• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-27 09:43:20    
குகை வீடுகளின் வடிவமைப்பு

cri

இவ்வாறு பள்ளம் தோண்டப்பட்டு, குடையப்படும் குகைவீடுகளுக்கு உள்ளே எப்படிப் போவது? முற்றத்தின் மூலையில் உள்ள ஒரு குகையை ஒட்டி படிக்கட்டுகள் கட்டப்பட்டு, அதில் ஏறி வெளி உலகைப் பார்க்கின்றனர் இந்த மக்கள். பள்ளத்திற்குள் இறங்கி, முற்றத்தில் நின்று பார்த்தால் நடுவிலே தெரியும் பெரிய குகை தான் முதியவர்களின் படுக்கை அறை. இது மற்றவர்கள் வந்து உட்கார்ந்து உரையாடும் அறையாகவும் பயன்படுகிறது. அந்த நடுக்குகையின் இரு புறங்களிலும் உள்ள சிறு குகைகள் குடும்பத்தின் மற்றவர்களுக்கு படுக்கை அறைகளாகின்றன.

ஒவ்வொரு குகையிலும் மண்செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட 'காங்' (Kang) எனப்படும் சூடுபடுத்தக்கூடிய படுக்கை உள்ளது. மரச்சன்னலுக்கு அருகே கட்டப்படும் இந்தப் படுக்கை ஒரு சிறு அடுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த அடுப்பு சமைப்பதற்கும், குளிர் காலத்தில் படுக்கையைச் சூடாக்கவும் பயன்படுகிறது. சமைப்பதற்கும், தானியங்களை சேகரித்து வைக்கவும், கோழிகளை அடைக்கவும் தனித்தனியாகக் குகைகள் உருவாக்கப்படுகின்றன.

குகைகளின் கூரை தட்டையான சமதளமாக்கப்பட்டு, அது தானியங்களை உலர்த்தும் களமாகவும் பயன்படுகிறது. கூரைகளின் விளிம்புகளில் 30 முதல் 50 செ.மீ. உயரத்திற்கு குட்டையான சுவர்கள் எழுப்பப்படுகின்றன. இந்தச் சுவர்கள் மழை நீர் பள்ளத்திற்குள் வந்து விழாமல் தடுக்கின்றன. மேலும், மேலே தரையில் நடந்து செல்லும் மக்கள் தடுமாறி பள்ளத்திற்குள் விழுந்து விடாமாலும் தடுக்கின்றன. இந்தச் சுவர்களில் சிறுசிறு துளைகள் போடப்பட்டு, அவற்றில் ஓடு பதிக்கப்படுவதால், மழை நீரால் குகைச்சுவர்களில் ஈரக்கசிவு ஏற்படுவதில்லை. மேலும், சுவர் நெடுகிலும் புதர் போன்ற செடிகள் வளர்க்கப்பட்டு, அவை அலங்காரப் பொருளாக மட்டுமல்ல, மண் அரிமாணத்தை தடுப்பதற்கும் பயன்படுகின்றன. ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் குகைச் சுவர்கள் செப்பனிடப்பட்டு, வர்ணம் பூசப்படுகிறது.

இந்தக் குகை வீடுகள் குளிர் காலத்தில் கதகதப்பாகவும், கோடை காலத்தில் சில்லென்றும் இருக்கின்றன. மேலும், வெளி உலகின் இரைச்சலும், வேகமாக வீசும் காற்றும் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. குகையில் வசிப்பவர்கள் முற்றத்திலேயே மாதுளை, பாப்ளர் போன்ற மரங்களை வளர்ப்பதால், அவற்றின் கீழே அமர்ந்து மெல்லிய காற்றை அனுபவித்த படி, மேலே தெரியும் நீல வானத்தை அண்ணாந்து பார்த்து ஆனந்திக்கின்றனர். 1980கள் வரையிலும் ச்சிசங்சுன் (XIZHANGCUN) பகுதியில் இத்தகைய 3600 குகை வீடுகள் இருந்தன. இப்போது நவீனக் கட்டிடங்களினால் இந்த எண்ணிக்கை குறைந்து விட்டது. எனினும், மியோஷங் கிராமத்தின் மூன்றில் இரு பங்கு மக்கள், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் குகை வீடுகளில் தான் வசிக்கின்றனர்.