக் கோப்பையை வென்றால் தன் நாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 500 மில்லியன் வோன் வெகுமதி அளிக்கவுள்ளதாக தென்கொரிய கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. அதாவது 5 லட்சத்து 26 ஆயிரம் அமெரிக்க டாலர், இந்தியப் பணத்தில் இரண்டே கால் கோடி ரூபாய். இந்த தொகை அதிகம் என்று நினைக்க வேண்டாம். இதைவிட அதிகமாக இங்கிலாந்தும், அதிஅவிட அதிகமாக ஸ்பெயினும், தங்களது வீரர்கள் உலக்கோப்பையை வென்றால் வாரி கொடுப்பதாக அறிவித்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் ஸ்பெயின் நாட்டு ரஃபேல் நாடல் 1- 6, 6- 1, 6- 4, 7- 6 என்ற செட் கணக்கில் ஸ்விஸ் நாட்டு ரோஜர் ஃபெடரரை வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். கிராண்ட் ஸ்லாம் எனப்படும் உலகின் முக்கிய கோப்பைகளில் ஒன்றான் இந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை கடந்த ஆண்டும் ரோஜர் ஃபெடரரை வென்று ரஃபேல் நாடல் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.மிகக் குறைந்த வயதில் இந்த பிரெஞ்சு ஓபன் போட்டியை தொடர்ந்து இரண்டு முறை வென்றவர் என்ற பெருமை இதன் மூலம் ரஃபேல் நாடலுக்கு கிடைத்துள்ளது. அதேபோல் க்ளே கோர்ட் எனப்படும் புற்களற்ற களிமண் ஆடுகளத்தில் தொடர்ந்து 60 பந்தயங்களை வென்றுள்ளார் ரஃபேல் நாடல்.
மறுபுறத்தில் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இன்னமும் முதலிடத்தில் நிற்கிறார் ரோஜர் ஃபெடரர். இரண்டாவது இடத்தில் ரஃபேல் நாடல். 3வது இடம் டேவிட் நல்பாண்டியன். 4, 5, 6 ஆகிய இடங்கள் முறையே இவான் லுயிசிபிச், ஆன்டி ராடிக், நிக்கோலாய் டேவிடென்கோ ஆகியோர் வகிக்கின்றனர்.
பெண்கள் தரவரிசை பட்டியலில், பிரன்ஸ் நாட்டு அமேலி மௌரேஸ்மோ முதலிடத்தில் பெல்ஜிய நாட்டின் கிம் க்ளைஸ்டர்ஸ் இரண்டாவது இடம் ஜஸ்டின் ஹெனின் ஹார்டின் மூன்றாவது இடம் வகிக்கின்றனர். சீனாவின் லி நா 32வது இடம், பெங் ஷுவேய் 44வது இடம் பெற்றுள்ளனர். இந்தியாவின் சானியா மிர்ஸா 41வது இடத்தை பெறுகிறார்.
|