தன்னை விட 30 வயது குறைவான ஒரு பெண்ணை அவனால் அடக்க முடியவில்லை. நாற்பது வயதுக்கு மேல் ஆண்கள் எல்லோருக்குமே ஏற்படக் கூடிய ஒரு நப்பாசை அவனை வாட்டியது. எல்லா செல்வந்தர்களையும் போல நகைகளை வாரி இறைத்தான். மாடமாளிகைகளைக் கட்டிக்கொடுத்தான். இப்போது பெய்ச்சிங் நகரில் ச்சின்ஹுவாமென் வாசலுக்கு அருகில் உள்ள பிரம்மாண்டமான மாளிகை அவளுக்காக அவன் கட்டியது. அவளை அங்கே அடைத்து வைத்தான். அவள் அங்கிருந்து கொண்டே மற்ற முஸ்லிம்கள் நமாஸ் படிப்பதை பார்க்கவும், கேட்கவும் ஏற்பாடு செய்தான். ஆனால் அவளை வெளியே விடவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, நான்காண்டுகள் மன்னனுடன் படுக்க மறுத்து ச்சியாங் பெய் காட்டிய முரட்டுப் பிடிவாதம், அரண்மனையில் இருந்த மற்ற பெண்களை ஆத்திரமூட்டியது. இவளை எப்படியாவது தீர்த்துக்கட்டிவிட வேண்டியதுதான் என்று மன்னனின் தாயும், இரண்டாவது மனைவியும் சதித்திட்டம் போட்டனர். கடைசியில் அவள் செத்தாள். அவளை 1764இல் கழுத்தை நெரித்துக் கொன்றார்களா? அல்லது அவளாகவே தூக்குமாட்டி செத்தாளா? என்பது புரியாத புதிராக உள்ளது. ஆனால் அவள் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்தாக உள்ளது. ஏனென்றால், மன்னனின் தாய்க்கு வைப்பாட்டிகளைக் கொன்ற அனுபவம் உள்ளது.
ச்சியன்லாங், ஒருமுறை தனது தந்தைக்கு பிரியமாக இருந்த ஒரு வைப்பாட்டியைக் கண்டு மயங்கினான். ஒரு நாள் அவள் இருந்த அறைக்குச் சென்று, பின்னாலிருந்து கட்டிப்பிடித்து, அவளுடைய கண்களை கைகளால் மறைத்து, "யார் என்று சொல் பார்க்கலாம்" என்று காதல் விளையாட்டு விளையாடினான். திகைத்துப் போன அந்தப் பெண், கோபத்தில் கொதித்துப் போய், பளார் என்று ச்சியன்லாங் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். இதைக் கேள்விப்பட்ட இளவரசனின் தாய், அவளைச் சவுக்கால் அடித்து, கழுத்தை நெரித்துக் கொன்றாள். இந்தத் தண்டனையை இளவரசனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் அவன் உடனே தனது விரலைக் கடித்து, பீறிட்டு வந்த இரத்தத்தில் ஒரு சொட்டை அவளுடைய கழுத்தில் வைத்தான். இது அவள் மீதிருந்த அன்பினால் அல்ல. அடுத்த பிறவியில் அவளை அடையாளம் கண்டு, பெண்டாளுவதற்கு ஒரு வசதியாக கழுத்தில் ரத்தத்திலகம் இட்டான்.
இப்படி பெண்களை மயக்க முயன்று தோற்ற மன்னனுக்கு ஒரு ஆண்காதலன் இருந்ததாகவும் சொல்கிறார்கள். அறுபது வயதைத் தாண்டிய பிறகு, தனது மெய்க் காவலர்களில் எடுப்பாக இருந்த ஒரு 25 வயது இளைஞன்மீது காதல் கொண்டு அவனுக்கு பல சலுகைகள் காட்டி, பதவி உயர்வு அளித்தான். தனது மகன்களில் ஒருத்தியை கட்டிவைத்தான். அவன் மூலமாக மன்னனுக்கு பேரக்குழந்தைகள் பிறந்தது. ஆனால் ச்சியான்லாங் செத்ததுமே அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு, கொல்லப்பட்டான். அவனுக்கு மன்னன் கொடுத்த எல்லாச் சொத்துக்களும் கட்டித்தந்த மாளிகையும் பறிமுதல் செய்யப்பட்டன். அந்த மாளிகைதான் இப்போது பெய்ச்சிங்கில் உள்ள கோங் இளவரசர் மாளிகை.
|