• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-05 17:47:00    
அழியாப் புகழ் பெற்ற அழிந்த காதல் 1

cri

மண்ணான்ட மன்னனுக்கு ஒரு பெண்ணை ஆளக்கூடிய அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது. சர்வ வல்லமை படைத்த ஒரு சக்கரவர்த்திக்கு இந்த அவலம் ஏற்பட்டது. சீன தேசத்தில் அதிர்ஷ்டம் இல்லாத அந்த மன்னனின் பெயர் ச்சியன்லாங். கி. பி. 1736 முதல் 1796 வரை சீனாவை ஆண்ட நான்காவது ச்சிங் வமிசப் பேரரசன். சொர்க்கத்தின் புதல்வன் என்றழைக்கப்பட்டான். 18ஆம் நூற்றாண்டில் பலம் வாய்ந்த மஞ்ச்சு பேரரசை அடக்கி ஆண்டான். ஆனாலும் அவனால் ஒரு பெண்ணை அடக்கி ஆள முடியாமல் போனது. பெய்ச்சிங் நகர் முழுவதும் அவன் கட்டிய ஏராளமான கல்மண்டபங்கள் இன்னமும் பரவிக்கிடக்கின்றன. அவன் ஒரு கவிஞன். 42000க்கும் கூடுதலான கவிதைகளை எழுதியிருக்கிறான். அவை இன்னறைக்கும் கல்வெட்டுக்களாக ச்சியன்லாங்கின் கலை உணர்வையும் கோயில்களைச் செப்பனிட்ட வரலாற்றையும் பறைசாற்றி கொண்டிருக்கின்றன.

கவிஞன், போர்வீரன், அறிஞன், கலைகளின் புரவலன்—இவ்வளவு புகழ்மிக்க அவனுடைய வாழ்க்கையில் அழியாக்கறையாக அமைந்து விட்டாள் ஒரு பெண். இத்தனைக்கும் அவனுக்கு பெண்களுக்குப் பஞ்சமில்லை. அதிகாரபூர்வமாக இரண்டு மனைவிகள். ஒருத்தி பெயர் ச்சியாவ் ச்சியன். இன்னொருத்தி பெயர் ச்சியாவ் யி. முதல் மனைவியை மிகவும் நேசித்தான். ஆனால் 36 வயதிலேயே அவள் இறந்து போனாள். இரண்டாவது மனைவி கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு, தலையை மொட்டையடித்து துறவியாகப் போன போது, 1765இல் அவளைப் பைத்தியம் என்று பட்டம் கட்டி விரட்டி விட்டான். இரண்டு மனைவிகள் போதாது என்று ஏகப்பட்ட வைப்பாட்டிகள். அதுவும் போதாது என்று அரண்மனையில் வேலை செய்த சேடிப் பெண்களின் தொடுப்பு. இவர்களின் மூலம் ச்சியன்லாங் பெற்றெடுத்த குழந்தைகளின் எண்ணிக்கை 27. இவர்களில் 17 மகன்கள்—இந்த மகன்களில் 10 மகன்கள்தான் உயிர்பிழைத்தனர். 10 மகள்கள்—இவர்களில் 5 புதல்விகள்தான் கடைசிவரை உயிரோடு இருந்தனர்.

இரண்டாவது மனைவியுடன் சண்டையிட்டு, அவளைப் பைத்தியமாக்கி ச்சியன்லாங் விரட்டியதற்குக் காரணம்—ஒரு பெண். அவள் சாதாரணப் பெண்ணல்ல. வரலாற்றில் அவளை 'வாசனை வீசும் வைப்பாட்டி' என்கிறார்கள். அவளுடைய பெயர் ச்சியாங் பெய். போரில் அவன் வென்ற எண்ணற்ற பரிசுப் பொருட்களில் ஒன்றுதான் வாசனை வீசும் வைப்பாட்டியான அழகி ச்சியாங் பெய்.

1741ஆம் ஆண்டில் சிஞ்ஜியாங் மாநிலத்தில் அவள் பிறந்த போது சூட்டப்பட்ட பெயர். அச்சு. குழந்தையாக இருந்த போதே அதியற்புத அழகுடன் திகழ்ந்தாள். ஆவளுடைய உடம்பில் இருந்து ஒரு விதமான நறுமணம் கமழுமாம். அதற்கு மயங்கிச் சாயாத ஆண்களே இல்லையாம். 14 வயதான போது அலி அர்ஸ்லான் என்பவனை மணந்தாள். அவனும், அவனுடைய சகோதரனும், 1756இல் மஞ்சுப் பேரரசிடம் இருந்து பிரிந்து சென்று சுதந்திரமடைந்த ஒரு ஸூஃபி தேசத்திற்கு சிற்றரசர்களாக இருந்தனர். 1759இல் அவர்கள் இருவரும் பிடிபட்டதும், தலை வெட்டிக் கொல்லப்பட்டனர். அழகிய, வாசனை வீசும் இளம் விதவை அச்சு பற்றி கேள்விப்பட்ட ச்சியன்லாங், அவளை 1759இல் சிறையெடுத்தான். யுவான்மிங்யுவான் என்ற இடத்திற்குத் தூக்கிச் சென்று, ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட ஒரு மாளிகையில் வைத்தான். சில தினங்களில் போரில் தான் வென்று வந்த பரிசுப் பொருள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக, ச்சியங் பெய் எனப்படும் அச்சு அடைத்து வைக்கப்பட்ட மாளிகைக்கு ச்சியன்லாங் சென்றான். அவளைக் கண்டதும் காதல் வயப்பட்டான். அல்ல அல்ல, அவளுடைய உடம்பில் இருந்து கிளர்ந்தெழுந்த வாசனை மன்னனை மயக்கியது. மோகத்தீ மூண்டது. அழகியை நெருங்கினான். அவளோ ஒதுங்கினாள். பாராளும் மன்னனை பதின்பருவப் பாலைவனப் பேரழகிக்கு பிடிக்கவில்லை. மன்னன் ச்சியன்லாங் பிடிவாதமாக நெருங்கிய போது, அவன் கட்டிப்பிடிக்க முற்பட்ட வேளையில், ஒரு குறுவாளால் அவனைக் குத்தினாள்.