உலகின் 7 விழுக்காட்டு நீர் வளம் சீனாவில் உள்ளது. உலகின் 21 விழுக்காட்டு மக்கள் சீனாவில் வாழ்கின்றனர். மக்கள் தொகையின் தொடர்ந்த அதிகரிப்பு மற்றும் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியின் விளைவாக, சீனாவின் நீர் வளம் மேலும் குறைந்து விடும். எனவே, கடந்த சில ஆண்டுகளாக, நீர் வளத்தை சிக்கனமாகப் பயன்படுத்தும் ஒரு சமூகத்தை உருவாக்கும் கருத்தை, சீன அரசு முன்வைத்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், நீர் வளச் சிக்கனத்தில் பல்வேறு இடங்களின் நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
தாங் சான், வட சீனாவிலுள்ள முக்கிய தொழில் நகரமாகும். அதன் நிலக்கரி, உலோகவியல், பீங்கான் பாண்டம் முதலிய தொழில்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஆனால், இந்தத் தொழில்கள் அனைத்துமே நீரைப் பெருமளவில் பயன்படுத்துகின்றன. நீரைச் சிக்கனப்படுத்தும் பொருட்டு, நீர் வளச் சிக்கன நகரைக் கட்டும் குறிக்கோளை தாங் சான் நகரம் முன்வைத்துள்ளது. கழிவு நீரைக் கையாளும் விகிததையும், பயன்பாட்டு விகிதத்தையும் உயர்த்துவது, இதில் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
தாங் சான் நகரில், கே லுவான் நிலக்கரி குழுமத்தைச் சேர்ந்த 11 நிலக்கரி சுரங்கங்கள் ஆண்டு தோறும் வெளியேற்றும் கழிவு நீர், 10 கோடி கன மீட்டரைத் தாண்டியுள்ளது. இந்தக் கழிவு நீரை மீண்டும் பயன்படுத்தும் பொருட்டு, 1992ம் ஆண்டில் இக்குழுமம், கழிவு நீர் கையாளும் ஆலையை தொடங்கியது. அதன் துணைத் தலைவர் கோ ஹேய் எமது செய்தியாளரிடம் பேசுகையில், கையாளப்படும் நீரை பசுமைமயமாக்கத்திற்காகப் பயன்படுத்துவதால், நீர் வளத்தின் பயன்பாட்டு விகிதம் பெருமளவில் உயரும் என்றார்.
ஹுவா மே பீங்கான் பாண்ட தொழில் நிறுவனம், தாங் சான் நகரில் அமைந்துள்ள இன்னொரு முக்கிய தொழில் நிறுவனமாகும். நீர் பயன்பாட்டு விகிதத்தை உயர்த்தும் பொருட்டு, இந்நிறுவனம், கழிவு நீர் சுத்திகரிப்புக் கருவியை வாங்க, 2 லட்சம் யுவான் ஒதுகீடு செய்துள்ளது. இக்கருவி, நாள்தோறும் 1000 டன் கழிவு நீரைச் சுத்தம்படுத்த முடியும். சுத்திகரிக்கப்பட்ட நீர் முழுவதையும் மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்துவதால், தொழில் நிறுவன கழிவு நீரை வெளியேற்ற வேண்டியதில்லை.
தற்போது, தாங் சான் நகரின் கழிவு நீர் கையாளும் விகிதம், 65 விழுக்காடாகும். சீனாவின் பல நீர் சிக்கன நகரங்களுக்கு தாங் சான் ஒரு முன்மாதிரியாகிவிட்டது.
சீனாவில் நீர் சிக்கனப் பிரச்சினை மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏன்? சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.
தற்போது, சீனாவின் நீர் மூலவள அளவு, 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி கன மீட்டராகும். இது, உலகில் 6வது இடம் வகிக்கிறது. ஆனால் தனிநபர் நீர் வள அளவு, சுமார் 2200 கன மீட்டர் தான். உலகின் தனிநபர் நிலையில், இது 30 விழுக்காடு மட்டுமே.
இந்நிலைமையில், நீர் வளத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது, நீர் வளத்தின் பயன்பாட்டு விகிதத்தை உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சீனா முன்வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நீர்ப் பயன்பாட்டு உரிமையை மாற்றுவது என்பது, சந்தை வழிமுறையில் நீர் வளத்தைத் திரட்டும் நடவடிக்கையில் சேர்க்கப்பட்டது.
2003ம் ஆண்டின் முதல், நிங் சியா ஹுவே இன தன்னாட்சி பிரதேசத்திலும், உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்திலும், நீரைப் பயன்படுத்தும் உரிமையை மாற்றும் பணி தொடங்கியது. அதாவது, தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் முதலீடு செய்து, வேளாண் துறையின் நீர் சிக்கன பயன்பாட்டு சீர்திருத்த பணியைக் கட்டியது. வேளாண் துறையில் சிக்கனப்படுத்தப்படும் நீர், தொழில் துறையின் நீர் பயன்பாட்டுத் தேவையை நிறைவு செய்ய பயன்படுத்தப்படும். இது குறித்து, சீன நீர் சேமிப்புத் துறையின் துணை அமைச்சர் ஹு சி யீ கூறியதாவது:
இச்செயல், நீர் பயன்பாட்டு கட்டமைப்பின் சீர்திருத்தத்தையும், நகரங்களுக்கும் கிராமங்களுக்குமிடையிலும், தொழில் துறைக்கும் வேளாண் துறைக்குமிடையிலும் நீர் மூலவளத்தின் தொடர்பை உருவாக்கி, நீர் மூலவளத்தின் பயன்பாட்டு விகிதத்தை உயர்த்தி, அந்தந்தப் பகுதிகளின் சமூக பொருளாதார வளர்ச்சியின் நீர்த்தேவையை நிறைவு செய்துள்ளது என்றார் அவர்.
2010ம் ஆண்டு வரை, நீர் பயன்படுத்தும் உரிமையின் மாற்றத்தின் மூலம், நிங் சியா ஹுவே இன தன்னாட்சி பிரதேசம் மற்றும் உள்மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்தின் வேளாண் துறையிலிருந்து, சுமார் 60 கோடி கன மீட்டர் நீர் தொழில் துறைக்கு மாற்றப்படலாம்.
தொழில் துறைக்கும் வேளாண் துறைக்குமிடையே நீர் பயன்படுத்தும் உரிமையை மாற்றிக்கொடுப்பது, குறிப்பிட்ட அளவில் சீன வேளாண் துறையில் நீரைப் பெருமளவில் வீணாக்கும் பிரச்சினையைத் தீர்த்துள்ளது. ஆனால், வேளாண் துறையில் நீர் பயன்பாட்டை குறைக்க, அடிப்படையில், வேளாண் துறையின் அறிவியல் தொழில் நுட்பத்தை உயர்த்த வேண்டும். இதனால், பாசன முறையை மாற்றுவது, வேளாண் துறையில் நீர் வளச் சிக்கனத்தை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானது.
சின்சியாங் உய்கூர் இன தன்னாட்சி பிரதேசத்தில் பெரிதும் வறட்சியே நிலவுகிறது. அதன் வேளாண் துறைக்கு நீர் பற்றாக்குறையாக இருக்கிறது. சின்சியாங்கின் ஷி ஹே ச்சி நகரத்தில் நீர் சிக்கனப்பணிக்குப் பொறுப்பான சூ சுன் எமது செய்தியாளரிடம் பேசுகையில், 1996ம் ஆண்டு முதல், இந்நகரம், பணப்பயிர் சாகுபடிக்காக, சொட்டு நீர்ப் பாசன நுட்பத்தை ஆராய்ந்து பயன்படுத்த, நீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது என்றார். அவர் மேலும் கூறியதாவது:
தற்போது, ஷி ஹே ச்சி நகரத்தில், சிக்கனமான நீர்ப் பாசனம் நடைமுறைப்படுத்தப்படும் நிலப்பரப்பு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டரை எட்டியுள்ளது. இதில் 60 விழுக்காட்டு நிலப்பரப்பில் இந்த முன்னேறிய சொட்டு நீர்ப் பாசன நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கூறிய நடவடிக்கைகளை தவிர, நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவது, மற்றும் நீர் வளத்தைப் பாதுகாப்பதைக் குறிக்கோளாக கொண்ட நீர் விலை சீர்திருத்த கொள்கையை, சீன அரசு வகுத்து, நீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, 300க்கு கூடுதலான நகரங்களில் கழிவு நீர் கையாளும் கட்டணத்தை வசூலித்துள்ளது. அத்துடன் சீன நீர் வளச் சேமிப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் பேசுகையில், நீண்டகாலத்தில் பார்த்தால், நீர் மூலவளத்தின் நிலைமையின் படி, சமூக-பொருளாதார வளர்ச்சியை அறிவியல் முறையில் வரைந்து, நீர் வளம் அதிகமான வட்டாரங்களிலும், பற்றாக்குறையான வட்டாரங்களிலும் வேறுபட்ட பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி, சமூக-பொருளாதார வளர்ச்சியை நீர் வளத்திற்கு ஏற்றதாக பொருத்திக்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.
|